தினம் ஒரு திருத்தலம் ; மங்களாசாசனம் பெற்ற திவ்யதேசம்

0
1

தினம் ஒரு திருத்தலம்

மங்களாசாசனம் பெற்ற
திவ்யதேசம்

உறையூர்

2

புராணப்பெயர்
திருக்கோழியூர், நிசுளாபுரி
மூலவர்
அழகிய மணவாளப் பெருமாள்
தாயார்
கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்
கல்யாண தீர்த்தம், சூர்ய புஷ்கரணி
பாடல் வகை
நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பாடியவர்கள்
திருமங்கையாழ்வார்

தலவரலாறு

ரங்கநாதரின் பக்தனான நங்க சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்யம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மஹாலக்ஷமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி ரங்கநாதர் அனுப்பினார்.
ஒருசமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, ‘கமலவல்லி’ (கமலம்- தாமரை) என பெயரிட்டு வளர்த்தான்.
பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள்.
அப்போது, ரங்கநாதர் அவள் முன்பு குதிரையில் சென்றார்.
அவரைக்கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண்டாள். அவரையே மணப்பதென உறுதி பூண்டாள்.
நந்தசோழனின் கனவில் தோன்றிய பெருமாள், தான் கமலவல்லியை மணக்கவிருப்பதாக கூறினார். எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார். அங்கு ரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். பின்பு மன்னன், உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.

ஆலய அமைப்பு

ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் அமைந்த ஆலயம். ராஜகோபுரத்தை அடுத்து பலிபீடம், கருடாழ்வார் சன்னதி உள்ளது.
மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லித் தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர்.
மூலவர் வடக்கே திருமுகம் கொண்டு நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
வலது கரம் அபய பிரதானம் செய்து கொண்டிருக்க இடது கரம் கதை ஏந்தியுள்ளது. மேற்கரங்களில் சங்கு சக்கரம் உள்ளது. வலதுபுறம் தாயார் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். கைகளில் வரத ஹஸ்தம், தாமரை உள்ளது.
மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை. பிரகாரத்தில் ஆழ்வார்களின் சன்னதி உள்ளது. திருக்குளத்தின் வடக்கே
திருப்பாணாழ்வார்
தனிச்சன்னதியில் இருக்கிறார்.

அமைவிடம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம். திருச்சியில் (5 கி.மீ)
இருந்து பேருந்து வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோயில்,
உறையூர்,
திருச்சி மாவட்டம்
620 003.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சிறப்பு

திருப்பாணாழ்வார் அவதார தலம்.

பெருமாள் தலங்களில் வைகுண்ட ஏகாதசியின்போது, சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், இத்தலத்தில் தாயார் மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள்.

தை அல்லது மாசியில் வரும் ஏகாதசியன்று இங்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.

-பெ.விஜயகுமார்

3

Leave A Reply

Your email address will not be published.