“வாசகர்களின் மனநிலை பக்குவப்பட்டே நிற்கிறது!” எழுத்தாளர் அல்லி பாத்திமா அவர்களுடன் நேர்காணல்

0
1

“வாசகர்களின் மனநிலை பக்குவப்பட்டே நிற்கிறது!”
எழுத்தாளர் அல்லி பாத்திமா அவர்களுடன் நேர்காணல்

“நாம் பார்த்தறியாத மக்களின் வாழ்க்கையை நம்முன் விரிய வைக்கும் படைப்பாளர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்” என்பார் ரிக்டர். ஒரு படைப்பு கண்களை ஈரப்படுத்துவதாகவும், இதயத்தைப் பாரப்படுத்துவதாகவும் விரிகிறபோதுதான் அந்தப்படைப்பாளியின் உழைப்பின் வலிமையை வாசகரால் உணர இயலும். ‘பாண்டிச்சி’, ‘செல்லக்கருப்பி’ ஆகிய இரு நாவல்கள், விடியலுக்கு நகரும் விண்மீன்கள் கவிதைத்தொகுப்பு நூல்களால் இலக்கியவெளிக்கு அறிமுகமானவர் குமுளி அரசு மேனிலைப்பள்ளி தமிழாசிரியை எழுத்தாளர்அல்லி பாத்திமா.

திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிறந்த நாவலுக்கான தாழ்வாரம் இலக்கியவிருது (2018), 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளருக்கான தமிழக நூலகத்துறை விருது உள்ளிட்ட பல விருதுகளை தம் படைப்புகளுக்காகப் பெற்றவர். தற்போது ஸீரோ டிகிரி பப்ளிஷிங் – தமிழரசி அறக்கட்டளை விருதுக்கான நெடும்பட்டியலில் இவர் செல்லக்கருப்பி நாவல் இடம்பெற்றிருக்கிறது. ஆசிரியர், நாவலாசிரியர், கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் உள்ளிட்ட பன்முகங்களுக்குச் சொந்தக்காரரான இவர் என் திருச்சி தடம் வாசகர்களுடன் பேசுகிறார்.

2

ஆசிரியை அல்லி பாத்திமா -எழுத்தாளர் அல்லி பாத்திமா ஆவர் என்று எண்ணிப் பார்த்ததுண்டா?
நிச்சயமாக.. எழுத்தாளராக வேண்டும் என்று என் உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்த எண்ணமே முயற்சியாக மாறி, இன்று என்னை எழுத வைத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் நிறைய எழுத எண்ணுகிறேன். இந்தச் சமூகத்துக்குத் தேவையானதை என் கவிதைகளாக, நாவல்களாகத் தர ஆவல் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறேன்.


ஒரு படைப்பாளி என்ற முறையில் படைப்பியல் ரீதியாக சந்திக்கிற சவால்கள் என்ன என்பதைக் கூற இயலுமா?
இன்றைய தலைமுறைகளிடத்தில் விரிவான புத்தக வாசிப்புப்பழக்கம் குறைந்துவிட்டது என்பதுதான் மிகப்பெரிய குறைபாடு. சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடு நூல்களோடு இல்லை. எழுத்தை அறிந்தவர்கள் லட்சக்கணக்கில் இருந்தாலும் மிகப்பெரிய எழுத்தாளர்களின் நூல்கள் கூட ஆயிரக்கணக்கில்தான் விற்கிறது. அதிலும் வாங்குபவர்கள் அனைவரும் வாசிக்கிறார்களா என்று தெரியவில்லை. எழுத்துக்களை வாசிக்க வைப்பதே இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்.

பெண்ணியக் கதாபாத்திரங்கள்தாம் பிடித்தமானதா?
பாண்டிச்சி, செல்லக்கருப்பி நாவல்களில் பெண்ணியக் கதாபாத்திரங்களின் மூலம் பேசியதால்தான் அந்த நாவல்கள் பேசப்படுகின்றன எனக் கருதவில்லை. பெண்ணியக் கதாபாத்திரங்களால் மட்டுமாய் நீண்ட கதையை நகர்த்துவது சிரமம் தானே. பாண்டிச்சியிலும் செல்லக்கருப்பியிலும் பெண்தான் மையக்கதாப்பாத்திரம் என்றாலும் ஆண்களும் பேசுகிறார்கள். நாவலின் தலைப்பு அப்படி இருப்பதால் இந்தக் கேள்வி உருவாகியிருக்கிறது. பெண் எழுத்தாளர் என்பதால் பெண் உணர்வுகளைச் சொல்வது எளிது. இருந்தாலும் அடுத்த படைப்புகள் கொஞ்சம் வேறுபட்டிருக்கும்.

 நாவல்களுக்காக எடுத்துக்கொள்ளும் முயற்சிகள்?
இந்த நாவல்களின் தனித்தன்மை களஆய்வு என்பதுதான். களப்பயணம் செய்யாமலும் மக்களோடு தொடர்பு கொள்ளாமலும் வெறும் செய்திகளால் ஒரு நாவல் எழுதிட முடியாது. மக்களோடு மக்களாய் பழகி பின்னரே என் இரண்டு நாவல்களையும் எழுதினேன்.அம்மக்கள் என்னோடு இயல்பாக பழகினார்கள். வாழ்வியல் முறைகளை பகிர்ந்து கொண்டார்கள். அந்த மூங்கில் காட்டு மக்களிடம் நிற்கும்போது நாம் எத்தனை பின்தங்கியிருக்கிறோம் இயற்கையைப் பாதுகாப்பதில் எவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறோம் என்பதே தோன்றியது.

பாடல் எழுதிய அனுபவம் எப்படி இருந்தது?
வாழ்க்கை விசித்திரமானது. எனக்குள் எப்போதும் அப்படித்தான் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும். இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜா பாடல் எழுத ஆர்வமுள்ளதா எனக்கேட்கவும் நானும் ஆர்வமுண்டு எனச்சொல்ல உடனே ஒரு பாடலை எழுதச்சொன்னார். எழுதியவுடன் அது பதிவும் செய்யப்பட்டது. எதுவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பாடலாசிரியராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளேன். மலையாளத் திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத்தில் அந்தப் பாடல் வரிகள் இதோ

நீ சுடும்வெயிலில் சாரல் மழையாக
ஒரு புன்னகை கொண்டு சாய்க்கிறாய்
அட ..இத்தனை அழகாக..

ஒரு எழுத்தாளரை எப்படி இந்தச் சமுதாயம் எப்படிப் பார்க்கிறது?
சமூகத்தில் எழுத்தாளர்களை அவ்வளவு எளிதில் அடையாளம் கண்டு கொள்வதில்லை. புத்தகங்கள் வழியாகத்தான் முகம்காட்ட வேண்டும் என்பதால் வாசிப்பு குறைவாக இருக்கும் காலத்தால் எழுத்தாளர் முகங்களும் எழுத்துக்களும் போய் சேர வழி ஏதுமில்லை. வாசிப்பு என்பது வாழ்வின் பழக்கமாக மாற்றிக்கொள்ளும்போதுதான் எழுத்தாளரை சமூகம் அறிந்து கொள்ளவே முடிகிறது. எழுத்து வாசிப்பு இலக்கிய ஆர்வம் உள்ளவர்களால் அறிமுகங்கள் நடைபெறுகிறதே தவிர சமூகத்தில் மிக எளிதில் அறிமுகமாக வழிகள் மிகக்குறைவு.

பழைய காலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு எழுத்தாளர்களை வரவேற்பதும் அவர்களுடைய எழுத்தை ஊக்கப்படுத்துவதும் பாராட்டுவதுமாக வாசகர்களின் மனநிலை என்னைப் பொறுத்தவரை பக்குவப்பட்டே நிற்கிறது என்றுதான் கூற வேண்டும். ஆனாலும் வாசிப்பு இன்னும் வளர வேண்டும். எழுத்து ஆண், பெண், இனம், மதம் கடந்தும் ஊடுருவினால் தகுந்த மதிப்பும் கிடைக்கும்.

எழுத வேண்டும் என நினைக்கிற இளம் எழுத்தாளர்களுக்கு குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்ல வருவது என்ன?
அனுபவங்களும் ஆழ்ந்த உற்றுநோக்கலும் ரசனையுமே எழுதத்தூண்டும். எழுதிட ஆர்வமுடையவர்கள் தம்மை சுற்றியிருக்கும் சமூகத்தை முதலில் கவனிக்க வேண்டும். மனித உயிர்களை மட்டுமின்றி அனைத்து உயிர்களையும் மதித்துப்பார்க்க வேண்டும். உணர்வுகளை எழுதும்போது கதாபாத்திரங்களாகத் தம்மை உணர்ந்து எழுத வேண்டும். உணர்வுப்பூர்வமாக எழுத வேண்டும். மற்றவர்களுக்காக அவர்களது இரசனைக்காக என்பதை விட தமக்காகவும் வரும் தலைமுறைகளுக்கு செய்திகளை அழகாக கொண்டு சேர்க்கும் எண்ணத்திலும் எழுத்துக்கள் அமைந்தால் சிறப்பு. இது என் எண்ணமே. மற்றபடி இப்படித்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறையில் யாரையும் நிறுத்த முடியாது. அது மனதின் ஊற்றுக்கும் ஒழுக்குக்கும் தகுந்தவாறு இயல்பாக அமைய வேண்டும்.

எழுத்துப்பணி தங்களுக்கு நிறைவைத் தருவதாக உணர்கிறீர்களா?
எழுதுவதே மன நிறைவுக்குத்தான். எழுத்தென்பது யாரும் கட்டாயப்படுத்தி செய்ய வைக்கும் செயல் அல்ல. மனதுக்குள் உருவாகும் உணர்வினை மனநிறைவோடு ஏதேனும் படைப்பாக்க வெளிக்கொண்டு வந்து அதை தாமே ரசிக்கும் போது நிறைவு தானே கிடைக்கும். எனக்கும் அந்த நிறைவு கிடைக்கின்றது. ஆனாலும் வேறுபட்ட பலவற்றை எழுத வேண்டும் என்ற தாகமும் உள்ளம் முழுவதுமாக நிறைந்து இருக்கிறது. ஏனென்றால் நான் மிக தாமதமாகத்தான் எழுத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளேன்.

சந்திப்பு : ஜோ.சலோ

3

Leave A Reply

Your email address will not be published.