அக்காவை நேரில் பார்த்த தம்பி கண்ணீர்: ஆதரவற்ற விடுதியில் நெகிழ்ச்சியான சம்பவம் !

தஞ்சாவூர் அரசு குழந்தைகள் இல்லத்தில் இன்று நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது நடைபெற்ற நிகழ்வில் அக்காவை பலநாட்கள் கழித்து நேரில் பார்த்த ஆனந்தத்தில் தம்பி ஒருவன் கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுத சம்பவம் பலரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தஞ்சாவூர் மேம்பாலம் அருகே அரசு குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஆதரவற்ற நிலையில் தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள்.
கொரோனா காலத்தில் பள்ளியும் திறக்கப்படாததால், விடுதியிலேயே அடைபட்டு மன இறுக்கத்தில் உள்ள இந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் வந்து மாணவர்கள் மத்தியில் நகைச்சுவையாக பேசி, பாட்டுப்பாடி மகிழ்வித்தார்.

முன்னதாக மாணவர் இல்லத்துக்கு வேறு கட்டிடத்திலிருந்து மாணவிகள் வந்தபோது, மாணவன் அரவிந்தன் (14) என்பவன் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான். அவனை ஆசிரியர்கள் விசாரித்த போது, அக்கா மீனா(15)விடம் செல்ல வேண்டும் என்றான். உடனடியாக அக்கா அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் அரவிந்தனை அமர வைத்தனர்.
வெகு நாட்களாக பார்க்காமல் இருந்ததால், அக்காவை பார்த்ததும் அரவிந்தன் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான். அவனை அக்கா மீனா அழ வேண்டாம் என கூறி சமாதானம் செய்தார். இந்த சம்பவம் அங்கிருந்து ஆசிரியர்கள், பெண் போலீஸார் உள்ளிட்ட அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அப்போது ஆசிரியர்கள் கூறுகையில், ”இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித்தனி விடுதியில் தங்கியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே இருந்து இங்கு வந்துள்ளனர். அவர்களுக்கு யாரும் கிடையாது, மாதத்துக்கு இரண்டு முறையாவது இருவரும் சந்தித்துக் கொள்வார்கள், தற்போது இரண்டு வாரம் கழித்து இங்கு மீனாவை அழைத்து வந்ததும், அரவிந்தன் கண்ணீர் விட்டான், சிறிது நேரத்திலேயே உற்சாகமடைந்துவிட்டான். அக்காவை சில நாட்கள் கழித்து பார்த்ததில் கண்ணீர் விட்டுள்ளான்” என்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரோபா சங்கர் கூறுகையில்: ”கரோனா முதல் அலையின் போது பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சை மையத்தில் பார்த்து அவர்களிடம் நகைச்சுவையாக பேசி மன இறுக்கத்தை போக்க தஞ்சாவூரில் தான் முதலில் அந்த நிகழ்வை துவக்கினேன்.
அதே போல் தற்போது அரசு குழந்தைகள் இல்ல மாணவர்களிடம் மன இறுக்கத்தை போக்கி, ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்வை இங்கு துவக்கியுள்ளேன். இனி தமிழகம் முழுவதும் இதுபோன்ற ஊக்கநிகழ்வுகள் நடத்தப்படும். இங்கு படிக்கும் மாணவர்கள் 5 பேரின் உயர்கல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். கரோனா தொற்று ஏற்படாத வகையில் அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, நம்மை நாமே பாதுகாத்து கொள்ளவேண்டும்” என்றார்.
