திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க என்ன நடவடிக்கை ? பல சரமாரி கேள்விகள் !
மதுரை கேகே நகரைச் சேர்ந்த வெரோனிக்கா மேரி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு இதுவரை என்ன நடவடிக்கை என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த மனுவைப் விசாரித்த நீதிபதி எம் எஸ் ரமேஷ், புகழேந்தி அமர்வு, அடுக்கடுக்கான கேள்விகளை மத்திய அரசு மீது முன்வைத்தனர்.
திருச்சி பெல் நிறுவனத்தில் ஒரு மணி நேரத்தில் 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கான சூழல் உள்ளதா, திருச்சி சிவா எம்.பி அனுப்பிய கடிதத்தின் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுத்த அரசு…. பெல் நிறுவனத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது, அவசர காலத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள், செங்கல்பட்டு தடுப்பு வளாகத்தின் உற்பத்தித்திறன் எவ்வளவு, மத்திய அரசுக்கு சொந்தமான பல்வேறு தடுப்பூசி தயாரிக்கும் மையங்கள் உள்ள நிலையில் பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பயன்படுத்தி உற்பத்தி செய்வது ஏன், கடந்த ஐந்து ஆண்டுகளாக தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு, அரசுக்கு சொந்தமான தடுப்பூசி மையங்களை ஏன் இன்னும் புனரமைக்க வில்லை என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர் நீதிபதிகள்.
மேலும் அடுத்த அமர்வு 19ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
மேலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் கூறியுள்ளனர்.