கவிஞர் அறிவுமதி தமிழ் எழுத்தாளர்களுள் தமிழர்களுக்கானவர் !

0
1

கவிஞர் அறிவுமதி தமிழ் எழுத்தாளர்களுள் தமிழர்களுக்கானவர் !

எண்ணற்ற ஆளுமை மாதிரிகளை அடையாளப்படுத்தும் இந்நூலில் அன்றாடம் நாம் சந்திக்கிற, வாசிக்கிற ஒரு ஆளுமையைப்பற்றிப் பேசுவது சரியாக இருக்குமெனக் கருதுகிறேன். ஊக்குவித்தவன் ஊக்குவித்தால் ஊக்கு விற்றவனும் தேக்கு விற்பான் எனச் சொல்லப்படுவதுண்டு. அப்படி எண்ணற்ற இளையோரைத் தம் ஊக்கப்படுத்தலால் உருவாக்கி இருக்கும் ஆளுமையை அறிந்து கொள்வது நம் இலக்கிற்குத் துணை செய்யும்.

இழந்த உயிர்களோ கணக்கில்லை – இருமிச் சாவதில் சிறப்பில்லை – இன்னும் என்னடா விளையாட்டு – எதிரி நரம்பிலே கொடியேற்று – வீரத்தைக் குண்டுகள் துளைக்காது – விரனைச் சரித்திரம் புதைக்காது – நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்வாடகை மூச்சில் வாழாது குருதியை சூடாக்கும் வரிகள்.

2

காதலனோடு பேசிக் கொண்டிருக்கையில் தாவணியை சரி செய்தேன்
நண்பனோடு பேசிக் கொண்டிருக்கையில் தாவணியை சரி செய்தான்
-நட்பின் மேன்மையைச் சொல்லும் வரிகள்.

மர வியாபாரி பார்க்கிறான் வேர் முதல் கிளைவரை குருவிக்கூடு நீங்கலாக உயிர் நேயத்தை உள்ளத்தில் நிறுத்தும் வரிகள். இவை வெவ்வேறு கவிஞர்களின் குழந்தைகள் அல்ல காதல் – நட்பு – தாய்மை – சமூகம் – போர்க்குணம் – போராட்டம் – பெரியாரியம் – சாதி ஒழிப்பு – இன ஓர்மை – தெம்மாங்கு – இயற்கை என அத்தனை பரிமாணங்களிலும் தம் எழுதுகோலின் துளிகளை இளையோருக்குள் விதைகளாய் எறிந்த ஒரே பேராளுமையின் வரிகள்தான் என்ற உண்மையைச் சொன்னால் புருவங்கள் உயரும் சிலருக்கு.

எனது வார்ப்பு அல்ல – எனது வளர்ப்பு என எங்கள் ஞானஉழவன் கவிக்கோ அப்துல்ரகுமான் கட்டியணைத்துக் கொண்ட கவிஞன் அவர். அண்ணன்களின் தம்பியாக – தம்பிகளின் அண்ணனாக இதயத்து அறைகளை அன்பால் மட்டுமே நிரப்பிக்கொண்ட ஆண்தேவதை. ஹேப்பி பெர்த்டே டூ யு பாடலின் தலையில் சம்மட்டி அடிவைத்து நீண்ட நீண்ட காலம் நீடு வாழ வேண்டும் என அன்னைத் தமிழால் எங்கள் இல்லக் குழந்தைகளை முத்தமிடும் பெரிய தந்தை.
அவர்தான் விருத்தாசலத்திற்கு அருகில் உள்ள கண்விழிக்காத ஒரு குக்கிராமமான சு.கீணணூரில் பிறந்து விடுதலையின் பெருநெருப்பாய் தன் வானத்தை விசாலப்படுத்தக் கொண்ட பாவலர்அறிவுமதி.

அறிவுமதியின் இயற்பெயர் ‘மதியழகன்’. தனது நண்பர் ‘அறிவழகன்’ பெயரையும், தனது பெயரையும் சேர்த்து ‘அறிவுமதி’ என்று வைத்துக்கொண்டார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவரின் தமிழ் இலக்கியத்தின் மீது இருந்த விருப்பத்தைக் கண்டு கவிஞர் மீரா, கவிக்கோ அப்துல்ரகுமானிடம் அறிமுகப்படுத்தினார். மறைந்த திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவின் ஏழு படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை மற்றும் தமிழியக்கம் இணைந்து கவிக்கோ விருதை கவிஞர் அறிவுமதிக்கு அண்மையில் வழங்கியது. விருதைப் பெற்ற கவிஞர், விருதுக்கான தொகை ஒரு இலட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார்.
அவிழரும்பு, என் பிரிய வசந்தமே, நிரந்தர மனிதர்கள், அன்பான இராட்சசி, புல்லின் நுனியில் பனித்துளி, அணுத்திமிர் அடக்கு, ஆயுளின் அந்திவரை, கடைசி மழைத்துளி, நட்புக்காலம், மணிமுத்த ஆற்றங்கரையில், பாட்டறங் கவிதைகள், அறிவுமதி கவிதைகள், வலி ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், வெள்ளைத்தீ என்னும் சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ள கவிஞர் அறிவுமதி, நீலம் என்னும் குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.

ஏன் திரைப்படத்திற்குப் பாடல் எழுத வந்தீர்கள் என்ற வினாவிற்கு இப்படி பதில் சொல்கிறார் கையெழுத்துப் போடத்தெரியாத, ஆனால் வேகாத வெய்யிலின் புன்செய்க்காட்டு மண்ணை, மழை நனைப்பதற்கும் மேலாகத் தம் வியர்வைத்துளிகளால் நனைத்து நனைத்து பயிர்களை விளைவிப்பவர்களாகவும், பயிர்களோடு பயிராய்ப் பாடல்களை விளைவிப்பவர்களாகவும் இருந்த எம்மூர் தாய்களில் ஒருத்திக்கு மகனாகப் பிறந்ததுதான் நான் பாடலாசிரியனாக வந்ததற்குக் காரணம் என்று.

ஒரு செயலைத் தொடங்கும் போது அந்தப்பணியைச் செய்ய அவரிடம் காணப்படும் அர்ப்பணம், அந்தப் பணியில் பிறரின் பங்களிப்பைப் பாராட்டும் எண்ணம், தமது செயல்களுக்குக் குறுக்கே எதிர்படும் தடைகளைத் தகர்க்கும் துணிவு இம்மூன்றுமே அந்தச் செயலை முழுமைப்படுத்தும். அப்படி முன்னெடுத்த பணிகளை முழுமையாக்கும் மன பலத்தைத் தம் படைப்புகளால் தந்து ஒளி தருபவர் கவிஞர் அறிவுமதி.

தீர்வு காண இயலாமல் கிடந்த எண்ணற்ற சிக்கல்களுக்கு மறுப்பு சொல்லாமலும், அதே நேரத்தில் மருந்திட்டு விலகிக்கொள்ளாமலும் மிதிவண்டி ஓட்ட கற்கும்போது கீழே விழுந்து விழுந்து எழும் மனத்தை, நீச்சல் பழகும்போது தண்ணீரைக் குடித்துக் குடித்து விழி பிதுங்கும் உணர்வை ஏற்படுத்தி, ”கற்றுக்கொள் தம்பி! கற்றுக்கொள் தங்காய்ஞ் இதுதான் வாழ்க்கை தரும் அனுபவம்” என தம் கவிதைகளின்வழி இளைய உள்ளங்களுக்கு சொல்லித்தருபவர் அண்ணன் அறிவுமதி.
இளையோரை படைப்பாளியாகக் உருவாக்கி வரும் அறிவுமதி, ”தன் மார்பில் ஊறிக்கனக்கும் தாய்ப்பாலைத் தன் குழந்தைக்கு மட்டுமே என்று வைத்திருக்கத் தெரியாத தாய்கள் எங்களூர்த் தாய்கள். நானும் ஒரு மார்பில் பால்குடித்து வளர்ந்தவன் இல்லை. தாய்ப்பாலையே அடுத்த குழந்தைகளுக்கும் ஊட்டிப் பசியாற்றி மகிழ்கிற தாய்களின் வாழ்வில் பிறந்து வளர்ந்துதான் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

மற்றும் என் கவி ஆசான் அப்துல் ரகுமான் அவர்கள் தமக்கான விலை மதிக்கப்படமுடியாத இரவுகளை வளரும் கவிஞர்களுக்காகத் தந்து உதவிய அனுபவங்களும் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார் அடக்கத்தோடு ஒரு நேர்காணலில்.
இளைஞர்களின் இதயக் கிழக்குகளில் உள்ள எல்லா ஏக்கங்களும், திட்டங்களும், இலக்குகளும் கைக்கு எட்டி விடும் எனச் சொல்லிவிட இயலாது. ஆனால் அவை சிறிது நிறைவேற வேண்டுமெனிலும் துணிவு கொள்கிற நம்பிக்கையுடையவர்களாய் அவர்கள் மாறியிருக்க வேண்டும். இளைஞர்களின் மனதைத் தடமாற்றுவதற்கும், தடுமாற்றுவதற்கும் ஆயிரம் ஆயிரம் காரணங்கள் வரலாம். ஆனால் அதை உடைத்து சரியான திசையில் நகர்த்த ‘நம்பிக்கை’என்கிற ஒற்றைப்புள்ளியே அச்சாணியாகிறது. இந்த உண்மையை உரத்துச் சொல்லி, தம் நம்பிக்கை உளியால் இளையோரைச் செதுக்குபவர் பாவலர் அறிவுமதி.

அபிபுல்லா சாலையில் இருக்கிற பாவலர் இல்லத்தின் கதவு எண்தான் மாறியிருக்கிறதே தவிர என்னுடைய எண்ணங்கள் மாறிவில்லை. என்றைக்கும் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்து வருகிற இளைஞர்களுக்கும் ஒரு தாய்மைக் கூடாக இருந்து பல படைப்பாளிகளை வார்த்தெடுக்கக் கிடைத்த ஒரு தமிழ்க் கூடு. அது என் மூதாதையர்களின் “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்“ என்ற பண்பாட்டுத் தளத்தினுடைய வெற்றியாகவே பார்க்கிறேனே தவிர தனித்த அறிவுமதியினுடைய ஒரு குணமாகப் பார்க்கவில்லை என்ற அவரின் ஒரு பதிவு போதிமரத்தையே நமக்கு நினைவுபடுத்துகிறது.

பாரதியாரைப் போல், பாவேந்தரைப்போல் ஒவ்வொரு நூலும் பாடுபொருளிலும், நடை வடிவிலும், வெவ்வெறு தன்மையில் விளையவேண்டும் என்பதில் விழிப்பாக இருக்கிறேன் எனக்கூறும் பாவலர் அறிவுமதி, நாளைய தமிழ்ச் சமூகத்தைத் தாங்க தூண்களைத் தயாரிக்கும் பணியில் நிறைவான மனத்தோடு பணி செய்து வருகிறார்.

தம் ஒவ்வொரு எழுத்துப் பிரசவத்திலும் தமிழ்ச்சமூகத்தின் நலனுக்கான சொற்களைத் தவமிருந்து தந்து கொண்டே இருக்கிறார். எனவேதான் உரத்து உச்சரிக்கப்படுகிறார் கவிஞர் அறிவுமதி, தமிழ் எழுத்தாளர்களுள் தமிழர்களுக்கான எழுத்தாளராக முதல் வரிசையில் நிற்கும் கனிவும், துணிவும் கொண்டவர் என்று.

3

Leave A Reply

Your email address will not be published.