சிற்பியைச் செதுக்கிய சிற்பிகள்
சிற்பியைச் செதுக்கிய சிற்பிகள்
திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல மாணவருமான செல்வன் தன்ராஜ் எழுதிய நானும் அவளும் என்கிற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆசிரியர் எட்வின் அலெக்ஸாண்டர் வரவேற்புரை வழங்க மங்கல இசையுடன் நிகழ்வு தொடங்கியது.
புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அருள்திரு ஜோசப் கென்னடி தலைமை ஏற்றார். பள்ளியின் தாளாளர் அருள்திரு ஜெயராஜ் இலங்கேஸ்வரன் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளியல் பேராசிரியர் முனைவர் த.பொன்னரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வியாளர்கள் சங்கமம் நிறுவனர் சிகரம் சதீஷ், பத்திரிக்கையாளர் பிருந்தா ஸ்ரீ ஹரிஷ் வாழ்த்துரை வழங்கினர். தூய வளனார் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ஜோ.சலோ மதிப்புரை வழங்கினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத்துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா நூலை வெளியிட்டு சிறப்புரை வழங்கினார். இறுதியில் நூலாசிரியர் தன்ராஜ் நன்றியுரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஜான்சன் சிறப்பாக செய்திருந்தார். நிகழ்ச்சிகளை சிதம்பரம் வேளாண் கல்லூரி மாணவி செல்வி ஜெர்லின் ஸ்வேதா தொகுத்து வழங்கினார்.
விழாவில் பள்ளியின் சார்பாக, செல்வன் தன்ராஜின் தந்தை திரு. பொ.து.தேவராஜ் கௌரவிக்கப்பட்டார். விழாவில் அந்த மாணவரின் ஆசிரியர்கள் பலரும் பங்கேற்றதுடன் பொன்னாடை அணிவித்து தம் மாணவனை வாழ்த்தியது ஆசிரியர்கள் சிலைகளை வடிப்பவர்கள் அல்ல, சிற்பிகளை வடிப்பவர்கள் எனக் காண்போரைச் சொல்ல வைத்தது எனில் அது மிகையானதல்ல.