பழமை சிதையாமல் புதுமையாக போகும் திருச்சிராப்பள்ளி – இனிகோ இருதயராஜ் சிறப்பு பேட்டி

0

பழமை சிதையாமல் புதுமையாக போகும் திருச்சிராப்பள்ளி – இனிகோ இருதயராஜ் சிறப்பு பேட்டி

நடைபெறவுள்ள தேர்தலில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் வெற்றி பெறுவார் என்பதையே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.

பொதுவாக ஒரு பகுதியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை வசதி, கழிவுநீர் வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி, பொதுசுகாதார உள்ளிட்டவைகளே முக்கியத்துவம் பெறுகின்றன . இவையெல்லாம் வாழ்வதற்கான தேவைகளாகும் . வாழ்வாதாரம் .. ?

புதிய தொழிற்சாலைகள், அதனால் உருவாகும் வேலைவாய்ப்பு மட்டுமே மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகின்றன . அத்தகையதொரு திட்டங்களை எவர் ஒருவர் வடிவமைத்து செயல் படுகிறாரோ அவரே சிறந்த மக்கள் நல சேவகராக கருதப்படுவர்.

‘ வெற்றி நிச்சயம் ‘ என கருத்துக் கணிப்புகளால் கூறப்படும் , சட்டமன்ற உறுப்பினராகப் போகும் இனிகோ இருதயராஜ் , வெளிநாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார் . எனவே தொழில் சார்ந்த திட்டங்கள் என்பது அவரின் எண்ணத்தில் இயல்பாகவே ஓடிக் கொண்டு தான் இருக்க வேண்டும் . அத்தகையதொரு திட்டங்களாக என்னென்ன திட்டங்களை மனதிற்குள் பதித்து வைத்துள்ளார் என்பதை அறிய அவரை சந்தித்து பேசினோம் .

“ திருச்சி கிழக்கு தொகுதி என்பது மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியாகும். மொத்தமுள்ள 65 வார்டுகளில் திருச்சி கிழக்கு தொகுதியில் மட்டும் சுமார் 25 வார்டுகள் அடங்கியுள்ளன . இங்கு காந்தி மார்க்கெட் மற்றும் கடை வீதிகள் மட்டுமே இத்தொகுதியின் பொருளாதாரத்தை , இப்பகுதி மக்களுக்கான வேலைவாய்ப்பை நிர்ணயிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின் போதுநகைக்கடையில் , காய்கறிக்கடையில் , வணிக நிறுவனங்களில் , செல் போன்கடைகளில் எனபல இடங்களில் பணியாற்றும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைப்பார்த்து பேசினேன். 

எம்.சி.ஏ. படித்த பெண் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார் . பி.எஸ்.சி. படித்த பெண் ஆட்டோ ஓட்டுகிறார் . பொறியியல் படித்த இளைஞர் உணவு சப்ளை பணி செய்கிறார் . படிப்பிற்கேற்ப வேலை இங்கு இல்லை . புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கும் கட்டமைப்புகளையும் கடந்த பத்தாண்டுகளில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் , இப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் எதுவும் செய்யவில்லை . சாலை வசதியும் , சாக்கடை வசதியும் செய்தால் போதும் என்றே பத்தாண்டு காலத்தை வீணடித்திருக்கிறார்கள் . அதையும் உருப்படியாக செய்யவில்லை என்பது தனிக்கதை .. ! மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால் எதுவும் செய்யவில்லை என்றே தெரிகிறது . இப்பகுதி மக்கள் பொருளாதார மேம்பாடு அடைய வேலைவாய்ப்பு பெருக வேண்டும் . உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் உருவானால் மட்டுமே வேலைவாய்ப்பு பெருகும் . திருச்சி கிழக்கு தொகுதியில் நிச்சயமாக அப்படி ஒரு தொழிற்சாலையினை கொண்டு வருவதே என் திட்டமாகும் .

அத்தொழிற்சாலையை அடிப்படையாகக் கொண்டு உபதொழிற்சாலைகள் அதாவது சிறு , குறு தொழிற்சாலைகள் உருவாகும் . இத்தகைய அணுகுமுறை , வேலைவாய்ப்பினை பெருக்குவதோடு மக்களின் பொருளாதாரத்தை மேம்பாடு அடையச் செய்யும் . தொழிற்சாலை தொடங்க சிறிது காலம் பிடிக்கும் . அதற்குள் இப்பகுதி மக்களுக்கு வேலைகிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவேன் . நான் மனிதவள மேம்பாடு படித்திருக்கிறேன் . ஏற்கனவே தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி 488 இளைஞர்கள் , இளம் பெண்களுக்கு எல் – டி . மற்றும் ஹீண்டாய் நிறுவனத்தில் வேலை பெற்றுத்தந்துள்ளேன் . அந்த அனுபவம் இப்போது எனக்கு கைகொடுக்கும் . உலகம் முழுக்க பெரு நிறுவனங்களில் மனிதவள பொறுப்பில் ( HUMAN RESOURCE ) , உயர் பதவியில் இருப்பவர்கள் ஏராளமானோர் என் நண்பர்களாக உள்ளனர் . அவர்கள் மூலம் வேலை பெற்றுத் தருவேன் . இத்தொகுதியில் , “ சட்டமன்ற உறுப்பினர் வேலைவாய்ப்பு மையம் ” என்ற ஒரு மையத்தை ஏற்படுத்தி வருடத்திற்கு குறைந்தது 250 பேருக்கு அவர்களின் படிப்பிற்கும் , திறமைக்கும் ஏற்ப வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர திட்டமிட்டுள்ளேன் .

தனியார் நிறுவனங்களுக்கும் வேலை தேடும் இளைஞர் களுக்கும் ஒரு பாலமாக செயல்படுவேன் . நான் பிரச்சாரத்திற்கு போகும் போதே டிப்ளமோ படித்த 12 பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன் . படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதோடு மட்டுமின்றி “ சட்டமன்ற உறுப்பினர் பயிற்சிமையம் ” அமைத்து ஐ.ஏ.எஸ் . , ஐ.பி.எஸ் . தேர்வினை எதிர்கொள்ள , ஆண்டுக்கு , 100 நபர்களுக்கு இலவச பயிற்சி வழங்க ஏற்பாடு செய்ய உள்ளேன் . திருச்சி கிழக்கு தொகுதி மக்களின் பொருளா தார இதயம் என்றால் அது காந்தி மார்க்கெட் .. ! போக்குவரத்து நெரிசல் காரணமாக காந்தி மார்க்கெட்டை மாற்ற வேண்டும் என்று அவசிய மில்லை . காந்தி மார்க்கெட்டின் சுற்றுச்சுவரை மாற்றியமைத்து , சாலைகளை அகலப்படுத்தி , காந்தி மார்க்கெட் வளாகத்தில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் கட்டி , நவின கிடங்குகள் , காய்கறிகடைகள் , மளிகை உள்ளிட்ட பல்வேறு கடைகளையும் ஒருங்கே அமைத்து செயல்பட , வழி வகை செய்ய திட்டமிட்டுள்ளேன் .

மேலும் திருச்சி , காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள , பெண்கள் சிறைச்சாலையினை மாநகர எல்லையை தாண்டி அமைத்துவிட்டு , அந்த இடத்தில் காய்கள் , பழங்கள் அழுகி வீணாகாமல் இருக்க குளிர்பதனிடும் நிலையம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளேன் . திருச்சி கிழக்கு தொகுதியின் அட்சரேகை போன்று ஓடிக் கொண்டிருக்கும் . 1000 ஆண்டுகள் பழமையான , 11 கிலோமீட்டர் நீளம் கொண்ட உய்யக்கொண்டான் கால்வாய் தனது பொலிவை இழந்து , தூர்நாற்றம் வீசும் . நோய் பரப்பும் , தமிழகத்தின் மற்றொரு கூவமாக மாறியுள்ளது . உய்யக்கொண்டான் கால்வாயை தூர்வாரி, சாக்கடை கலக்காமல் பாதுகாத்து , தொழில் வல்லுநர்களின் ஆலோசனைப்படி தூய்மையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளேன் .

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஏற்கனவே இருந்த குப்பைத் தொட்டிகளை அகற்றியதால் , குப்பைகள் தெருக்களில் சேர்ந்து , காற்றில் பறந்தும் , கால்நடைகளாலும் தெருக்களில் சிதறி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது .

3800 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட மலைக்கோட்டை , ஆயிரம் ஆண்டுகளை கடந்த ஸ்ரீரங்கம் மற்றும் நத்தர்ஷா பள்ளி வாசல் , பசிலிக்கா அந்தஸ்து பெற்ற சகாயமாதா திருக்கோவில் என பழமை மாநகரமான திருச்சி கிழக்குத் தொகுதியின் பழமை மாறாமல் , சிதையாமல் புதுமை பெற , என்னாலான அனைத்து திட்டங்களையும் திறம்படச் செய்துதிருச்சி கிழக்குதொகுதிமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பேன் என்பதை நான் உங்கள் மூலம் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு உத்தரவாதம் தருகிறேன் “.

Leave A Reply

Your email address will not be published.