அரசின் கல்வி உதவித்தொகையில் தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் படிப்புகள்!

0
1

பருவநிலை மாற்றத்தைப் போல, கொரோனா தொற்றின் தாக்கம் பல விசயங்களை புரட்டிப் போட்டிருக்கிறது. கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளில் கல்வியாண்டின் தொடக்கம் என்பதால் ஜூன் மாதம் பள்ளி – கல்லூரிகள் களை கட்டும். இப்போதோ, மாணவர்களின் கால் தடங்களற்று பொலிவிழந்து கிடக்கின்றன பள்ளி – கல்லூரி வளாகங்கள்.

சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற கதையாக 2020-21 கல்வியாண்டு கடந்து சென்றுவிட்டது.

போட்டிகள் நிறைந்த உலகில், அதனோடு எதிர்நீச்சல் போட தங்கள் பிள்ளைகளையும் எப்படியும் நல்ல படிப்பு படிக்க வைத்து பெரிய ஆளாக்கிவிட வேண்டுமென்ற வேட்கை எல்லா பெற்றோர்களுக்குமே இருக்கத்தான் செய்யும். அவர்களது கனவு நனவாவதெல்லாம், அவரவர் பொருளாதார வசதிகளிலிருந்தே முடிவாகிறது. போதாக்குறைக்கு கொரோனா பாதிப்பு வேறு.

2

அன்றாடங்காய்ச்சிகளின் நிலை என்றில்லை உத்திரவாதமான வாழ்க்கை என்று அதுவரை நம்பிக்கொண்டிருந்தார்களோ அவையெல்லாம் தகர்ந்து, பல நடுத்தர குடும்பங்களையும் நிலைகுலைய வைத்திருக்கிறது. கொரோனா பாதிப்பால் வேலையிழந்து, வாழ்விழந்து, எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சத்தின் பிடியில் இருத்தப்பட்டிருக்கிறார்கள். கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் சமூகதாக்கம், பல பெற்றோர்களை அரசுப்பள்ளி – கல்லூரிகளை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.

தனியார் பள்ளிகள் வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்திலிருந்து 75% மட்டுமே பெற்றோர்களிடமிருந்து வசூலிக்க வேண்டுமென்று தமிழக அரசு சொல்லியிருக்கிறது. எத்தனை தனியார் கல்வி நிறுவனங்கள் இதன்படி குறைந்த கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இவற்றுக்கு மத்தியில், குறைந்த கல்வி கட்டணத்தில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்ற தனியார் கல்வி நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி ஒரு தனியார் கல்வி நிறுவனத்தை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு மிகச் சமீபத்தில் கிட்டியது.

திருச்சி – சிறுகனூரில் இயங்கி வரும் எம்.ஏ.எம். கல்வி நிறுவனம் ஒரே வளாகத்தில் பொறியியல் கல்லூரி தொடங்கி பள்ளி வரையில் நடத்தி வருகிறது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் இசுலாமிய மதச்சிறுபான்மையினரின் கல்வி நிறுவனம். மற்ற தனியார் கல்வி நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் குறைந்த கல்வி கட்டணமும் சுற்று வட்டார குக்கிராமங்களுக்கும் பேருந்து சேவையை அளித்திருப்பதன் மூலம் பெயர் வாங்கிய கல்வி நிறுவனமாக அமைந்திருக்கிறது. மிக முக்கியமாக, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு முற்றிலும் கட்டணமில்லா சேவையை வழங்கிவருகிறது, இக்கல்வி நிறுவனம். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு அரசு தரப்பில் வழங்கும் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கும் இவர்கள் உதவி செய்வதோடு, அரசின் அந்த உதவித்தொகையை வைத்துக்கொண்டே படிப்பை முடிக்க வகை செய்கிறார்கள்.

இவர்களது இத்தகைய முயற்சி, கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பயனுள்ள ஒன்றாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, சுற்றுவட்டார கிராமத்தினர் தங்களது பிள்ளைகளை பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்த்து படிக்க வைத்துள்ளனர். கிராமப்புறங்களில் பத்தாம் வகுப்பு முடித்த பிள்ளைகளை அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகளை பன்னிரெண்டாம் வகுப்பு படிக்க வைத்து பின்னர் கல்லூரிக்கு அனுப்பி வைக்க எந்தப் பெற்றோரும் விரும்புவதில்லை. அவர்களது பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்காது என்பதும் டிகிரி முடித்தும் அதற்குப் பொருத்தமான வேலை வாய்ப்புகள் இன்றி கிடைத்த வேலைக்கு செல்ல வேண்டிய அவலநிலை காரணமாகவும் அவர்களின் ஆகச்சிறந்த தெரிவாக பாலிடெக்னிக் படிப்புகள்தான் இருக்கின்றன.

பல்லை கடித்துக்கொண்டு மூன்று வருடம்  படிக்க வைத்துவிட்டால், எந்தக் கம்பெனியிலாவது சேர்ந்து மாசம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்து பிழைத்துக்கொள்வார்கள் என்ற யதார்த்தம் காரணமாகவும் பாலிடெக்னிக் படிப்பை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

கொரோனா பேரிடர் காலத்தில், இத்தகைய வாய்ப்புகள் நிச்சயம் ஆறுதல் அளிக்கின்றன. இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதன் வழியாக  நம்மால் முடிந்த நாலு பேருக்கு நன்மையாவது கிட்டட்டுமே!

எம்.ஏ.எம். பாலிடெக்னிக் கல்லூரி, சிறுகனூர்.

(www.mampc.org ) (தொடர்புக்கு: 7708211811)

3

Leave A Reply

Your email address will not be published.