அலங்காரங்களில் அசத்தும் பல வண்ண வாழை திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையத்தின் புதிய கண்டுபிடிப்பு

0
1

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் அடிப்படையில், வாழை உற்பத்தியில் அடுத்தடுத்த பரிணாமங்களையும், விவசாயிகள் பயன் பெறும் வகையிலும் திருச்சி அருகே போதாவூரில் செயல் பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.  தற்போது, அந்த வகையில், புதிய வகை அலங்கார வாழை மரங்களை உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளது.  இது குறித்து வாழை ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி ராமஜெயத்திடம் பேசிய போது,

பொதுவாக வாழை மரங்களை விசேஷ வீடுகளிலும் பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளிலும் நுழைவாயில்களில் வைப்பார்கள். அந்த வாழை மரங்களை அலங்கார வேலைகளுக்கும் பயன் படுத்தும் வண்ணம் புதிய ரக வாழைகளை உற்பத்தி செய்ய முற்பட்டோம். அதில் வெற்றியும் கண்டுள்ளோம்.  இரண்டு வெவ்வேறு ரக வாழை கன்றுகளை மகரந்த சேர்க்கை மூலம் கலப்பின முறை செய்து இந்த புதிய ரகத்தை உருவாக்கியுள்ளோம். பொதுவாக, மண்ணின் தன்மை சுற்றுச்சூழலை பொறுத்து வாழை உற்பத்தி ரகங்கள் மாறுபடுகின்றன.

உதாரணமாக, இங்கு விளையும் வாழை இமாச்சல் பிரதேசத்திலோ, அங்கு விளையும் வாழை தமிழ்நாட்டிலோ வளராது. ஆனால், தற்போது கண்டுபிடித்துள்ள வண்ண வாழை விளைச்சலுக்கு சூற்றுச்சூழல் பிரச்சனையே கிடையாது, எந்த மண்ணிலும் எந்த தட்பவெப்ப சூழ்நிலையிலும் வளரும். பராமரிப்பு முறை ஒன்று தான். இது சாதாரண வாழை மரங்கள் போன்று இருக்காது.

2

பொதுவாக வாழை மரங்கள் பூமி பார்த்து பூவைக்கும். இந்த ரக வாழை மரங்களோ வானத்தை பார்த்து பூவைக்கும் குணம் கொண்டவை. இதில், நீலம், சிவப்பு, பின்க் உள்ளிட்ட பல்வேறு கலர்களில் பூக்களை உருவாக்க முடியும். அதே போல் வாழை இலைகளும் பின்க் கலரில் இருக்கும். இந்த இலைகளில் ஆண்டி ஆக்சிடன்ட் அதிகம் இருப்பதால், இந்த வாழை இலையில் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தன்மை இதில் அதிகம் இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு திறனே உடலுக்கு முக்கிய பங்காற்றுகின்றன.

மேலும் இந்த இலைகளை பொக்கேகளில் பின்பகுதியில் வைப்பதற்கு பயன்படுத்தலாம். பூக்களைக் கொண்டு பொக்கே செய்யலாம். உணவு மற்றும் தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், கடைகளில் அலங்காரத்திற்காகவும் தண்ணீரில் வைக்கும் பூக்களுக்கு பதில் இவைகளை பயன் படுத்தலாம். வீட்டுத் தோட்டத்தில் அலங்கார மரமாகவும் வைக்கலாம். இவை சாதாரண வாழைகளை போன்று பெரிய மரங்கள் கிடையாது. அதிகபட்சம் 6 அடி தான் வளரும். வாழைத் தண்டுகளை விட சற்று பெரிய அகலம் கொண்டவையாக இருக்கும். எளிதில் கையாள முடியும்.

பூக்கள் முழுமையாக விரிய 3 மாதங்கள் வரை நேரம் எடுக்கும். இந்த வாழைப் பழங்களை சாப்பிட முடியாது. இது அலங்காரத்திற்கு மட்டுமே. நர்சரி வைத்திருப்பவர்கள் இந்த மரங்களை விற்பனைக்கு வைக்கலாம். அலங்கார பணி மேற்கொள்வோர் இந்த வகை வாழைகளை பயன்படுத்தலாம்.

சாதாரண பூக்களை காட்டிலும் இவை விலை குறைவே. நாங்கள் ஒரு மரக்கன்று ரூ.150க்கு விற்பனை செய்கிறோம். ஒரு வருடத்தில் இந்த கன்றின் மூலம் 50 கன்றுகள் வரை பெற முடியும். அதை விற்பனை செய்வதன் மூலமும் வருவாய் ஈட்ட முடியும். எனவே, ஒரு முறை வாங்கினாலே போதும்.  தற்போது, வாழை ஆராய்ச்சி நிலையம் 400 வெவ்வேறு விதமான கலர்களில் வளரும் வண்ணம் வாழை விதைகளை உற்பத்தி செய்து பயிரிட்டுள்ளோம்.

இந்த ரக வாழை கன்றுகளை ஒரு சிலர் வந்து வாங்கிக் கொண்டு செல்கின்றனர். தொடர்ந்து மக்களிடம் விற்பனை செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.

ச.பாரத்

3

Leave A Reply

Your email address will not be published.