திருச்சியில் தொடர்ந்து 4வது நாளாக ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்கள் போராட்டம்!

0
1

தேர்வுகளைப் புறக்கணித்து தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று செப்டம்பர் 7 ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்கள் திருச்சி ஹோலிக்கிராஸ் கல்லூரி வாயிலின் முன் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாணவி ஒருவர் நம்மிடம் கூறியது, ஆசிரியர் பட்டயப் பயிற்சி (Diploma in Teacher Education) படிப்பை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்படிப்பின் தேர்வு முடிவுகளில் சுமார் 98% பேர் தோல்வியடைந்து(Fail) வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமான மாணவர்களின் தேர்வு முடிவுகளில் கடந்த 3 ஆண்டுகளாக வெறும் 2% பேர் கூட தேர்ச்சி பெற முடியவில்லை.

2

ஆசிரியர் படிப்பு என்பது திறன் சார்ந்த படிப்பு. இதற்கென்று தனியாக பாடநூல்கள் கிடையாது. அசிரியர் படிப்பின் இப்படிப்பட்ட தனித்தன்மை காரணமாக பள்ளிப் படிப்பில் உள்ளது போல், விடைக்குறிப்பு (Answer Key) அடிப்படையில் விடைத்தாள் திருத்தும் நடைமுறை ஆசிரியர் படிப்பில் இல்லை. மாணவர்கள் தங்கள் அனுபவங்களிலிருந்து பதிலளிக்கும் வகையில் தேர்வு வினாத்தாள்கள் இருக்கும்; இதற்கேற்பவே விடைத்தாள் திருத்தும் முறையும் இருக்கும்.

ஆனால், விடைக்குறிப்பு (Answer Key) ஒன்றை தயார் செய்து அதில் உள்ளபடியே பதில் இருந்தால் மட்டுமே மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு புதிதாக உத்தரவு போடப்பட்டுள்ளது. இவ்வாறு வினாத்தாள் திருத்தும் முறையானது, இப்படிப்பிற்கும், படிப்பிற்கான தேர்வு முறைக்கும் முற்றிலும் பொருந்தாதது ஆகும். இதனால்தான் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைகின்றனர்; தோல்வி அடைய வைக்கப்படுகின்றனர்.

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கும் துறை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பெரும் முரண்பாடுகள் காரணமாக ஆசிரியர்களைப் பழிவாங்கவே, ‘இவ்வாறுதான் விடைத்தாள் திருத்த வேண்டும்’ என்று கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு உத்தரவு போட்டுள்ளனர். இப்பிரச்சினைக்கான காரணமாக இது ஒருபக்கம் சொல்லப்பட்டாலும், மறுபக்கம் மிக முக்கியமான காரணம், தேசிய கல்விக் கொள்கை தான். ஏனெனில், ஆசிரியர் பட்டயப் பயிற்சிப் படிப்பை தேசிய கல்விக் கொள்கை(NEP) முற்றிலுமாக ஒழித்துக்கட்டவே வலியுறுத்துகிறது.

இத்தகைய மோசமான நெருக்கடிகளால் தான் கடந்த சில ஆண்டுகளாக இப்படிப்பில் மாணவர்கள் சேர்வதே இல்லை. மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் கல்லூரிகள் இழுத்துமூடப்பட்டு வருகிறது.

 

இப்படிப்பட்ட பிரச்சினைகளை சரி செய்யாமல், போதுமான கால அவகாசம் வழங்காமல் அவசர அவசரமாக தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தேர்வுகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

“ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஆசிரியராகலாம்” என்ற அருமையான வாய்ப்பை வழங்கி வந்த இப்படிப்பினை, பாஜக அரசு கல்விக் கொள்கை மூலமாக அழிக்கப் பார்க்கிறது; பணம் படைத்தவர்களும், உயர்சாதியினரும் மட்டுமே ஆசிரியராகலாம் என்ற நிலையை உருவாக்க பாஜக அரசு முயற்சித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று சொன்ன திமுக அரசு இதை தடுத்த நிறுத்த வேண்டும்.

எனவே,ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்பை பாதுகாத்திடவும். ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்துவதில் பழைய நடைமுறையையே தொடர்ந்திடவும். அரசு நிறுவனமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மீண்டும் மாணவர் சேர்க்கையை தொடங்கிடவும். அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்வுகளை ரத்து செய்து, ஒரு மாத காலம் நேரடி வகுப்புகள் நடத்தி தேர்வுகளை நடத்திடவும். பழிவாங்கும் நோக்கில் ஆசிரியர்களுக்கு கொடுத்த 17B தண்டனையை வாபஸ் வாங்கவும் வலியுறுத்தி நான்காவது நாளாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றோம் என்று கூறினார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.