அதிக லாபம் தரும் போன்சாய்..! திருச்சியில் விற்பனை….

0
1

அதிக லாபம் தரும் போன்சாய்..! திருச்சியில் விற்பனை….

பெரிய மரத்தின் குறைபிரசவம் தான் ‘போன்சாய்’ என நினைத்தால், உங்கள் அனுமானம் தவறு..!

வளர வேண்டிய மரத்தின் கிளைகளை கத்தரித்து, அதன் வளர்ச்சியின் உயரத்தை தொடவிடாமல் குறைத்து, அதேநேரம் பார்வைக்கு அழகாக இருக்கும் வண்ணம் சீர்திருத்தி (விருப்பத்திற்கு ஏற்ப கம்பி கட்டி வளைத்து), பூந்தொட்டிகளிலோ, சட்டிகளிலோ வளர்க்கும் முறையே ‘போன்சாய்‘ என்றழைக்கப்படுகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு, சீன மக்களின் கலையாக‘ போன்சாய்‘ இருந்தாலும், பிற்காலங்களில் ஜப்பானில் அக்கலை, கால் வைத்ததும், அது ஜப்பானிய கலைகளில் ஒன்றாக மாறி அறியப்படுகிறது. புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் மினியேச்சரை (போன்சாய்) தங்கள் இல்லங்களில் வளர்த்து, அதன் மூலம், அந்த வீடு, புத்தரின் ஆசி பெற்ற வீடாக மாறியதாக ஜப்பானியர்கள் நம்பிக்கை கொண்டனர்.

2

உலகம் முழுக்க இக்கலை பரவத் தொடங்கியதும், பலரும், தங்கள் நாடுகளில் உள்ள பிரம்மாண்ட மரத்தினை ‘போன்சாய்“ மரங்களாக வளர்த்து பெருமிதம் கொண்டனர். இந்தியாவில், நீண்ட விழுதுகள் கொண்ட ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட ஏராளமான மர வகைகளை தங்கள் இல்லங்களில் போன்சாய்களாய் வளர்த்து மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகின்றனர். “குறைந்த நீரில், குறுகிய இடத்தில், வீட்டிற்குள்ளேயே ஒரு தோட்டத்தை பராமரிக்கும் மன ஆறுதல் கொள்ளும் வாய்ப்பு, இந்த “போன்சாய்“ வளர்ப்பில் உள்ளதாக” கூறுகிறார் திருச்சியில், தஞ்சை செல்லும் சாலையில், பழைய பால்பண்ணை அருகில், தனரத்னம் நகரில், போதி நர்சரி & அக்வேரியம் என்ற பெயரில் போன்சாய் வளர்த்து விற்பனை செய்து வரும் ஜி.லட்சுமணசாமி.

”திருச்சியில் பிறந்து, எம்.சி.ஏ. படித்து, பெங்களுரில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கு முன்பு, கோத்தாரி பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றினேன். அப்போது தான் திசு வளர்ப்பு குறித்து அறிந்தேன். அப்போது பெங்களுர், லால்பார்க்கில் நடைபெற்ற மலர் கண்காட்சிக்கு சென்றேன். அங்கே மிகவும் சிறியதான மரம், 70 வயதுடையது என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன். அப்போதிருந்து போன்சாய் மரம் குறித்த தகவல்களை சேகரிக்கத் தொடங்கினேன்.

பெங்களுரில், ஒரு பழைய கட்டடத்தை இடித்த போது, அதன் இடிபாடுகளில் வளர்ந்திருந்த சிறிய வாழைமரத்தினை சிதைக்காமல், போன்சாய் வளர்ப்பிற்கான இலக்கணத்துடன், இலைகளை வெட்டி, சீரமைத்து, வளர்த்தேன். இதைக் கண்ட எனது நண்பர்கள், போன்சாய் வளர்ப்பிற்கு ஊக்கப்படுத்தினர். தொடர்ந்து திருச்சியில் போன்சாய் வளர்ப்பு மற்றும் விற்பனை நிலையத்தை தொடங்கினேன்” என்றார்.

திருச்சியில் போன்சாய் மரத்திற்கான வரவேற்பு எந்தளவிற்கு உள்ளது?போன்சாய் மரங்களை, சென்னை, ஐதராபாத், பெங்களுர் போன்ற நகரங்களில், குறிப்பாக ஐ.டி. துறையில் உள்ளவர்கள், பெரும் பணக்காரர்கள் மட்டும் தான் வாங்குவார்கள் என்று நினைத்தேன். ஆனால் இது குறித்த அறிவு பலரிடம் உள்ளது என்பதை திருச்சியில் விற்பனையை தொடங்கிய பின்பே நான் அறிந்து கொண்டேன்.

Banyan, Adenia,  Cacti, Crassulla (Jade Plane) என ஏராளமான வகைகள் உள்ளன. போன்சாய் மரம் குறித்து நன்கு அறிந்தவர்கள், வளர்க்கும் முறையினை தெரிந்தவர்கள், என்னிடம், தோற்றம், வயது, மரத்தின் வகையினை தெரிவித்து, அது போன்றதொரு மரம் வேண்டும் என முன்பணம் கொடுத்து ஆர்டர் செய்கிறார்கள். போன்சாய் குறித்த அறிவும், ஆர்வமும் பலரிடத்திலும் உள்ளது. புதிதாக வாங்குபவர்கள், வளர்ப்பு முறைகள் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வதோடு, அவ்வப்போது தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கூறி தெளிவு பெறுகிறார்கள். நேரடியாக வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி நர்சரி நடத்துபவர்களும் என்னிடம் மரத்தினை வாங்கிச் சென்று விற்கிறார்கள்.

உங்கள் நர்சரியில் அதிக வயதுடைய மரங்கள் உள்ளதா? அதன் விலை என்ன.?
எனது அக்வேரியத்தில் 60 வயதுடைய பைகாஸ் வகை மரங்கள், 35-40 வயதுடைய நான்கு ஆலமரங்களை வைத்துள்ளேன். இவையெல்லாம் சராசரியாக ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வரை விலை போகக் கூடியவை. ஆனால் அவற்றை நாங்கள் விற்பதில்லை. குறைந்த வயதுடைய மரங்களைத் தான் விற்கிறோம். அதிக வயதுடைய மரங்கள் வேண்டும் என்று யாராவது வரிந்து கேட்டால், நாங்கள் அத்தகைய விற்பனையாளர்களிடமிருந்து வாங்கித் தருகிறோம். தற்போது எங்களிடம் பரிசளிக்கவென்று ரூ.600 முதல் ரூ.5,000 விலையுள்ள மரங்களையே பெரும்பாலும் வாங்கிச் செல்கின்றனர். மருத்துவர்கள் சிலர் பத்தாயிரம், இருபதாயிரம் என விலையுள்ள மரங்களை வாங்கிச் செல்கின்றனர்.

மரங்களின் வயது தான் அதன் விலையை நிர்ணயம் செய்கின்றதா.?
வயதை அடிப்படையாக கொண்டு மட்டும் விலை நிர்ணயம் செய்வதில்லை. அதன் தோற்றம் முக்கியம். போன்சாய் மரங்களை வியாபார ரீதியாக விற்பவர்களுக்கு அதனை வளர்க்கும் நுணுக்கம் தெரியும். வளர்க்கும் போதே அதன் கிளைகளை எப்படி வெட்ட வேண்டும். பார்வைக்கு அது வெட்டியது போல் தெரியக் கூடாது. எந்த பாதையில் அது வளைந்து வளர்ந்தால் அதன் தோற்றம் அழகானதாக, முதிர்ந்த, தோற்ற உறுதியுடன் இருக்கும் என்பதை அறிந்து அதன்படி வளர்க்கின்றனர். நாம் நம் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்தாலும், அதற்குரிய இயல்பான குணம் தான், அதன் தோற்றத்தை வெளிக் காண்பிக்கும். அத்தகைய மரங்களில், பட்டை உறிந்த நிலையில், பெரிய மரங்களை காணும் தோற்ற மாறுதலின்றி, சிறிய வடிவில் காண்பதே அதிக விலைக்கு விற்கப்படுகிறது. வண்ண பூக்கள் கொண்ட மரங்களும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

பொதுவாக பயிர்கள் என்றாலே பூச்சி தாக்குதல்கள் இருக்கும். அது போன்ற நிலையை எப்படி எதிர்கொள்வது?
போன்சாய் மரத்தினை பொறுத்தவரை பூச்சிகள் தாக்கும் வாய்ப்பு குறைவு. வேரடியில் அதிக நீர் நின்றாலே போன்சாய் மரம் இறந்துவிடும். எனவே நீர் தேங்காத வண்ணம் போன்சாய் வளர்ப்பதால், பூச்சி தாக்குதலிற்கான வாய்ப்பு குறைவு. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, மண்ணில் லேசாக ஈரப்பதம் ஏற்படும் வண்ணம் அதன் மீது தண்ணீர் தெளித்தாலே போதும். செடியாக இருக்கும் போது பூச்சி தாக்கினால், இரண்டு சொட்டு வேப்பெண்ணையை தண்ணீரில் கரைத்து, மரத்தின் மீது லேசாக தெளித்து விட்டாலே போதும். இதற்கென தனியாக ஆர்கானிக் மருந்துகள் விற்கப்படுகின்றன. ஆனால் அவற்றிற்கான தேவை என்பது மிகவும் குறைவு தான்.

பெங்களுரிலிருந்து கொண்டு வந்து இங்கு வைத்து விற்பதாக கூறுகிறீர்களே. அங்கே எந்நேரமும் குளுமையாக இருக்கும். திருச்சியில் வெயில் அதிகளவு தாக்குமே.? போன்சாய் வளர்ப்பதற்கான சீதோஷ்ண நிலை என்ன.?            பெரும்பாலான போன்சாய்மரங்கள், காய்ந்த மண்ணில் வளரும். இரண்டு நாட்களுக்கு, வாரத்திற்கு ஒரு முறை லேசாக தண்ணீர் ஊற்றினாலே போதும். விவசாயம் செய்வது போல் மழை, கிணற்று நீரை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. போன்சாய் வளர்ப்பிற்கு ஒரு டேங்கர் லாரி தண்ணீர போதும். போன்சாய் மரத்தினை தினமும் இரண்டு மணி நேரம் வெயில்படும்படி காட்டினாலே போதும்.
பெங்களுரிலிருந்து மைசூர் செல்லும் சாலையில், பல கிராமங்களில் போன்சாய் வளர்க்கிறார்கள். தண்ணீரே இல்லாத, பொட்ட காடு என்பார்களே அது போன்ற கிராமத்தில் கூட இந்த போன்சாயினை வளர்க்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது பத்துப், பதினைந்து ஏக்கரில் மண்பானை செய்பவர்கள் போல் போன்சாய் மரங்களை அழகிய வேலைப்பாடுகளுடன் வளர்க்கிறார்கள் .போன்சாய் மரங்களை நட்டு வளர்த்து, விற்பனைக்கு ஏற்ற நிலை வரும் போது, பெங்களுர், லால்பார்க்கில் உள்ள மலர் கண்காட்சி கடைகளில் கொடுத்துவிடுவார்கள்.

விவசாயிகள் நிர்ணயித்த விலைக்கு விற்ற பின், கடைகாரர்களின் கமிஷன், ஜி.எஸ்.டி. போன்றவைகளை எடுத்துக் கொண்டு, மீதி பணத்தை அந்த விவசாயியிடம் கொடுத்துவிடுவார்கள் (திருச்சியில், இருசக்கரவாகனம்-செகண்ட் சேல்ஸ் விற்பனை போல்). கர்நாடகாவில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்தவர்கள், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, உணவு பயிர் விவசாயத்தை விட்டுவிட்டு தற்போது போன்சாய் வளர்க்கிறார்கள். பொதுவான செடிகளை வளர்க்கும் நர்சரி விற்பனையாளர்கள், கூட்டாக இணைந்து, வெளிநாடுகளிலிருந்து போன்சாய் மரங்களை இறக்குமதி செய்து விற்கிறார்கள். போன்சாய் வளர்ப்பு பல லட்சம் வர்த்தகம் நடைபெறும் தொழிலாக மாறி வருகிறது.

போன்சாய் வியாபாரத்தில் எல்லோரும் ஈடுபட முடியுமா?
முதலீடு செய்ய பணம் இருக்கிறது என்பதற்காக, லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு எல்லோரும் போன்சாய் விற்பனையில் ஈடுபட முடியாது. போன்சாய் வளர்ப்பு குறித்து தெளிவும், அறிவும் இருந்தால் மட்டுமே விற்பனையாளராக வெற்றி பெற முடியும். விற்பனைக்கு வாங்கும் போன்சாயை வளர்க்கும் முறை தெரியாவிட்டால் அது இறந்துவிடும். அப்போது நாம் போட்ட முதலீடு வீணாகிவிடும்.

மொத்த விலையில் பெங்களுரில் 50, 100 போன்சாய்களை வாங்கி வந்து விற்கும் போது, திருச்சி சீதோஷ்ண நிலைக்கு எந்தச் செடி தாங்கும் என்பதை அறிந்து வாங்க வேண்டும். நாம் வாங்கும் போன்சாயின் சந்தை மதிப்பு தெரிய வேண்டும். நான் 20 ஆண்டு காலம் போன்சாய் வளர்ப்பு, விற்பனை குறித்து அறிந்தே பின்பே இந்த தொழிலில் ஈடுபடுகிறேன்.

எதிர்காலத்தில், வாரிசுகளுக்கு பயன்படும் வகையில் ஏதாவது விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் சம்பாதிப்பவர்கள், நகைகளிலும், மனைகளிலும் முதலீடு செய்வது நடைமுறை.  நேர்மையாக பணம் சம்பாதித்து, சொத்து சேர்க்க நினைப்பவர்கள், தாறுமாறாக(!) உழைக்க வேண்டும். ஆனால் லட்சுமணசாமி சொல்வதை பார்த்தால், போன்சாய் வளர்ப்பிற்கு பெரிதான முதலீடு, அதிக உழைப்பு தேவை இல்லை. அதிக ஈடுபாடும், பொறுமையும் இருந்தால் போதும்.
திருமணமாகி புதுமண தம்பதிகள் நாலாயிரம், ஐந்தாயிரம் விலையில் ஒரு போன்சாயினை வீட்டில் வாங்கி வைத்து, அதை வளர்க்கும் முறையினை வளரும் குழந்தைகளுக்கு சொல்லி வைத்தால் போதும். குறிப்பாக பெண் பிள்ளை என்றால், வளர்ந்து திருமண வயதில், போன்சாயை விற்று திருமண செலவை ஈடுகட்டிவிடலாம் போல் தெரிகிறது.

இங்கே மற்றொரு விஷயத்தையும் சொல்லி யாக வேண்டும். வீடுகளில், வண்ணமீன் வளர்ப்பவர்களுக்கு ஏற்படும் உணர்வுகள் தான் இந்த போன்சாய் வளர்ப்பில் உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது. போன்சாய் வளர்ப்பு, அதிர்ஷ்டம் தரும் என்பது நம்பிக்கை. மனஅமைதி தரும் என்பது நிஜம்.  20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட போன்சாய், ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வரை விலை போகிறது என்பது போன்சாய் பற்றி தெரியாதவர்களுக்கு ஆச்சர்யமான தகவல் தான். வியாபாரத்தை விடுங்கள். ‘போன்சாய்’ வளர்ப்பு மனதை அமைதியாக்குகிறது என்றால் வாங்குபவர்களுக்கு விலை ஒரு பொருட்டா என்ன.?

3

Leave A Reply

Your email address will not be published.