ஈமான் கலாச்சார மைய செயலர் முகமது ஹிதயத்துல்லாவுடன் ஒரு நேர்காணல்

0
1

என் திருச்சி சார்பாக ஈமான் கலாச்சார மைய செயலர் முகமது ஹிதயத்துல்லாவுடன் ஒரு நேர்காணல்

முதுவை ஹிதயத்துல்லா, துபாய் தமிழர்களுக்காக நேசக்கரம் நீட்டுபவர். அவர்களுடன் ஒரு நேர்காணல்.

ஐயா உங்களது பூர்வீகம்?

2

இராமநாதபுரம் முதுகுலத்தூர்.

உங்களது பெற்றோர்களைப்பற்றி?

தந்தை அரசுத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாயார் குடும்பத்தலைவி.

உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர்?

ஒரு சகோதரி, ஒரு சகோதரன் உள்ளனர்.

தங்களது பணி என்ன?

நான் துபாயில் உள்ள அரேபிய டாக்ஸி என்ற நிறுவனமொன்றில் மக்கள் தொடர்பு அலுவலராக வேலைபார்க்கிறேன்.

உங்களது கல்வி பற்றி?

நான் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் (எம்.எஸ்ஸி.) இயற்பியல் துறையில் பட்டமேற்படிப்பு படித்துள்ளேன்.

எப்படி உங்களுக்கு இந்த சேவை மனப்பான்மை ஏற்பட்டது?

நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் எம்.டி. கீழக்கரையைச் சேர்ந்த ஹபிபுல்லாகான். அவர் தான் ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர். அவர்தான் என்னை செயலராக இருந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றும்படி ஊக்குவித்தார்.

தமிழகத்திலிருந்து துபாய்க்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் சம்பளம் உள்ளிட்ட பிரச்னைகளால்  பாதிக்கப்படும்போது, திடீரென விபத்து மற்றும் வேறு காரணத்தினால் இறந்துவிட்டாலோ  அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு எங்கள் மையத்தலைவர் என்னை பணித்துள்ளார்.

ஈமான் கலாச்சார மையம் எப்போது துவங்கப்பட்டது?

1976-ல் துவங்கப்பட்டது. இந்த அமைப்பு துபாயில் உள்ள அரசின் அனுமதி பெற்ற முதல் தமிழ் அமைப்பு என்ற பெருமைக்குரியது.

யாரால் துவங்கப்பட்டது?

கீழக்கரையைச் சேர்ந்த வள்ளல் பிஎஸ்எம்.அப்துல்ரகுமான், பிஎஸ்எம்.அப்துல் காதிர் உள்ளிட்ட குழுவினரால் துவங்கப்பட்டது.

இதன் நோக்கம் மற்றும் கொள்கைகள் என்ன?

தமிழ் மக்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வது. தமிழ் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்வது.

மதுரையில் விமான நிலையம் இருக்கையில் ஏன் திருச்சிக்கு இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வரப்படுகின்றன.?

மதுரை விமான நிலையத்தில் கார்கோ கிளியரன்ஸ் வசதி இல்லை. திருச்சி விமான நிலையத்தில்தான் அந்த வசதிகள் இருக்கின்றன. அதனால்தான் திருச்சி விமான நிலையத்திற்கு இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வரப்படுகின்றன. மதுரையிலும் இந்த வசதியை செய்து தர தமிழக அரசு முன்வர வேண்டும்.

சென்னை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக இருப்பதால், இறந்தவர்களின் உடலை அவரவர் ஊர்களுக்கு கொண்டு செல்லக்கூடிய சடங்குகளை முடிப்பதற்கு 4 முதல் 5 மணி நேரம் ஆகிறது. இதற்காக நாம் ஏஜண்டுகளை அணுகினால், அவர்களுக்கு 5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. இந்திய அரசு இலவசமாக இந்த பணியை செய்து தர வேண்டும்.

உங்களை எந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்?

00971505196433 வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம்.

பிரச்னைகள் எப்படி வரும்? என்னென்ன பிரச்னைகளை துபாய் செல்லும் இளைஞர்கள் சந்திக்கின்றனர்?

முதலில் விசிட் விசாவில் சென்று வேலைக்கு செல்வதை தவிர்க்கவேண்டும். அது சுற்றுலாவிற்கு மட்டுமே. ஏஜெண்டுகள் இந்த விசாவை கொடுத்து அவர்களை ஏமாற்றி விடுகின்றனர்.

விசிட் விசாவில் சென்றால் என்ன ஆகும்?

விசிட் விசாவில் குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் நாம் நம் வேலைகளை முடித்துவிட்டு திரும்பிவிட வேண்டும். இல்லையெனில் துபாய் அரசு அபராதம் விதிக்கும். அதனை கட்டினால்த்தான் நாடு திரும்ப முடியும்.

அந்த நேரத்தில் அவர்களுக்கு தங்களது உதவி என்ன?

அனைவருக்கும் அபராதம் நாம் கட்ட இயலாது. அதனால்த்தான் விசிட் விசாவில் செல்வதை தவிர்க்குமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

துபாயில் வேலை பார்க்கும் தமிழர்களுக்கு ,நோய், தற்கொலை, விபத்து போன்ற காரணங்களால் இறப்பு ஏற்படும்போது அவர்களுக்கு உங்கள் மையத்தின் பணி என்ன?

துபாயில் அவர்கள் பணிபுரியும்  இடத்திற்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தின் மூலம் அடையாளம் தெரியப்படுத்தப்பட்டு, அவர்கள் மூலம் எங்களுக்கு தகவல் சொல்லப்படுகிறது. அதன்பின் அவர்களின் குடும்பத்தினரிடம் நாங்கள் தொடர்பு கொண்டு, உடலை தமிழகம் கொண்டு வர வேண்டுமா? இல்லை துபாயிலேயே இறுதி சடங்கு செய்யலாமா? என அவர்களிடம் அனுமதி பெற்று பின்னர்தான் நாங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்கிறோம்.

சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு உதவுதல், மற்றும் இறுதி காலங்களில் உதவுதல் இவை தவிர உங்கள் அமைப்பு வேறு என்ன செய்துவருகிறது?

எதிர்பாராத விபத்தில் இறந்து விட்டால், அவர்களுக்குரிய காப்பீட்டுத்தொகையை பெற்றுக்கொடுப்பதில் இந்த அமைப்பு உதவி செய்து வருகிறது.  மேலும் பனியின் காரணமாக இறந்துவிட்டால் அவருக்கான இழப்பீடு தொகையை பெற அந்த ஊரில் உள்ள கோர்ட்டில் இறந்தவர் நபர் இவர்தான் என்று எங்கள் கலாச்சார மையம் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்து கொடுத்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு பணம் பெற்றுத்தர சட்ட ரீதியான நடவடிக்கைகளை செய்து கொடுக்கிறோம். சிறைத்தண்டனை பெற்றுள்ள நபருக்கு தேவையான இழப்பீட்டினை அவரது குடும்பத்திற்கு பெற்றுத்தருவதுடன், மரண தண்டனை பெற்றுள்ள நபரின் விடுதலைக்காகவும் தேவையான உதவிகள் நாங்கள் செய்து தருகிறோம்.

 

உங்களுக்கான விருதுகள் பற்றி?

இது சேவை சம்பந்தமானது அதனால் விருதுகளை எதிர்பார்ப்பதில்லை.

துபாய் அரசின் தூதரகம் உங்களுக்கு உதவுகிறது? இந்திய தூதரகமும் உதவுகின்றது. இருவரையும் இணைக்கும் பாலமாக இருந்து செயல்படுகிறீர்கள்? இனி வருங்காலங்களில் உங்களுக்கான இலக்கு என்பது என்ன?

இப்போது துபாயில் வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் வேலைக்கு செல்வதற்கு ரூ.1 லட்சம், அல்லது 50,000 என ஏஜெண்ட்டுகளிடம் உடனே கொடுத்து விடுகிறோம். இதனை பல ஏஜெண்டுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். அதற்கு நாம் ஏன் உடந்தையாக இருக்கக்கூடாது. விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.  

அதனால் துபாய் போகும் முன் இந்த விசா சரியானதுதானா? போலியா? இந்த ஏஜெண்ட் அங்கீகாரம் பெற்றவரா? என்பதை இந்திய துணைத் தூதரகம் மூலமாகவோ அல்லது இன்டர்நெட் மூலமாகவோ, அல்லது அந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் உதவியுடன் முதலிலேயே உறுதி செய்து கொண்டு, அதன்பின் வேலைக்கு செல்ல வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகமாக செய்யப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்டு எதிர்காலத்தில் நாம் ஏமாறாத நிலையை, பாதிப்புக்கு ஆளாகாத நிலையை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரும் மன மகிழ்வுடன், பணம் சம்பாதிக்கும் ஆசையுடன், குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்ய வெளிநாடு செல்கிறோம். அங்கு அனைத்தும் சரியாக அமையும் பட்சத்தில் ஒன்றும் இல்லை. மாறாக ஏதாவது பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க நாம் முன்பே சிந்தித்து செயல்பட வேண்டும்.

அவ்வாறு பிரச்னைகள் ஏற்படும்போது சட்ட ரீதியாக உதவ தனது உதவிக்கரங்களை  நீட்டும் ஈமான் கலாச்சார மையத்தின் செயலரிடம் மனநிறைவுடன் நன்றியை தெரிவித்துவிட்டு விடைபெற்றோம்.

 -வெற்றிச்செல்வன்.

 

 

 

.

3

Leave A Reply

Your email address will not be published.