திருச்சி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.11 லட்சம் பறிமுதல்
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பறக்கும் படை அதிகாரி சுமதி தலைமையிலான குழு ஜே.கே.நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து சோதனை நடத்தினர். அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சம் எடுத்துச்செல்வது தெரியவர பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை, திருச்சி கிழக்கு தாசில்தார் குகனிடம் ஒப்படைத்தனர்.
திருச்சி காட்டூரில் ஆயில் மில் அருகே உள்ள சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தியதில் ஒரு காரில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாய் இருந்ததை பறிமுதல் செய்து, அதனை திருவரம்பூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
முசிறி மேய்க்கல் நாயக்கன்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் வாகன சோதனை ஈடுபட்டிருந்த போது. அவ் வழியாக சேலத்தில் இருந்து திருச்சிக்கு சென்ற சரக்கு ஆட்டோவில் ரூ.62 ஆயிரத்து 500 எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
மண்ணச்சநல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவரிடம், உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெபக்குமார் இவர் கடலைமிட்டாய் வியாபாரி இவர் திருச்சியிலிருந்து காரில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது பெட்டவைத்தலை சோதனைச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போதுஉரிய ஆவணங்களின்றி அவர் வைத்திருந்த ரூ.68 ஆயிரத்தை பறிமுதல் செய்து ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
துறையூரில் கண்காணிப்புக்குழு அதிகாரி குணசேகரன் தலைமையில் சோதனை மேற்கொண்ட போது, உரிய ஆவணங்கள் இன்றி ரூ.53 ஆயிரத்தை கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டு,பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், துணை தாசில்தார் ஜாபர் சாதிக்கிடம் ஒப்படைத்தனர்.