கவிதாயினிக்கு ஒரு வேண்டுகோள்

கவிதாயினிக்கு ஒரு வேண்டுகோள்
கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் இணையர் கவிஞர் முனைவர் பாலரமணி அவர்கள். திருநீறும் குங்குமமும் நிறைந்த நெற்றியுடன் ஒரு குழந்தையைப் போல் சிரித்துச் சிரித்து பேசுபவர். தேவையற்ற சொற்கள் இல்லாது பேசும் தகைமையர். எண்ணற்றோருக்கு ஆத்மார்த்தமான நண்பர்.
சென்னை பொதிகை தொலைக்காட்சி நிலையத்தின் மேனாள் நிகழ்ச்சி இயக்குநர், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் முதல் கம்பர் விருதாளர், கலைமாமணி, கவிஞர், முனைவர். பத்து நாளில் திரும்ப வருவார் கவிஞர் பாலரமணி என நினைத்திருந்தோம்; திரும்பவியலாத இடத்திற்குச் சென்று விட்டார் எண்ணற்றோரின் அன்புத்தோழர்.

பாலரமணி – ஆண்டாள் பிரியதர்ஷினி இருவரும் மனம் ஒருமித்து கவிதைத்துறையில் தொலைக்காட்சி துறையில் வாழ்வில் ஒன்றாக நடை போட்டு பயணித்தவர்கள். கலையாற்றல் மிக்க இரு அன்புச் செல்வங்களை குழந்தைகளாக ஈந்து புறந்தந்தவர்கள். யாவரையும் உச்சி முகர்ந்து அன்பை பகிர்ந்தவர்கள் – அன்பின் வழியாக பெரும் அன்புபாலத்தை கட்டி யாவருக்கும் குளிர்தரு வனாந்திரமாக இருந்தவர்கள்.
செந்தமிழ்ச் செம்மல் பால இரமணியைக் காதல் கணவராக இதயத்தில் ஏந்தியிருந்த கவிதைச் சுடர் இப்போது அவரை ஒருபிடிச் சாம்பலாக கையில் ஏந்தி அன்றில் பறவையாக நிற்கிறார் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி. காலம் நேற்றும் என நம்புகிறோம். கடந்து வர இயலாது. தங்கள் நேச இணையரின் துணையோடு எழுதுகோலை திறந்திடுங்கள் கவிதாயினியே!
– ஜோ.சலோ
