ஏப்ரல்16 சார்லி சாப்ளின் பிறந்த நாள்

0

ஏப்ரல்16 சார்லி சாப்ளின் பிறந்த நாள்

அரை இன்ச் மீசை… ஆம் இதை மட்டுமே அடையாளமாகக் கொண்ட இருவரில், ஒருவர் உலகை ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி ஹிட்லர். மற்றொருவர் இன்றைய தினத்தில் பிறந்த நகைச்சுவை உலகின் பிதாமகன் சார்லி சாப்ளின். ஹிட்லர் பத்தாண்டுகளில் மண்ணோடு மண்ணாக காணாமல் போய்விட்டதும் வரலாற்றில் களங்கமாய் வேறு மாதிரி நீங்காமல் பதிவானதையும் அறிவோம். சார்லி சாப்ளின் மட்டும் காலங்களைக்கடந்து இன்றும் நம் எல்லோரின் புன்னகையில் வாழ்கிறார்.

தரையில் இருந்து சிகரத்தைத் தொட்ட சாதாரண தன்னம்பிக்கைக்கான வாழ்க்கை அவருடையது இல்லை. பள்ளத்தாக்கையே சிகரமாக மாற்றிக் காட்டிய சாகச வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் அவர்! சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்பதுதான் சார்லி சாப்ளினின் முழுப்பெயர்! 1889-ம் ஆண்டு இதே ஏப்ரல் மாதம் 16-ந்தேதி பிறந்தவர். ஹாலிவுட் திரையுலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று இவர் தொடாத திசைகளே இல்லை. காட்டாத முகங்கள் இல்லை. சாப்ளினின் புன்னகைக்குப் பின்னால் கண்ணீர்த்துளிகள் நிறைய உண்டு. லண்டனில் மிக மிக வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து பெற்றோரது திருமண வாழ்க்கை முறிந்து போனது. தந்தைவிட்டுச் சென்றதும் தனது அன்னையின் கண்காணிப்பில் வறுமையில் வளர்ந்தார். ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் தன் சகோதரருடன் வளர்ந்த சாப்ளின், பசியில் அழாத நாட்கள் இல்லை. சாப்ளினின் தந்தையும் இவரது 12-வது வயதில் இறந்தும் போனார் . இதனால் தாயார் நிரந்தரமாக மன நலம் பாதிக்கப்பட்டார். காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்ட்டு அனாதையானார் சாப்ளின்.

முதன் முதலில் 1894-ம் ஆண்டில் மியூசிக் ஹாலில் பணியாற்றிய தனது தாய்க்குப் பதிலாக ஒரு சிறிய வேடத்தில் மேடையில் நடித்தார். கெட்டியாக நடிப்பைப் பிடித்துக் கொண்டார். சிறுவனாக பசியின் பிடியில் படுத்த படுக்கையாக இருந்தபொழுதுகளில், இரவுகளில் அவரது தாய் சன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்குப் பத்து வயதாக இருந்த போது, ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை சீனியர் ஒருவர் வாங்கித் தந்தார்.

1903-ம் ஆண்டில் `ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்’ நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவருக்கு ஒரு நாடகக் கம்பெனியில் நிரந்தர வேலை கிடைத்தது. செர்லாக் ஹோம்ஸ் நிறுவனம் நடத்திய நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம இவர் பேர் சொன்னது. இதனைத் தொடர்ந்து பிரபல சர்க்கஸ் நடத்திய பல்சுவை நிகழ்ச்சியில் கோமாளி வேடத்திலும் நடித்தார். அன்றைய கால கட்டத்தில் அமெரிக்காவின் குடியமர்வதற்கு ஓரளவு வசதியுடன் இருக்க வேண்டும். ஒரு அகதியாக கார்னோ என்ற குழுவுடன் அக்டோபர் 2, 1912- அன்று அமெரிக்கா வந்தடைந்தார்.

சாப்ளினின் திறமையைக் கவனித்து கீஸ்டோன் திரைப்பட நிறுவனம் சேர்த்துக் கொண்டது. முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னைப் பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார். இவரது கிடுகிடு வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடம்தான். அந்த ஜானரில் கில்லி என பெயர் எடுத்தார். இவரைப் பார்த்தாலே பரிதாபமும் சிரிப்பும் ஒன்றாக வர ஆரம்பித்தது. அதையே தன் சக்சஸ் ஃபார்முலாவாக மாற்றிக் கொண்டார்.

1927-ம் ஆண்டில் ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும் 1930-ம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். ஆனாலும் நடிப்பு பேசியது.1952-ம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928-ம் ஆண்டுத் திரைப்படம் “தி சர்க்கஸ்” படத்தின் டைட்டில் இசை அமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது `ஸ்மைல்’. இவரது முதல் டாக்கீஸ் 1940-ம் ஆண்டில் வெளியான `தி கிரேட் டிக்டேடர்’. இது அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் குதிப்பதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இன்றுவரை அப்படம் பேசும் அரசியல் மிகவும் தைரியமானது. எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா?

food

இப்படத்தில் சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார். ஹிட்லர் மற்றும் நாசியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இருமுறைப் பார்த்தார். கோபமும் படவில்லை. சாப்ளின தன் வாழ்க்கை முழுவதும் அழுகையால் மனம் நிரம்பி இருந்தாலும் மக்களுக்கு கண்ணீரைத் தராமல் புன்னகையைப் பரிசாகத் தந்தார். திரை முன் தோன்றிவிட்டால் அது எதையும் காட்டாமல் சாப்ளின் மட்டுமே தெரிவார். “நான் மழையில் நனைய ஆசைப்படுகிறேன், நான் அழுவது உலகுக்கு அப்பொழுதுதான் தெரியாது!” என்ற புகழ்பெற்ற வார்த்தைகளை உதிர்த்தார்.

திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை 4 முறை திருமணம் செய்திருக்கிறார். 28 வயதில் முதன்முறை 16 வயது மில்ட்ரெட் ‘ஹாரிசை’ மணந்தார். இவர்களுக்குப் பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தும் போனது. இவர்களது திருமண வாழ்க்கை 1920-ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. 35 வயதில் `தி கோல்ட் ரஷ்’ திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த போது, 16 வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். நவம்பர் 26 1924-ல் க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததது. இந்த கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி மிகவும் பாதிக்கப்பட்டார் சாப்ளின். இவரது தலைமுடி நரைக்கத் துவங்கியது.

மேலும் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சாப்ளினைப் பற்றிய பல அந்தரங்க செய்திகள் இடம்பெற்றது. இவரை எதிர்த்து பிரச்சாரங்கள் நடைபெற்றன. சாப்ளினின் 47-வது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936-ல் ரகசியமாக மணமுடித்தார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தபின் இத்திருமணமும் விவாகரத்தில் முறிந்தது.

இக்காலகட்டத்தில் நடிகை ஜோன் பேரியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது. ஆனால், சாப்ளினை பேரி துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார். ஆனால் மே 1943-ம் ஆண்டு தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார். ரத்த பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும், அக்காலத்தில் ரத்த பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1943 -ல் தனது 54-வது வயதில் ஓ நீல் என்ற 17 வயதுப் பெண்ணை மணந்தார். இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தனர். சாப்ளின், 1977-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது 88-வது வயதில் இறந்தார். இவரது உடலை வாட் நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.

மார்ச் 1, 1978-ம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.

இந்திய அஞ்சல் துறையினர் சார்லி சாப்ளினுக்கு நினைவார்த்த அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்பதை
ஏப்ரல்16
சார்லி சாப்ளின் பிறந்த நாளை முன்னிட்டு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் அஞ்சல்தலை சேகரிப்பாளருமான விஜயகுமார் எடுத்துரைத்தார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.