“தலை சீவுதல் ஆற்றலைக் கொடுக்கும்!” மருத்துவர் அனிதா ஜெரோம் அவர்களுடன் நேர்காணல்

2
1

“தலை சீவுதல் ஆற்றலைக் கொடுக்கும்!” மருத்துவர் அனிதா ஜெரோம் அவர்களுடன் நேர்காணல்

Helios

நம்மில் தொடங்கும் சிறிய மாற்றம் நம்மைச் சுற்றிய சமூகத்திற்குப் பயன்படுவது இலக்காகவும் இயக்கமாகவும் அமையவேண்டும். அத்தகைய செயலாக்கத்தோடும் செயலூக்கத்தோடும் மாற்று மருத்துவத்தைக் கையிலெடுத்து பணியாற்றி வருபவர் மருத்துவர் அனிதா ஜெரோம். மதுரை, ஞானஒளிவுபுரத்தில் எனர்ஜி ஹோம் என்கிற பெயரில் மாற்று மருத்துவப்பணியை மிக அற்புதமாக செய்து கொண்டிருப்பவர்.

தமிழகத்தின் பல இடங்களிலிருந்தும் பல நோயாளிகள் இவரிடம் சிகிச்சை பெற்று முழுமையான தீர்வை எட்டியுள்ளனர். என் திருச்சி தடம் வாசகர்களுக்காக மருத்துவருடனான நமது வினாக்களும் மருத்துவரின் பதில்களும் இதோ..

அரசு பணியிட ஆசிரியர் பணியை துறந்துவிட்டு மருத்துவத் துறை யில் பணி செய்ய விரும்பியது ஏன்?
ஆசிரியப்பணி ஒரு அறப்பணி. ஆசையாகத்தான் நான் அந்தப் பணியில் இணைந்து பணிபுரிந்தேன். ஆனால் அந்தவேளையில் எனக்கு தேவைப்பட்ட சில சிகிச்சைக்கு அக்குபஞ்சர் மருத்துவமே தீர்வைத் தந்தது. அந்தத்தீர்வு தற்காலிகத் தீர்வாக அல்லாமல் நிரந்தர தீர்வாக மாறியதன் விளைவாக நான் அந்த மாற்று மருத்துவத்தில் ஆர்வம் கொண்டேன். அந்த மருத்துவத்தில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆவல் கொண்டேன் மகிழ்ச்சியோடு, ஆத்மார்த்தமாக இப்பணியை மேற்கொண்டு வருகிறேன்.

மருத்துவர் அனிதா ஜெரோம்
மருத்துவர் அனிதா ஜெரோம்

மாற்றுமருத்துவம் என்பதற்குள் எந்தெந்த மருத்துவ முறைக ளெல்லாம் வருகின்றன?
அக்குபஞ்சர் மருத்துவம், சூஜோக் தெரபி, விதை சிகிச்சை, கலர் தெரபி, ஆரிக்குலார் தெரபி, ஸ்கால்ப் தெரபி, பேசியல் தெரபி, இரிடோ தெரபி, டார்ன் தெரபி, கப்பிங் தெரபி, அணல் சிகிச்சை, நேச்சுரல் தெரபி, பாத அழுத்த சிகிச்சை, உணவு மருத்துவ சிகிச்சை, மலர் மருத்துவம், எலக்ட்ரோ ஹோமியோபதி, மனநல மருத்துவ ஆலோசனை, மசாஜ் தெரபி உட்பட மாற்று மருத்துவத்திற்குள் நிறைய முறைகள் வருகின்றன.

உணவு பழக்கத்தால் உடலை நலமாக வைத்துக் கொள்ள மருத்துவ ராக உங்கள் வழிகாட்டுதல் என்ன?
உணவு பழக்கம் மிகவும் முக்கியமானது. உணவில் அசிடிக் உணவுகள், ஆல்கலைன் உணவுகள் என இரண்டு வகை உண்டு. முதலில் அவற்றை நமக்குப் பிரிக்கத் தெரிய வேண்டும். அசிடிக் உணவு என்றால் அது அமிலத்தன்மை கொண்டது. அமிலத்தன்மை உணவுகள் நாக்கில் சுவையை மிகுதியாக தரும் உணவுகள். பெரும்பாலானோர் அதை விரும்பி எடுப்பர். ஆனால் அந்த உணவு உள்உறுப்புகளில் சென்று அமிலமாக மாறும். மாவு உணவுப் பொருள்கள் அனைத்தும் அமில உணவுகள். புளிப்பு சுவையுடைய உணவுகள் அனைத்தும் அமில உணவுகள். இவற்றில் கழிவுகள் 75% இருக்கும் அதிகமாக உண்பதால் கழிவுகள் அதிகமாகி நோய்களை உண்டாக்கும். இந்த வகை உணவை 25 சதவீதம் மட்டுமே உட்கொண்டால் போதுமானது.

ஆல்கலைன் உணவு என்பது காரத்தன்மை கொண்டது. காரத்தன்மை என்பது உரைப்பு என்று சொல்லக்கூடிய மிளகாய் காரம் அல்ல. தேங்காய், பழங்கள், பசுங்காய்கறிகள், கீரை, கனிச்சாறு, கொட்டை, அவல் உணவுகள், முளைக் கட்டிய தானியங்கள், மூலிகை பானங்கள் மற்றும் மலர் சாறு உணவுகள். அறிவியல் ரீதியாக இந்த உணவுகள் 75 சதவீதம் நமக்கு தேவை. இந்த உணவுப் பழக்கம் ஏற்பட்டால் நம்முள் கழிவுகள் அதிகமாக சேராது. உடலில் கழிவுகள் குறைவாக சேரும் அல்லது தங்கியிருக்கும் கழிவுகளும் எளிதாக வெளியேறும்.

2

குழந்தை வளர்ப்பிற்கு மருத்துவராகத் தாங்கள் தரும் ஆலோசனை?
குழந்தைகளை பாதுகாப்பாகவும் பக்குவமாகவும் பார்த்துக்கொள்வது இந்த தேசத்திற்கு நாம் செய்கின்ற கடமை என்றே நான் கருதுகிறேன். குழந்தைகள் அதிகமாக அலைபேசியை பயன்படுத்துகிற ஒரு சூழலுக்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக இந்த ஊரடங்கு காலகட்டம் அவர்களுடைய படிப்பையும் கூட அதற்குள் சுருக்கிவிட்டது..குழந்தைகளின் கண்களை பாதுகாக்க காலையிலும் இரவிலும் கண் குப்பி வைத்து கண்களைக் கழுவும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். நெல்லிக்காய், கருவேப்பிலை, அன்னாசிப்பழம், கேரட் இதனையெல்லாம் உட்கொள்வது குழந்தைகளுடைய கண்களுக்கு ஒரு பொலிவைத் தரும். அதைப்போல தலை சீவுவதால் ஆற்றல் கிடைக்கும் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும்.

என்ன தலை சீவுவதால் ஆற்றல் கிடைக்குமா?
ஆமாம்.. தலை சீவும் பழக்கம் ஆண்களிடையே மிகவும் குறைந்துவிட்டது. முடி கொட்டிப் போய் விடும், தலை சொட்டையாகிவிடும் என்ற பயத்தாலே பலரும் தலை சீவுவதே இல்லை. தலை முழுவதும் அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளன. தலை உச்சியில் 100 அக்குபஞ்சர் புள்ளிகள் சந்திக்கும் இடம் மற்றும் ஞாபக சக்தியை அதிகப் படுத்தும் புள்ளிகள் உள்ளன.
நாம் அடிக்கடி தலை சீவுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கல் நீங்கும். தூக்கத்திற்கான புள்ளிகள், செரிமானத்திற்குரிய புள்ளிகள் என பல புள்ளிகள் தலை சீவுவதால் தூண்டப்படும். எனவே குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருமே ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது அவசியம் தலை சீவ வேண்டும்.

தலைவாருதல் என்பது நம்முடைய ஒட்டுமொத்த நாடி நரம்புகளையும் புத்துணர்வுக் குள்ளாக்கி புதிய ஆற்றலோடு இயங்க வைக்கும்.

நமது வாசகர்கள் பெரும்பாலும் வணிகர்கள். அவர்களுக்கு தாங்கள் தரும் ஆலோசனை என்ன?
பகல் முழுவதும் உழைக்கும் வணிகர்கள் இரவில் தூங்குவதற்கு முன் கணுக்கால் மூழ்கும் வரை சூடு பொறுக்கும் அளவுக்கு தண்ணீரில் ஒரு பிடி கல் உப்பு கலந்து கால்களை கொஞ்ச நேரம் வைத்திருத்தல் வேண்டும். உப்புத் தண்ணீரில் கால்களை வைத்திருந்தால் உடலின் உள்ளுறுப்புகளில் உள்ள கழிவுகள் அனைத்தும் நகக் கண்கள் வழியாக வெளியேறிவிடும்.
வணிகர்களுக்கு வேலைப்பளு எவ்வளவுதான் இருந்தாலும் அவசியம் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். எந்த நேரத்தில் தண்ணீர் குடித்தாலும் உட்கார்ந்து, ஒவ்வொரு மடக்காக நாக்குகடியில் ஊற்றி உமிழ்நீருடன் கலந்துக் குடிக்கப் பழக வேண்டும். இதனால் நாம் பருகும் நீர் எல்லா உறுப்புகளுக்கும் சென்று சேரும்.

உங்கள் பணி உங்களுக்கு நிறைவாக இருக்கிறதா?
ஆம், முழு நிறைவாக இருக்கிறது. மக்கள் மத்தியில் அலோபதி மருத்துவம் எடுத்துக் கொண்டாலும் உணவு மருத்துவம் என்பது மிக மிக அவசியம். உணவே மருந்து என்ற முறையில் காய்கறி மருத்துவம் மற்றும் சிறுதானிய உணவின் அவசியத்தை வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்று இருக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் 2000 பேருக்கு மேல் காலை நேர உணவை இயற்கை உணவாக, அடுப்பில்லாமல் சமைத்து உண்பதற்கு நான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். முக்கியமாக மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித் திட்ட முகாம்களில் மருத்துவ முகாம் மூலம் இயற்கை மருத்துவம் என்றால் என்ன எனக் கற்றுக்கொடுத்திருக்கிறேன்.

பெண்கள் கல்லூரிகளுக்கு சென்று மன அழுத்தத்தை நீக்குவதற்கு பல வழிமுறைகளையும், அவர்கள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்சனையில் இருந்து தீர்வு காண்பதற்குமான பல வழிமுறைகளையும் கற்றுத் தந்திருக்கிறேன். இதுபோல பல ஊர்களுக்கும் சென்று மருத்துவ முகாம்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து வருகிறேன். ஊரடங்கு காலகட்டத்தில் யாரையும் சந்திக்க முடியாத போதும் கூட மக்களிடம் பிரச்சனையை அலைபேசியில் கேட்டு, கூரியர் மூலமாக எலக்ட்ரோ ஹோமியோபதி மருந்து மூலம் நல்ல தீர்வுகளை பெற்றிருக்கிறேன்.

114 தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்ட எந்த பக்க விளைவுகளும் இல்லாத மருந்தான எலக்ட்ரோ ஹோமியோபதி நல்ல தீர்வுத் தந்தது. எனவே வேர்ல்டு ரெக்கார்டிலும் இடம்பெற்றுள்ளேன். என்னால் இயன்ற அளவு என்னை தேடி வரும் அனைவரின் மன அழுத்ததையும் உடல் வியாதிகளையும் மேலும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதுவே என் வாழ்வின் லட்சியம்.

-சந்திப்பு: ஜோ.சலோ படங்கள்: அ.ஆன் ஜோயல்

3
2 Comments
  1. Selvan says

    Pasangalum ponnunga mari mudiya neelama valakanum ..,mudia peni kaakanum..,idhu punchabi ta pathurken,speciala care eduthukuvsnga punjabi singh..,neenga solradhu unmai sister..,vaalthukal

  2. Selvan says

    Mudi yai paramarkum ennam tamilnattil ilai,pengal mudiyai epdi paramarikirarhal pola punjab singh aangalum mudiyai valarkirhal,paramarikirarhal..,neenga lachum sonnenga sister .. nandri

Leave A Reply

Your email address will not be published.