ஆளுமைகளை ஆக்கும் தாயன்பர்!

0
1

ஆளுமைகளை ஆக்கும் தாயன்பர்!

அம்மாவின் முந்தானையைப் பிடித்திருந்த கையை மெல்ல எடுத்துவிட்டு தன் விரலை அதில் கோர்த்து, அந்த அறைக்குள்ளே அழைத்துச் சென்றார். இதுவரை பட்டாம்பூச்சியென சுற்றித்திரிந்த என் சிறகுகள் இனி அந்த அறைக்குள்ளே முடக்கப்படப்போகிறது என்கிற பயத்தோடு உள்ளே நுழைகிறேன். எனது உயரம் என்பது என் அப்பாவின் தோள்மீதிருந்து தொடங்கிய அந்தக் காலத்தில், அவர் தோளிலிருந்து என்னை இறக்கி, அவர் அழைத்துச் சென்ற போது இனி நாம் நடப்பதற்கே அனுமதி கேட்க வேண்டும் என்கிற போது எப்படி பறப்பது? என விவரமறியா அந்த வயதில் எழுந்த வினாக்கள் தாம் எத்தனை? எத்தனை?.

ஆனால் அத்தனை வினாக்களின் தலையிலும் சம்மட்டி அடி இறக்கி, எழுவதற்கும் உயரந்தொடுவதற்கும் வாய்ப்பைக் கொட்டியது அந்த அறைதான், அதுதான் என் வகுப்பறை. அறைக்குள் தான் அமர்ந்திருந்தோம். ஆனால் அனுபவச் சிறகுகள் இமயத்தைத் தாண்டி அல்லவா பறந்து, எண்ணங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்குமான விடைகளை வாசலுக்கே அழைத்து வந்தன. அது தான் ஆசிரியர் என்னும் மந்திரச் சொல்லின் மகத்துவம்.

2

ஒரு நூலில் ஆயிரம் கருத்துக்கள் சிறந்து விளங்கினும் அந்நூலுக்கு முதன்மையாக விளங்கக்கூடியது முன்னுரை என்றழைக்கப்படும் பாயிரமே ஆகும். அது போல அறியாமை இருளகற்றி, அறிவொளி ஏற்றும் ஆசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஜோ.ஸ்டான்லி விக்டர். காற்றும் கவிதையும் கைகோர்க்கும் காவிரிக்கரையோர மலைக்கோட்டை மாநகருக்குச் சொந்தக்காரர். திருச்சியில் பிறந்து, வளர்ந்து, கல்வி பெற்று இன்று, கல்விப்பணியில் பொன்விழா கடந்து உயர்ந்து நிற்கும் கூடல்மாநகராம் மதுரையில் இயங்கிடும் புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி தமிழாசிரியராக ஒளிர்பவர்.

துன்பத்திற்கு காரணம் என்ன? எனத் தேடிய புத்தரின் தேடலுக்கான விடை போதிமரத்தடியில் கிடைத்தது. அதைப் போல அன்றாடம் நம்மில் எழுகிற ஆயிரமாயிரம் கேள்விகளுக்கான பதில் நாம் சந்திக்கிற அனுபவங்களில் கொட்டிக் கிடக்கிறது. அவற்றை அடையாளம் கண்டு அதை உள்வாங்கிக் கொள்வதே வாழ்வதற்கான வழி என்பதை தம் வகுப்பில் சொல்லித்தரும் அட்சய பாத்திரம்.

சிந்தனை என்பது அறிவின் விரிவாக்கம். செயல் என்பது அறிவின் பொருளாக்கம். அப்படியான விரிவாக்கத்தோடும், பொருளாக்கத்தோடும் நாளைய சமூகத்தின் செயலாக்கத்தை ஊட்டம் பெற வைப்பதற்கான முயற்சியில் எந்நேரமும் முன்னேறத் துடிக்கும் இவர் படித்த ஆசிரியர் அல்லஞ் படிக்கின்ற ஆசிரியர்.

கற்ற கல்வியாலும், கற்பித்த பாடங்களாலும் மாணாக்கர்களின் மனதில் குடியிருக்க துடிதுடிப்பாய் இயங்குபவர். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டத்தில் இணைந்து பணியாற்றியதோடு ஆக்கும் ஆளுமைகளாக மாணவர்களை புடமிட்டு உருவாக்கும் போதிமரம். மாற்றம் என்பது நம்மிலிருந்தே என்ற சிந்தனையை மாணவர்களிடையே விதைத்து நல்ல பலனுடன் விளைச்சல் கிடைக்குமெனக் காத்திருக்கும் இவருக்கு மதுரை, மல்லிகை அரிமா சங்கம் வழங்கிய நல்லாசிரியர் விருது, தாய் உள்ளம் அறக்கட்டளையின் செழுந்தகை சான்றோன் விருது,
அனைத்துலகப் பொங்கு தமிழ்ப்பேரவை மற்றும் பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கம் இணைந்து வழங்கிய தாயன்பர் விருது, பசுமை வாசல் பவுண்டேஷன், காருண்யம் டிரஸ்ட் மற்றும் ஒளிச்சுடர் சேவா டிரஸ்ட் இணைந்து தமிழ்ப் பணிக்காக கலைஞரின் முத்தமிழ் விருது, திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் பசுமை வாசல் பவுண்டேஷன் வழங்கிய அறிவு விருட்சம் விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

சமூகத்தில் வெற்றியாளருக்கும், தோல்வியாளருக்கும் வரலாற்றில் இடம் உண்டு. ஆனால் பார்வையாளருக்கு என்றுமே வரலாற்றில் இடமில்லை என்ற சிந்தனையுடன் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்பவனே சிறந்த பகுத்தறிவாளன் என்னும் பெரியாரிய சிந்தனையைக் கற்பிக்கவும் தவறியதில்லை என உரத்துக் கூறும் இவர் மாணவர்களின் இதயத்தில் உயரத்தில் இருக்கிறார்.

-யுகன்

 

3

Leave A Reply

Your email address will not be published.