பேட்டரி வாகனங்கள் பெட்ரோல் வாகனத்திற்கு மாற்றாகுமா..? தில்லைநகர் சபரி மெக்கானிக் விளக்கம்!

0

பேட்டரி வாகனங்கள் பெட்ரோல் வாகனத்திற்கு மாற்றாகுமா..?
தில்லைநகர் சபரி மெக்கானிக் விளக்கம்!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பெட்ரோல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் நடுத்தர மக்களின் மாதாந்திர இரு சக்கர வாகன பெட்ரோல் செலவு கூடிக் கொண்டே செல்கிறது. மேலும் பெட்ரோல் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது. இவ்விரு காரணங்களால் உலகம் முழுக்க பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக பேட்டரி வாகனங்களின் மீது கவனம் திரும்பி வருகிறது.

இந்தியாவில் உள்ள இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள், பேட்டரி வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. மத்திய அரசும் பேட்டரி வாகனங்கள் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இன்று பேட்டரி வாகனங்களின் விலை ரூ.50,000 முதல் ரூ.2,00,000 வரை உள்ளது. பெட்ரோல் வாகனங்களின் விலையேற்றத்தால் பலரும் பேட்டரி வாகனங்கள் வாங்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். என்றாலும் பேட்டரி வாகனங்கள் குறித்த புரிதல்கள் இருசக்கர வாகன பழுதுநீக்குவோரிடம் கூட இல்லை என்பது தான் இன்றைய நிலை.

வீடியோ லிங்:

திருச்சி, தில்லைநகரில் 47 வருட அனுபவம் கொண்டு இயங்கக்கூடிய சபரி மெக்கானிக் ஷாப். இதன் உரிமையாளரான மெக்கானிக் சபரி (60 வயது) இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்குவதில் சிறப்பான அனுபவம் கொண்டு செயல்படுபவர். பெட்ரோல் வாகனம், பேட்டரி வாகனம் ஆகிய இரு வாகனங்களை ஒப்பிட்டு அவர் கூறிய விபரங்கள் இங்கே.

உரிமையாளர் சபரி
உரிமையாளர் சபரி

பெட்ரோல் வாகனம்

பொதுவாக பெட்ரோல் வாகனத்தின் மிகப்பெரிய பலவீனம் என்பது இன்றைய பெட்ரோல் மீதான விலை உயர்வு. பெட்ரோல் வாகனத்தை பொறுத்தவரை முறையான பராமரிப்பு தேவை. சரியான நேரத்திற்கு ஆயில் மாற்ற வேண்டும்.

மைலேஜ் அதிகம் பெற, வண்டியை சரியாக பராமரிக்க வேண்டும் மற்றும் டயர்களில் காற்றின் அளவு சரியான அளவுகளில் (முன் சக்கரத்தில் 30 பாயிண்ட், பின் சக்கரத்தில் 40 பாயிண்ட்) இருக்க வேண்டும். சிலர் க்ளச்சையும், ப்ரேக் கையும் பிடித்துக் கொண்டே ஆக்சிலேட்டரை திருகுவார்கள். அப்படி இயக்கினாலும் மைலேஜ் குறையும். முறையான பராமரிப்பு மட்டுமே பெட்ரோல் வாகன ஆயுளை முடிவு செய்யும்.

பேட்டரி வாகனம்
“பேட்டரி வாகனத்தை பற்றி பெரும்பான்மையான மெக்கானிக்களுக்கே தெரிவது கிடையாது என்பது தான் உண்மை நிலை. எங்களது மெக்கானிக் சங்கம் சார்பில் பேட்டரி வாகனங்கள் குறித்து மெக்கானிக்குகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறோம்.

பேட்டரி வண்டிகளைப் பற்றிய விளக்கத்தை சரியாக யாரும் சொல்வது கிடையாது. ஏன் வண்டி விற்பனை செய்யும் ஸ்டோர் ரூம்களில் கூட அதற்கு சரியான விளக்கம் கிடையாது. பொதுவாக பேட்டரி வாகனங்கள் எடை குறைவு. ஓட்டுறது ஈசி. சத்தமில்லை. புகை இல்லை. சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது. இன்சூரன்ஸ், வாகன பதிவு தேவை இல்லை. பயன்பாட்டினைப் பொறுத்து பேட்டரி மாற்ற வேண்டி இருக்கும். ரிமோட் லாக், USB charger உள்ளது. ரிவர்ஸ் ஓட்டலாம். ரிவர்ஸ் எடுக்கும் போது பீப் சவுண்ட் என சில அம்சங்கள் பேட்டரி வாகனங்களில் உண்டு. நாம் என்ன வேகத்தில் ஓட்ட வேண்டும் என செட்  (Eco speed, Sport speed)  செய்து கொள்ளலாம். இது பேட்டரியின் மின்பயன்பாட்டை தீர்மானிக்கிறது. சர்வீஸ் செலவோ, இன்ஜின் பராமரிப்பு செலவோ இல்லை. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் நெடுநேரம் காத்திருப்பதால் எரிபொருள் வீணாகும். மின் வாகனத்தில் அக்கவலை இல்லை.

50 கி.மீ பயணத்திற்கு சராசரியாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 (பெட்ரோல் விலையேற்றத்திற்கு ஏற்ப மாறுபடும்) செலவாகும். மின் வாகனத்தில் சராசரியாக ரூ.25 மட்டுமே (பேட்டரிக்கு ஏற்ப ரூ.5 கூடுதலாகவோ, குறைவாகவோ) செலவாகிறது. இப்படி பெட்ரோல் வாகனத்துடன் ஒப்பிடும் போது பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தாலும் பேட்டரி வாகனங்கள் வாங்குவதிலும் பலவித குறைகள் உள்ளன.

வீடியோ லிங்:

குறைபாடுகள்
குறிப்பாக வாகனத்தில் பொறுத் தப்பட்டிருக்கும் பேட்டரி அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே வரும். பின்னர் ஒரே நேரத்தில் ரூ.20,000 செலவில் பேட்டரி மாற்ற வேண்டி வரும். பெட்ரோல் வாகனங்களிலோ பராமரிப்பு சரியாக இருந்தால் பழுதுநீக்கும் செலவு குறையும். பேட்டரி சார்ஜ் செய்யும் வசதி எல்லா இடத்திலும் இல்லை. நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதல்ல. தண்ணீர் தேங்கும் சாலைகளில் இயக்குவது சிரமம். வாகன பதிவு அதாவது வாகன எண் இல்லாததால் திருடு போனால் கண்டுபிடிக்க முடியாது. காவல்நிலையத்தில் புகார் தர முடியாது. இப்படி பல்வேறு குறைபாடுகள் பேட்டரி வாகனங்களில் உள்ளது.

-இப்ராகிம்

Leave A Reply

Your email address will not be published.