பத்திரிகை ஆசிரியர் லேனா தமிழ்வாணன் உடன் நேர்காணல்

0
1

ஐயா உங்களது பூர்வீகம் எது?

தேவகோட்டை எனது பிறப்பிடம்.

திருச்சிக்கும் உங்களுக்குமான உறவு?

2

எனக்கும் திருச்சிக்கும் நெருங்கிய உறவு உண்டு. “கிராம ஊழியன்”  என்ற இதழை வள்ளிக்கண்ணன் நடத்தி்க்கொண்டிருந்த போது உதவி ஆசிரியராக எனது அப்பா(தமிழ்வாணன்) சேர்ந்தார்கள். தில்லைநகரில் எனது தந்தையின் உடன்பிறந்த திரு.வைரவன் அவர்கள்,(எனது பெரியப்பா) மற்றும் மைத்துனரும் இங்குதான் இருக்கிறார்கள்.

பெற்றோர் பெயர்?

தந்தை தமிழ்வாணன், தாயார் மணிமேகலை.

உங்கள் உடன்பிறந்தவர்கள்?

எனக்கு அக்கா ஒருவர், தம்பி-1, தங்கை-1 மொத்தம் நாங்கள் நால்வர். நாங்கள் நால்வரும் நன்றாக எழுதக்கூடியவர்கள். ஆனால் நான் மட்டுமே இதனை தொழிலாக எடுத்துக்கொண்டேன். எனது தம்பி தொழில்கடிதம் எழுதினால்க்கூட அவ்வளவு ஆணித்தரமாகவும், அழகாகவும் எழுதுவார். குலவித்தை கல்லாமல் பாகுபடும் என்று ஔவை சொன்னது எங்களது குடும்பத்திற்கு பொருந்தும்.

உங்களது கல்வி பற்றி?

நான் எம்.ஏ. தமிழ் படித்தேன். இதழியல் பட்டயப்படிப்பு படித்தேன்.  எனது இலக்கிய பணியைப் பாராட்டி அமெரிக்க மேரிலேண்ட் பல்கலைக்கழகம் எனக்கு டி.லிட் பட்டம் (மதிப்புரு முனைவர்) கொடுத்தது.

ஒரு தமிழ்துறையிலிருந்து இதழியல் துறைக்கு எப்படி தடம் பதித்தீர்கள்?

எனக்கு கிடைத்த அந்த மதிப்புரு முனைவர் பட்டம் எனக்கு ஒரு பெரிய தூண்டுதல். மேலும் நான் இலக்கிய சூழலில் வளர்ந்தேன். எனது தந்தையார் ஒரு பத்திரிக்கை ஆசிரியர். எனது தாயாரும் சிறந்த படைப்பாளி. “உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர்” என்ற நாவலை எழுதியவர். அருள், திருவருள் என்ற இரு ஆன்மீக இதழை நடத்தியவர். அதனால் சிறந்த இலக்கிய சூழலில் வளர்ந்தவன் நான். அதனால் பியூசி படிக்கும்போதே நான் எனது தந்தையார் நடத்திய “கல்கண்டு” பத்திரிக்கையில் எழுதக்கூடிய வாய்ப்பை தந்தார். 1971-லிருந்து தற்போது 2021 வரை எழுதிக்கொண்டு இருக்கிறேன். இந்த நேரத்தில் நேயர்களாக உங்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஏறத்தாழ 50 ஆண்டுகள். அதாவது பொன்விழாக்கண்ட கிழவன் நான்.

சக்தி மாத இதழ், குழந்தைகளுக்கான மாத இதழ், ஜில்ஜில் பதிப்பகம் இவையெல்லாம் எப்படி?

இந்த பெருமைகளெல்லாம் எனது தந்தையையே சாரும். அவர்தான். தனது குலத்தொழிலான லேவாதேவி பிசினசை வெறுத்து, இலக்கியத்துறையில் ஒளிவிடவேண்டும் என்ற முனைப்புடன் சக்தி வை கோவிந்தன் ஐயா அப்பாவை ஆதரித்து, அணில் பத்திரிக்கை ஆரம்பிக்க காரணமாக இருந்தார். அதன் பின் ஜில், ஜில் போன்ற தனிப்பட்ட புத்தகங்களை வெளியிடக் காரணமாக இருந்தார்.

 “எழுத்து என்பது மனதை நிரப்பும், வயிறை நிரப்பாது”

என்று எனது அப்பா சொல்வார்.  ஆனால் அந்த தொழிலைத்தான் இறுதிவரை பார்த்தார்.

உங்கள் வாழ்க்கைத்துணை பற்றி?

அவர்கள் இல்லத்தரசி, 1977-ல் மணப்புரிந்தேன். அவர்கள் எனக்க தூரத்து சொந்தம் கூட. அவர்கள் பெயர் ஜெயம். எனது எழுத்துப்பணிக்கு உறுதுணை இதுவரை இனிமையாகவே இல்லறம் சென்று கொண்டிருக்கிறது. எனக்கு இரண்டு மகன்கள், ஒரு பேரன், மூன்று பேர்த்திகள். அனைவரும் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் வளர்கின்றனர்.

எழுத்தாளனுக்கு மட்டும் மனம் அமைதியாக இருந்தால்தான் எழுத முடியும். அதனை அவர்கள் மிகச்சரியாக செய்வார். எனது எழுத்தின் முதல் விமர்சகி, மற்றும் வாசகி அவர்கள்தான். அவர்கள் ஒரு பாமரராக மாறி நான் எழுதி முடித்தவுடன் விமரிசித்து விடுவார். அவர் நல்லா இருக்கு என்றால் அந்த வாரம் எனக்கு பாராட்டி கடிதம் வரும், நன்றாக இல்லை என்றால் திட்டி விமர்சனங்கள் வரும். எப்படி என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. இதுவே எனக்கு பெரிய பலம்.

குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.ஐயா தான் “கல்கண்டு” இதழை ஆரம்பிக்கிறார். அவர் முழுப்பொறுப்பையும் தருகிறார். அதனைப்பற்றி?

1977 – நவம்பர் 10 அப்பாவின் திடீர் மறைவிற்கு பின், குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. ஐயா தமிழ்வாணன் குடும்பத்தில் ஒருவருக்கு இந்த வாய்ப்பை தருவேன். இல்லை எனில் பத்திரிக்கையை நிறுத்தி விடுகிறேன் என்கிறார். அப்போது எனது தாயார் எனக்கு அந்த வாய்ப்பு வேண்டாம். எனது மகன் லேனா தமிழ்வாணனுக்கு தாருங்கள் என்கிறார். ஏனெனில் நான் எம்.ஏ. இதழியல் துறை படித்துள்ளதால் எனக்கு அந்த வாய்ப்பை தந்தார். 1,58,000 பிரதிகள் விற்பனையுடன் என்னிடம் வந்த அந்த பதிப்பினை 2,22,000 பிரதிகளுடன் விற்பனையை உயர்த்தினேன். மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவை நான் மறக்க இயலாது.

பொதுவாகவே எழுத்துலகில் வாரிசுகள் கிடையாது, வந்தாலும் அவர்கள் நிலைத்து நிற்பதில்லை. ஆனால் என்னை தமிழ்வாணனுடைய வாசகர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். அதனால்த்தான் இந்த விற்பனையை என்னால் உயர்த்த முடிந்தது.

“கற்கண்டு” பயணத்தின்போது வாசகர்களுக்கு இனிக்கக்கூடிய ஒரு இதழாக இன்றும் உள்ளது. கருத்துக்களை “ஹைகூ“ நடையில் சொல்லக்கூடியது. அந்த நுட்பத்தை எப்படி கையில் எடுத்தீர்கள்?

1960களில் வந்த பத்திரிக்கைகள் அனைத்தும் பத்தி பத்தியாக செய்திகளை வெளியிட்டு வந்தன. எனது அப்பா சொல்வார். இது வேகமான உலகம் யாரும் பெரிய  பாராக்களை படிக்க மாட்டார்கள். அதனால் துணுக்கு செய்தியாக மாற்றி கொடுக்க வேண்டும் என்பார். அப்படி உருவானதுதான். இந்த பாணி. எல்லோராலும் கற்கண்டு பாணி என்று சொல்லும் அளவிற்கு உருவானது. மக்களின் ரசனைக்கேற்ப செய்திகளைக் கொடுத்ததனால் வெற்றியை அடைய முடிந்தது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்றால் தொப்பியும், கண்ணாடியும், அதுபோல் தமிழ்வாணன் என்றால் தொப்பியும், கருப்பு கண்ணாடியும், இதற்கு ஏதேனும் சுவாரஸ்யமான பின்னணி உண்டா?

எம்.ஜி்.ஆருக்கு மக்கள் திலகம் என்ற பட்டத்தை கொடுத்தது எங்கள் தந்தையார்தான். அப்பா சொல்வார்கள் நான் நான் உயரமும் இல்லை, குள்ளமும் இல்லை. நடுத்தரமானவன். அழகிலும் அப்படியே. அதனால் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவே இந்த கருப்புக்கண்ணாடியை தேர்ந்தெடுத்தேன். இதில் ஒரு விசேஷம் என்னவெனில் மற்றெல்லோருக்கும் முன்பே அப்பா அதாவது 1940களிலேயே கருப்புக்கண்ணாடியை அணிய ஆரம்பித்துவிட்டார்.

பிள்ளைப்பாசம், துடிக்கும்துப்பாக்கி, காதலிக்க வாங்க என்ற படங்களில் தெலுங்கில் கால்பதித்துள்ளீர்களே எப்படி?

எழுத்து மூலம் சம்பாதிக்க இயலாது. நெஞ்சை நிரப்புமே ஒழிய வயிற்றை நிரப்பாது என்று முன்னமே கூறினேன். அதனால் சம்பாத்தியத்திற்கான ஒரு களமாக சினிமாவை தேர்ந்தெடுத்தார் அப்பா, மொழி மாற்றப்படங்களில் ஜெய்சங்கரை நடிக்க வைத்தார். அப்பா அதிலும் கோலோச்சினார்.

தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும் “கல்கண்டு” இதழ் ஆசிரியர் லேனா தமிழ்வாணன். அவரிடம் பிரியாவிடை பெற்றுத் திரும்பினோம்.

– வெற்றிச்செல்வன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

3

Leave A Reply

Your email address will not be published.