தமிழரின் ஒளிவழிபாட்டு மரபுகள் – பேராசிரியர் இ.சூசை

0
1

தமிழரின் ஒளிவழிபாட்டு மரபுகள் – பேராசிரியர் இ.சூசை

பழந்தமிழ் நாட்டில் மாலை நேரத்தில் பிச்சிப்பூமலர்வதைக்கண்டு மாலைநேரம் வந்ததை உணர்ந்தனர். மகளிர் பூச்சூடி வளையல் அணிந்து இல்லுறை தெய்வத்தை வழிபட்டனர். ஒரு விளக்கினை ஏற்றி நெல்லும் நிறைமலரும் தூவி ஒளியை வழிபட்டனர். இயற்கை வழிபாடு இருந்ததைப் பிற்காலத்தில் இராமலிங்க வள்ளலார் அவற்றை மீட்டுருவாக்கம் செய்தார்.

நெடுநல்வாடை உள்ளிட்ட இலக்கியங்கள் தமிழர் விளக்கொளியை வழிபட்டதை பதிவு செய்கின்றன. சோழன் செங்கணான் சேரன் இரும்பொறை இருவருக்கும் குழுமம் என்ற ஊரில் போர் நடந்த போது வீரர்கள் கையில் தீவட்டி ஏந்தி இரவில் மலையில் அணிவகுத்து சென்ற காட்சி நகரத்தின் மாடங்களில் கார்த்திகை விளக்கு ஏற்றி விழாக்கொண்டாடுவதைப்போல இருந்தது. கார்காலத்தின் காருவா (அமாவாசை) நாளில் இவ்விழா நடைபெற்றது. இரவில் விளக்கு வரிசையாக ஏற்றிக் கொண்டாடினர்.

2

இன்றும் சிற்றூர்களில் சிறுவர்கள் கார்த்தீ சுற்றுதல் என்ற விழாவைக் கொண்டாடுகின்றனர். ஊர்மந்தை அல்லது நீர்நிலைக்கரைகளில் மூங்கில் அல்லது நுணா மரத்து குச்சிகள் நான்கு அல்லது மூன்று சேர்த்துக் கட்டி அடிப்பகுதியில் பனம்பூ கரி உப்பு கலந்த கலவையை ஒருத்துணியில் சிறு மூட்டையாகக் கட்டி மறுமுனையில் நீண்ட கயிறு அல்லது வைக்கோலில் திரிக்கப்பட்ட ஆக்கையைக் கட்டி துணிமூட்டையில் நெருப்பு வைத்து சுற்றும் போது தீப்பொறி வட்டமாக சுழலும் இது கார்த்திகைமாத விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

சில ஊர்களில் காய்ந்த பனைமட்டையால் செய்த சுடலை கொளுத்தி இறைவனை ஒளியால் வழிபடுகின்றனர். இவ்வொளிவழிபாடு நாட்டுப்புற வழக்காறாக உள்ளது. கோயில்களில் பலவித விளக்குகள் அமைந்த ஒளியைக்காட்டி இறைவனுக்கு ஆலாபனை செய்து வழிபடும் செவ்வியல் மரபு வளர்ந்தது. மாவில்விளக்கு செய்து அதனை ஏற்றும் மரபும் மாவிளக்கு ஏற்றிய பின் உரலில் இடித்து சலித்த அரிசிமாவு வெல்லம் ஏலம் சுக்கு நெய்யிட்டு பிசைந்த மாவினைப்பிறர்க்கு பகிர்ந்தளித்து மாவிளக்கு போடும் நேர்ச்சிக்கடன் இன்றும் தொடர்கிறது. இறைவனுக்கு நன்றிப்படையலாக மாவிளக்கு போடுவது மரபு. அகல் விளக்கு, குத்துவிளக்கு, தோரணவிளக்கு, சரவிளக்கு என கோயில்களில் வெங்கல விளக்குகளைக் காணிக்கையாகச் தரும் மரபும் உள்ளது.
பழந்தமிழ் நாட்டில் விளக்கு எரிக்க நெய் ஏற்பாடு செய்யும் மரபு இருந்தது.

சோழ மன்னர்களின் கல்வெட்டுகளில் 50 பசுக்கள் ஆடுகள் என நிவந்தமாக (கொடையாக) மன்னனே அளித்ததாக பலநூறு கல்வெட்டுகள் உள்ளன. தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகள் திருச்சி கற்குடி (உய்யக்கொண்டான்திருமலை) கோயில் கல்வெட்டுகளில் இவற்றை நிறைய காணலாம். கோயில் தளியிலார் உள்ளிட்ட மகளிர் இப்பணியை நிரந்தரமாக செய்திட நியமனம் செய்யப்பட்டு அவர்கள் வாழ்விற்கு இறையிலி(வரிவிலக்கு) நிலங்கள் கொடுக்கப்பெற்றன. சைவ வைணவப்பெருங்கோயில்கள் சிற்றூர் கோயில்களில் காணமுடியும்.

கார்த்திகைத்திங்களில் ஒளிவிளக்கு வரிசை தான் தீ+ஆவளி(வரிசை) தீபாவளி ஆகும். அதனை ஐப்பசி மாத முழுஉலா நாளில் மாற்றி தீவாலி எனக்கொண்டாடுகின்றனர். மாந்தரன் என்ற தமிழ்மன்னனை ஆரியர்கள் சூழ்ச்சியினால் கொன்றனர். (நரன் என்றால் மாந்தன்) அசுரன் என்றால் ஆரியர்களை எதிர்த்த தமிழன் என்பது பொருள். நரகாசுரன் என்ற தொன்மம் உருவாக்கப்பெற்று சமற்கிருதமயமாதல் நடந்தது. புலவர் குழந்தை எழுதிய இராவண காவியத்தில் இதுபோன்ற குறுங்கதைகளைக்காண முடிகிறது. விளக்குகள் அணிவகுக்கும் விழாவினை திருவண்ணாமலை அருள்மிகு செம்மலையான் (அருணம் – சிவப்பு அசலம்-மலை ஈஸ்வரன் – இறை.) திருக்கோயிலில் உலகப்புகழ் பெற்ற விழாவாகக் கொண்டாடுவதை உற்று நோக்கவேண்டும்.

புத்த விகாரைகளில் சிங்கப்பூர் உள்ளிட்ட கீழைநாடுகளிலும் இன்றும் பீங்கானிலால் ஆன சிறு அகல் விளக்குகளில் மலாய் ஜப்பானிய சீன மாந்தர்கள் ஒளி ஏற்றி வழிபடுவது பண்பாட்டு ஒற்றுமையைக்காட்டுகிறது.

 

3

Leave A Reply

Your email address will not be published.