வெந்தயக்களி செய்வது பற்றி தெரிந்துகொள்வோமா?

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு மாதம் ஒருமுறை வரும் பிரச்னையின் போது, (மாதவிடாய்) அவர்கள் படும் வேதனை சொல்ல முடியாது. ஏனெனில் எல்லோரும் தற்கால பழக்கத்திற்கு ஆளாகி சிக்கன், மற்றும் ஃபார்ஸ்ட் ஃபுட் கலாச்சாரத்திற்கு மாறி விட்டதுதான். அடிவயிறு வலி, வெள்ளை படுதல், சூட்டை தணிக்க வெந்தயக்களி ஒரு சிறந்த உணவு. அந்தக்காலத்தில் வயதுக்கு வந்த குழந்தைகளுக்கு வெந்தயக்களி, உளுந்தங்களி, நாட்டுக்கோழி முட்டை என எல்லாவற்றையும் தருவார்கள். அவர்கள் இடுப்பு எலும்பு பலப்படும் என்பார்கள். அதுமட்டுமல்ல. அவர்கள் உடல் குளிரவும்தான். உடல் சூடாவதால்த்தான் இந்தமாதிரி பிரச்சனைகள் மாதவிடாய் நாட்களில் ஏற்படுகிறது. அதனை தவிர்க்க எளிய வழி பழங்காலத்தில் பாட்டி நம் அம்மாக்களுக்கு செய்து கொடுத்த வெந்தயக்களி, உளுந்தங்களி இன்னும் பலப்பல..
இன்று வெந்தயக்களியைப் பற்றி பார்க்கலாமா?
வெந்தயம் – 500 கிராம், பச்சரிசி மாவு – 200 கிராம், வெல்லம் , கருப்பட்டி – 100 கிராம், சுக்குதூள் – அரை தேக்கரண்டி, ஏலக்காய் – 2 (தூளாக்கவும்) நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

ஏலக்காய், வெல்லம்(அ) கருப்பட்டியை தூளாக்கவும். வெந்தயத்தை வெறும் கடாயில் சிவக்க வறுத்து தூளாக்கவும்.
அரிசிமாவில், வெந்தயமாவு, தண்ணீரை கலந்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.
வெல்லம்(அ) கருப்பட்டியை தூளாக்கி நீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். பின்னர் அதனை பாகாக காய்ச்சி வைத்துக்கொள்ளவும்.
பின்னர் கடாயை அடுப்பில் இட்டு சிறிது நெய் ஊற்றி அரிசி மாவு, வெந்தயமாவு கலந்த கலவையுடன்பாகாக காய்ச்சி வைத்த வெல்லம்(அ) கருப்பட்டி பாகை மாவில் விட்டு கிளறவும். மாவு கைகளில் ஒட்டக்கூடாது. அந்த பதம் வந்தவுடன் இறக்கி வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சுக்கு, மற்றும் ஏலக்காய் தூளை கலந்து கிளறி இறக்கவும்.
சிறிய கிண்ணங்களில் நிரப்பி குழந்தைகளுக்கும், வயது வந்த பெண்களுக்கும், ஏன் வயதானவர்களும் கூட சாப்பிடலாம். உடல் சூட்டைத் தணிக்கும். வாரம் ஒரு முறை இதனை செய்து தாருங்கள்.
