திருட்டுப்போன வண்டியை ஒரே நாளில் கண்டுபிடித்த திருச்சி போலீஸ்!

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி வாகன திருட்டு என்பது நடந்து வருகிறது. இந்த நிலையில் சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரின் ஹோண்டா டியோ வாகனம் வீட்டு வாசலில் செப்டம்பர் 9 இரவு நிறுத்தி விட்டு சென்றிருக்கிறார். செப்டம்பர் 10 காலையில் பார்க்கும்போது வாகனத்தை காணவில்லை, இதையடுத்து பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றனர்.
புகார் அளிக்கச் சென்ற போதே காவலர்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரமாக பணியாற்றி இருந்திருக்கின்றனர்.
அந்நிலையிலும் புகாரைப் பெற்றுக்கொண்டு காவலர் வேல்முருகன், ஆய்வாளர் தங்கவேலு உடனடியாக விசாரித்து இருக்கின்றனர். தொடர்ந்து புகார் அளித்தவருடன் பணியாற்றக்கூடிய மற்றொரு நபரே வண்டியை திருடி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வண்டியை திருடியவரின் இல்லத்திற்குச் சென்று பார்க்கும் பொழுது ஒரு சந்திற்குள் வாகனத்தை மறைத்து வைத்திருந்திருக்கிறார். அதை பார்த்த உடன் போலீசார் உடனடியாக வாகனத்தை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் திருடிய நபரையும் கைது செய்துள்ளனர்.
வாகனம் காணாமல் போனதால் மன உளைச்சலில் இருந்த பாதிக்கப்பட்டவர்கள், ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மன நிம்மதி அடைந்தனர்.
