அம்பானி ஆவதே… என் இரும்புக் கனவு! நஜீமா ஃபாரிக்..!

0
1

நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்ற ஆசை, திட்டம் ஏதும் உள்ளதா..?
உள்ளது.. பத்தாண்டுகளில், அதாவது 2031ல் நான் இந்தியாவில், இன்றைய அம்பானியை போல் கோடீஸ்வரியாக இருப்பேன்.

வழக்கமாக ஒரு பத்திரிக்கையாளர் சாதாரணமாக கேட்கும் இந்த கேள்விக்கு கூறிய ஒரு சுவாரஸ்யம் ததும்பும் பதிலாகவே முதலில் பட்டது. ஆனால் அவரோ, “அம்பானி ஆவதென்பது என் உறுதியான நம்பிக்கை. இது விளையாட்டான பதிலல்ல” என்று அழுத்தமாக கூறிய போது முந்தைய சுவாரஸ்யம் இப்போது ஆச்சர்யமாக மாறியது.

தென் இந்தியாவில், மெட்ரோ நகரங்கள் வரிசையில் கூட இல்லாத ஒரு மாநகரில் வர்த்தகம் செய்து வரும் ஒரு பெண்மணி கூறிய இந்த பதில் நம்மை ஆச்சர்யப்படச் செய்வதில் தவறில்லை தானே..!

2
மார்ச் 16-31, பிசினஸ் திருச்சி இதழில் வெளிவந்தது

நஜீமா ஃபாரிக்..!
திருச்சி ஏ.எம்.கே. ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் நஜீமா ஃபாரிக் தான் அந்த ஆச்சரியமான பெண்மணி..!

திருச்சியில் பிரபலமான ஸ்டார் மற்றும் மெகா ஸ்டார் திரையரங்கத்தின் உரிமையாளர் எம்.எஸ்.சிராஜீதின் மகள் நஜீமா ஃபாரிக்.

ஏ.எம்.கே. ஸ்டீல்ஸ் என்ற பெயரில் கட்டுமான பொருட்களை விற்பனை செய்து வரும் எம்.கே.சர்புதீன் என்பவரின் மகன் எம்.கே.எஸ்.முகமது ஃபாரிக். முகமது ஃபாரிக்கை திருமணம் செய்த நஜீமா ஃபாரிக் ஒரு குடும்ப பெண்ணாக வீட்டில் இருந்து கொண்டு அன்றாட வீட்டு வேலைகளுடன் கணவனின் அலுவல் பணிகளுக்கும் உதவியாக இருந்து வந்துள்ளார்.

பொதுவாக வியாபாரத்தில் பணம் கொடுப்பதில், ஆண்களுக்கு உள்ள தாராள போக்கு பெண்களிடத்தில் இருக்காது. அதே குணாம்சம் தான் நஜீமா ஃபாரிக்கை வியாபாரத்தில் நேரடியாக ஈடுபட வைத்துள்ளது.

“உண்மை தான். என் கணவர் நிறைய வாடிக்கையாளர்களுக்கு கடனில் அதிகம் பொருட்கள் கொடுத்து வந்தார். அதுவும் சில, நீண்ட கால தவணையாக இருந்தது. அது நீடித்த வியாபாரத்திற்கு உதவாது. வீட்டில் இருந்து கொண்டு வரவு செலவு கணக்குகளை பார்த்து வந்த நான், பின்னரே நேரடி களத்தில் இறங்கினேன்” என்கிறார் நஜீமா.

பணத்தை, ‘இறுக்கிப் பிடிக்கும்’ பெண்களுக்கே உரிய இயற்கை குணம் தான் உங்களை வியாபாரத்திற்குள் இழுத்தது. அப்படித் தானே..?
அப்படியில்லை. வியாபாரம் என்றால் முதல் கவனம் நாம் விற்ற பொருள் பணமாக திரும்பி வர வேண்டும். அது இல்லாமல் தாராளமனப்பான்மையுடன் வியாபாரம் செய்தால் ஏமாற்றுபவர்கள் பலரும் நம் கடை வாசலில் வரிசை கட்டி நிற்பார்கள். அது நீண்ட கால வர்த்தகத்திற்கு சாத்தியப்படாது தானே.!

குடும்ப பெண்ணாக இருந்த நீங்கள் கட்டுமான பொருட்கள் விற்பனை துறையில் நிர்வாகம் செய்வது ஆச்சர்யமாக உள்ளது.!
இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. நான் பிபிஏ முடித்துள்ளேன். என் தாத்தா 22×22 சுருட்டு விற்பனை செய்து வந்தார். அதன் பின் என் அப்பா அந்த தொழிலை செய்தார். எனவே வியாபார பாரம்பரியம் என்பது எனது மரபிலேயே (Genetic) உள்ளது. ஸ்டீல் தொழிலில் ஈடுபட்டு வரும் நான் இரண்டாவது தலைமுறை. எனக்கு திருமணம் முடிந்து 20 வருடங்களாகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாகத் தான் நான் வியாபாரத்தில் நேரடி களத்தில் இருக்கிறேன்.

கட்டுமானத்திற்கு தேவையான இரும்புப் பொருட்களை நீங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறீர்கள். உங்கள் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் நீங்கள் எந்த வகையில் தரமான பொருட்களை தருகிறீர்கள்?
நான் போட்டியாளர்களை பற்றி பெரிதாக ஆராய்ச்சி செய்வதில்லை. நாம் கொடுக்கும் பொருள் தரமானதாகவும், சரியான விலையிலும் இருக்க வேண்டும். ஏ.எம்.கே. ஸ்டீல் பொருட்கள் அப்படிப்பட்டது தான்.

பெர்கர் பெயின்ட் (BERGER PAINTS), முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது மிகுந்த தரமானது என்பது அதை பயன்படுத்துபவர்களுக்கு கண்டிப்பாகத் தெரியும். பெர்கர் பெயிண்டிற்கு நாங்கள் தான் விநியோகஸ்தர். பெயிண்ட் வர்த்தகத்தில் மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது பெர்கர் சிறந்ததொன்று.

“எந்த பெயிண்ட் மற்றவற்றுடன் ஒப்பிடும் போது அதிக காலம் நீடித்து நிலைக்கும்”… என நீங்கள் வேண்டுமானால் ஒரு பெயிண்டரிடம் சென்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் பெர்கரை தான் முன்னிறுத்துவார்கள். கட்டட வடிவமைப்பாளர்கள் எங்கள் நிறுவன கட்டுமான பொருட்களையே பெரும்பாலும் பரிந்துரை செய்வார்கள்.

எது தரமோ அதை மட்டும் விற்பனை செய்தால் போதும். தரத்தில் அதிகம் கவனம் செலுத்தினால் விற்பனை எளிதாகிவிடும். போட்டியாளர்களை பற்றி யோசிக்கத் தேவையில்லை. ‘தரம் எங்கள் தாரக மந்திரம்’ என்று சொல்வார்களே அது தான் எங்கள் ஸ்லோகனும்(SLOGAN).

எங்கள் பொருளை வாங்கி உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர் அதன் தரத்தை பற்றி மற்றொருவருடன் பகிர்தல் மூலம் விற்பனை பெருக வேண்டுமே ஒழிய, ஒரு முன்னணி தொலை காட்சியில் மணிக்கொரு முறை, “என் பொருள் தான் தரமானது, தரமானது” என கூவிக்கூவி விற்க வேண்டும் என்று விரும்பியதில்லை. நாங்கள் விளம்பரத்தால் வாழ முயற்சிப்பதில்லை. நிஜத்தில் வாழவே நினைக்கிறோம்.

ஒரு முன்னணி தொலைகாட்சியில் மணிக்கொரு முறை, “என் பொருள் தான் தரமானது, தரமானது” என கூவிக்கூவி விற்க வேண்டும் என்று விரும்பியதில்லை. நாங்கள் விளம்பரத்தால் வாழ முயற்சிப்பதில்லை. நிஜத்தில் வாழவே நினைக்கிறோம்.

மார்ச் 16-31, பிசினஸ் திருச்சி இதழில் வெளிவந்தது

1972ஆம் ஆண்டு, திருச்சி மாவட்டம், விராலிமலையில் ஏ.எம்.கே. மெட்டல் இன்டஸ்ட்ரி என்கிற பெயரில் இரும்பு தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இங்கு ANGLE, CHANNEL, MS SQUARE, MS ROUND, MS FLATS, JOIST போன்ற கட்டுமானப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அனைத்து அளவுகளிலும், தடிமனும் கொண்ட சதுரம், செவ்வகம் மற்றும் உருளை வடிலான பைப்புகள் தயாரித்து விற்கும் APL APOLLO PIPES & TUBES நிறுவனத்தின் திருச்சி, புதுகை, நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கான அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராகவும், AMMAN TRY, PULKIT TMT BARS, JSW NEOSTEEL PURE TMT BARS, JSW CEMENT மற்றும் BERGER PAINTS நிறுவனத்தின் விநியோகம் மற்றும் விற்பனையாளராகவும் ஏ.எம்.கே. ஸ்டீல்ஸ் நிறுவனம் உள்ளது. திருச்சி மாநகரில், காஜாபேட்டை, மார்சிங் பேட்டை, சங்கிலியாண்டபுரம், மன்னார்புரம் மற்றும் சென்னை, கோவை ஆகிய பகுதிகளில் கிளைகள் உள்ளது. மதுரை ரோட்டில் இதன் கார்ப்பரேட் அலுவலகம் உள்ளது.

தொழிலில் உங்கள் ரோல் மாடல் யார்.?
வேறு யார். என் அப்பா தான். அவரை பார்த்து கற்ற வித்தை தான் எனக்கு பெரிய வியாபார அறிவைத் தந்தது.

நீங்கள் பொறுப்பேற்ற பின் ஏற்பட்ட மாற்றங்கள், வளர்ச்சிகள் என்ன..?
2 ஆண்டுக்குள் பெரிய வர்த்தக சந்தை யை ஆக்ரமித்துள்ளது ஜே.எஸ்.டபிள்யு. சீட்ஸ். நாங்கள் தான் மார்க்கெட் லீடர் என்று கூட சொல்லலாம். பெயிண்ட்ஸ், ஸ்டீல்ஸ், கட்டுமான கம்பிகள் என அனைத்து பொருட்களின் விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

மதுரை ரோட்டில் உள்ள எனது கார்ப்பரேட் அலுவலக கட்டிடத்தில் ஏ.எம்.கே. ஹால் திறந்தோம். கொரோனா காலம் தொடங்கிய போது தான் அது திறக்கப்பட்டது. நாங்கள் நிர்ணயித்த வாடகையில் பாதியை தான் அப்போது பெற்றோம். ஓர் ஆண்டு காலத்தில் சுமார் 250 நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. காலத் திற்கேற்ற விலை குறைப்பும் ஒரு வியாபார யுக்தி தானே. இப்போது நிறைய புக்கிங் ஆகிறது. தொடக்கத்தில் நிர்ணயித்த வாடகையை இப்போது முழுமையாக பெறுகிறோம்.

எனது மகள் எம்.பி.ஏ. முடித்து தற்போது FRONTIER FASHION BOUTIQUE என்ற பெயரில் ஆடை வடிவமைப்பு துறையில் கவனம் செலுத்தி வருகிறார். மருமகன் ZAZZLE BRIDAL STUDIO என்ற பெயரில் அழகியல் துறையில் உள்ளார். அடுத்தடுத்த தலைமுறைகள் தொழிலில் கவனம் செலுத்துவதே வளர்ச்சி தானே.

கொரோனா காலத்தில் பலருக்கும் உதவிப் பொருட்களை கொடுத்தீர்கள் என்று அறிந்தோம்.?
அது என்ன பெரிய விஷயமா. சிரம காலத்தில் மக்களுக்கு உதவவில்லையென்றால் வேறு எப்போது.? எல்லோரும் செய்தார்கள். நானும் செய்தேன். சமூக செயல்பாடுகளில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு. ஏழை மாணவர்களுக்கு படிப்புதவி செய்கிறேன். சிலர் என்னிடம் வேலை கேட்டு வருகிறார்கள். தகுதியை பொறுத்து என் நிறுவனத்திலோ அல்லது பிற இடங்களிலோ நான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறேன். அவ்வளவு தான். எனது சமூக செயல்பாடு தான் இப்போது என்னை அரசியலுக்குள் இழுத்துள்ளது.

மக்களுக்கு உதவிட அரசியல் ஒரு பெரிய வாய்ப்பு என்று நினைக்கிறேன். என்னாலான உதவிகளை மக்களுக்கு செய்திட அரசியல் பாதையில் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம்.

3

Leave A Reply

Your email address will not be published.