“புதுவாழ்வு” எனத் தொடங்கிய என் கதைகள் முதுதமிழ் எழிலரசி திருமதி கேத்தரீன் ஆரோக்கியசாமி சிறப்புப் பேட்டி

0
1

“புதுவாழ்வு” எனத் தொடங்கிய என் கதைகள் முதுதமிழ் எழிலரசி
திருமதி கேத்தரீன் ஆரோக்கியசாமி சிறப்புப் பேட்டி

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆரோக்கியசாமி அவர்களின் மனைவி, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, பல்வேறு கலை இலக்கிய அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர், ‘சேவைச் செம்மல்’, ‘சிறுகதை செம்மணி’ உள்ளிட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர், சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர் திருச்சி எழுத்தாளர் திருமதி கேத்தரின் ஆரோக்கியசாமி. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற வழக்கமான சிந்தனையை உடைத்து, உச்சம், திடம், ஞானம், உயிர்ப்பு என எழுத்தாளராக, சமூக செயல்பாட்டாளராக தொடர்ந்து இயங்கி வருகிறார்.

‘என் திருச்சி-தடம்’ வாசகர்களுக்காக அவர் இங்கே பேசுகிறார்.

2

எழுத்தின் வழி நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் என்று நம்பக் காரணமாக இருந்தவர் யார்?
என் அம்மா திருமதி தங்கமணி அவர்கள். வாழ்வின் அழகை, மேடு பள்ளங்களை அறிய வைத்து என் வாழ்க்கைப் பாதைக்கு வெளிச்சமாயிருந்தவர் என் அம்மா. அவர் என் உள்ளத்தில் விதைத்த ஆன்மீகம், அன்பு, ஒழுக்கம் ஆகியவற்றையே என் வாழ்நாளின் ஒவ்வொரு நாளிலும் என் எழுத்தின் வழியிலும், ஏதாவது ஒரு செயலின் வழியிலும் விதைத்துக் கொண்டே இருக்கிறேன்.

யாருடைய உந்துதல் உங்களை எழுத்தாளராக இயங்க வைக்கிறது ?
இறைநம்பிக்கையும், தன்னம்பிக்கையும் சேரும் போது அது முழு நம்பிக்கையாகும் என்பர். எனக்கு அந்த இரு நம்பிக்கையுடன் என் கணவரின் உடனிருப்பே எனக்கு பெரும் பலமாக அமைந்தது. கவிஞர் என்ற அறிமுகத்தில் ஒரு சில கதைகளை மட்டுமே எழுதிய என்னை, சிறுகதைகளை எழுத உந்தியது அவர். ஒரு சிறந்த எழுத்தாளர். இடையறாத மக்கள் பணிகளுக்கு மத்தியிலும் எழுத்தின் மீது அவர் கொண்டிருந்த காதல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. என் தொடர் இயக்கத்திற்குக் காரணம் என் எண்ணங்களில் வாழும் என் கணவர் எழுத்தாளர் ஆசாவின் உந்துதலின்றி வேறேதும் இல்லை.

நீங்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பதன் ரகசியம்?
கல்லூரி காலத்தில் எழுதி வந்த என் எழுத்துப் பயணத்தில் சிறிது இளைப்பாறுதல் ஏற்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகே, தொடங்கியது என் எழுத்துப் பயணம். சென்னை, பிராட்வேயிலிருந்து வெளி வரும் ‘அருள் ஊற்று’ இதழிலே ”புது வாழ்வு” என்ற என் முதல் கதை வெளிவந்தது. பிரான்சிஸ்கன் ஒலி, ஞானத்தூதன், அன்னை வேளாங்கண்ணி, அன்னையின் அருட்சுடர், நந்தவனநாதம் உள்ளிட்ட பல இதழ்களில் எனது கதைகள் வெளிவந்தன. என் எழுத்துப் பயணத்தில் என்னுடன் கைகோர்த்தவர் என் உயிர் நண்பி திருமதி லூர்து பொற்செல்வி. நான் சோர்ந்து போகும் போது அன்புக்கரம் நீட்டுபவர். ‘புதுவாழ்வில்’ தொடங்கிய எனது எழுத்துப் பயணம் இன்று ஐந்து நூல்களின் ஆசிரியராக என்னை மாற்றியிருக்கிறது.

உற்சாகமூட்டல் என்பது இன்றைய எழுத்தாளர்களுக்கு அவசியமானதா?
உற்சாகமூட்டல் மிக அவசியமானது. எனது வளர்ச்சிக்கு உற்சாகமூட்டல் முக்கிய காரணமாக இருந்துள்ளது. உற்சாகப்படுத்துவதே பலம் என்ற மன உணர்வில் சிறு வயது முதலே வளர்க்கப்பட்டவள் நான். முதுகிற்கு பின்னால் ஒரு காரியம் செய்யலாம். அது தட்டிக் கொடுத்தல் மட்டுமே என்பார்கள். எனது பெற்றோர் தொடங்கி, பலரும் தட்டிக் கொடுத்து தட்டிக் கொடுத்து உருவாக்கினர்.
நான் எழுதிய படைப்புகளை எனது கல்லூரி காலத் தோழியர் மார்கிரேட், லீனா இல்டா ஆகியோரின் பாராட்டே எண்ணற்ற பரிசுகளை அந்தக் காலத்தில் எனக்குப் பெற்றுத் தந்தது. அகில இந்திய வானொலியில் தற்காலிகப் பணியிடத்தில் பணியாற்றி குரலின் வழி சேவையாற்றிய பொழுதுகள் என் மனத்தில் பசுமையாக இருக்கின்றன. அப்படி வளர்ந்ததால் நம்மை உற்சாகப்படுத்துபவர்கள் நம்மைச் சுற்றி எப்போதும் இருப்பதாக என்னை தகவமைத்துக் கொண்டேன். நம்மை சுற்றி, நம் நலன் விரும்பிகள் நிரம்பிய சூழல் ஏற்படுகிற போது அது நேர்மறைச் சூழலாக மாறிவிடுகிறது என்பதையும் அனுபவத்தின் மூலம் புரிந்து கொண்டேன்.

உங்கள் கதைகளின்வழி எக்கருத்துக்களை வெளிப்படுத்துகிறீர்கள்?
வாழ்வின் எதார்த்தத்தை, வாழ்க்கையின் இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு, உணர்வுப்பபூர்வமான, இயல்பான, எளிமையான நடையில், வாழ்க்கைக்கான அறக்கருத்துக்களை முன்மொழிபவையே என் கதைகள். தர்மம், சகோதரத்துவம், கருணை, கடமை, நிதி அன்பு இந்த மதிப்பீடுகளே என் கதைகளின் வெளிப்பாடு.
சிறுகதைப் பயணத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் என்று நினைத்ததுண்டா?
தீயின் வெம்மை, தென்றலின் இனிமை, கனியின் சுவை, மின்னலின் ஒளி, காதலின் இதம் என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். மீனவர்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய ‘கடலோடிகள்’, துப்புரவுப் பணியாளர்களின் நிலையை வெளிப்படுத்தும், ‘செய்யும் தொழிலே தெய்வம்’, மீ டூ உரத்து பேசப்பட்ட காலத்தில் வெளிவந்த ‘எனக்கும் தான்’ என ஒவ்வொரு கதையும் ஒரு ரகம். இந்தப் பயணத்தில் வெற்றி – தோல்வி என்கிற மனநிலை ஏதுமில்லை. வீட்டிற்குள்ளே முடங்கிவிடாது இயன்றவரை இயங்குகிறேன். மனம் நிறைவாக இருக்கிறது.

உங்கள் எழுத்துக்களுக்கான அங்கீகாரங்களைப்பற்றி ?
‘அருட்கலைஞர்’ தொடங்கி, திருச்சியின் பெண் எழுத்தாளர் விருது வரை எண்ணற்ற விருதுகள் தேடி வந்திருக்கின்றன. 175 ஆண்டுகள் பாரம்பரியமிக்க திருச்சி தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு நான் எழுதிய ‘விடியும் நேரம்’ என்னும் சிறுகதைத் தொகுப்புப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளதும், இளைய தலைமுறையினரின் உருவாக்கத்திற்கு என் எழுத்துக்கள் பயன்பட்டிருப்பதையும் என் வாழ்நாளின் கௌரமாகக் கருதுகிறேன்.

இளையோருக்குத் தாங்கள் சொல்ல வருவது?
தோல்விகள் ஏற்பட்டால் அதை எண்ணி நொறுங்கி விடாமல், எதிர்த்து மோதி, எந்தப் பிழையால் இந்தத் தவறு ஏற்பட்டது என்பதை உணர்ந்து பயணிப்பது தான் வெற்றிக்கு வழி செய்யும். பொறுமையும், நிதானமும் ஆன்மாவின் குணங்கள் என்று சொல்கிறார்கள். அந்த வழியில் சென்று வெற்றி அடைந்தவர்கள் ஆயிரமாயிரம் உள்ளனர். அவர்களை உங்களின் மாதிரிகளாக முன்னிறுத்துங்கள். வெற்றிக்காக காத்திருக்காதீர்கள். வெற்றிக்காக உழையுங்கள். முயற்சிகள் பல செய்து, விடாமுயற்சியுடன் உழையுங்கள். போராடும் போது, “வீண்முயற்சி செய்கிறாய்” என்றவர்களே, நீங்கள் வென்ற பிறகு, “விடாமுயற்சியுடன் உழைத்தவர்” என்று புகழாரம் சூட்டுவார்கள்.

சந்திப்பு : ஜா.சலேத், பாரத் படங்கள் : அபிஅழகி

3

Leave A Reply

Your email address will not be published.