திமுக எம்எல்ஏவை வாழ்த்தி போஸ்டர் ஒட்டிய திருச்சி அதிமுக நிர்வாகி நீக்கம்:

திமுக எம்எல்ஏவை வாழ்த்தி போஸ்டர் ஒட்டிய திருச்சி அதிமுக நிர்வாகி நீக்கம்:
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சமயபுரம் எஸ்.முருகானந்தம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக எம்.எல்.ஏ கதிரவனை வாழ்த்தி போஸ்டர் ஒட்டி இருந்தார். இச்சம்பவம் அதிமுகவினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்த புகார், அதிமுக தலைமைக் கழகத்திற்கு சென்றது. இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அதிமுகவுக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திருச்சி மாநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் எஸ்.முருகானந்தம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் எனக் கூறப்பட்டிருந்தது.
