சாபத்தை வரமாக மாற்றுங்கள் – சு.கி.சிவம்

0
1

கடந்த 6ம் தேதி திருச்சி சந்தானம் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் செகரெட்டரி கே.மீனா, சிஇஓ சந்திரசேகரன், முதல்வர் பொற்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சிஇஓ சந்திரசேகரன் சு.கி.சிவம் பற்றி கூறியது.

சு.கி.சிவம் திருச்சியை சேர்ந்தவர் என்றும், அமெரிக்கன் ஆஸ்பத்திரியில் பிறந்த முதல் குழந்தை என்றும், அவர்கள் குடும்பமே கலைக்குடும்பம் என்றும். ஒரே ஆண்டில் அவர்கள் குடும்பத்தில் இருவருக்கு அரசு விருது கிடைத்தது பற்றியும் கூறினார். மேலும் சு.கி.சிவம் திருப்பராய்த்துறை விவேகானந்தா கல்லூரியில் படித்தவர் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய சு.கி.சிவம்,

2

மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சேர்த்து ஊக்க உரை ஆற்றினார்.

அதில் பிள்ளைகளுக்கு செல்லும் கொடுத்து, செல்லமும் கொடுத்துவிட்டு பின்னர் மனம் வருத்தமுற்று பயன் என்ன? என்றார் பெற்றோரிடம்.

குழந்தைகள் பள்ளிக்கு கிளம்புகையில், எல்லா புத்தகங்களையும் எடுத்துக்கொண்டாயா? ஐடி கார்டு, சாப்பாடு, ஹோம் ஒர்க் நோட் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டாயா? என தினமும் ஞாபகப்படுத்துவதே அம்மாதான். அது மிகப்பெரிய தவறு. ஏனெனில் அவமானப்பட்டால்தான் வாழ்வில் முன்னேற முடியும். ஒருநாள் ஆசிரியரிடம் திட்டு வாங்கினால், அடுத்த நாளிலிலிருந்து ஆட்டோமேடிக்காக அவன் புக் எடுத்துக்கொண்டு செல்வான். அதற்கு அவனுக்கு வழிவிடாமல் நீங்களே செய்து கொண்டிருந்தால், அவன் எப்போது சுயமாக சிந்திப்பான். அதற்கு ஒரு உதாரணமாய் கீ கொடுத்தால் கைதட்டும் ஒரு பொம்மையை கூறினார்.

அடுத்து, மாணவனை அடுத்தவர்களுடன் ஒப்பிடாதீர்கள். அவனோடே ஒப்பிடுங்கள் என்றார்.  அப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்காது. கோபமும், வெறுப்பும் தான் மிஞ்சும். மாறாக, நீ சென்ற வருடம் படிக்கையில் கணக்கில் 100க்கு 100 வாங்கினாய் அல்லவா? அது போலவே இப்போதும் வாங்குவாய் அல்லவா? என்று அவனிடம் கேளுங்கள். அவன் கண்டிப்பாய் வாங்குவேன் என்பான்.

மாணவர்களிடம், உலகிலேயே உங்கள் மேல் அதிக அக்கறையும், அன்பும் கவனமும் செலுத்துபவர்கள் பெற்றோர்கள்தான் என்றும், ஆசிரியர்களை கடவுள் என்றும் கூறினார். ஏனெனில் ஒரே பாடத்தை வகுப்பறையில் உள்ள 100 பேர் தனித்தனியாக கேட்டாலும் பொறுமையாக பதில் சொல்லும் பக்குவம் ஆசிரியருக்கு மட்டுமே உண்டு. அதனால் அவர் கடவுளுக்கு நிகரானவர் என்றார்.

முன்பெல்லாம் அதாவது கொரோனாவிற்கு முன், பெற்றோர் என்ன செய்வார்கள் எனில் செல்லைத் தொடாதே படி, படிக்கும் நேரத்தில் எதற்கு செல்லை எடுக்கிறாய் என்பார்கள். இப்போது செல்லை எடு, ஆன்லைன் கிளாஸ் ஆரம்பிக்கப்போகிறது.  ஆன் செய்து என்ன என்று கவனி என்று அவர்களே செல்போனை குழந்தைகளிடம் கொடுக்கின்றனர்.

அதேபோல் வகுப்பறையில் ஆசிரியர் அமைதியாக இரு என்பார். இதற்காகவே வகுப்பறை லீடர் இருந்து பார்த்துக்கொள்வார்.

மாறாக, கொரோனாவிற்கு பின் ஆன்லைன் கிளாசில் மியூட்டில் வைக்காமல், ஏதாவது பேசுங்கள் என்கிறார் ஆசிரியர்.

ஒரு கொரோனா நம்மை எந்த அளவு மாற்றி உள்ளது என்று பார்த்தீர்களா? என்று கூறிய அவர், தசரதன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை சொன்னார்.

தசரசன் திருமணம் ஆகி சில வருடங்கள் கடந்தும் குழந்தைப்பேறு இல்லை. ஒரு முறை வேட்டைக்கு சென்றிருக்கும் வேளையில், அவன் மான் என்று அம்பு எய்ய அது சிரவணன் என்ற சிறுவன் மீது பட்டு அவன் இறக்கும் தருவாயில் மன்னன் அவனிடம் செல்கிறான். அப்போது சிரவணன், எனது பெற்றோருக்கு கண் தெரியாது. கால்கள் நடக்க இயலாது. அவர்கள் தாகத்தினால் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் உடனே சென்று அவர்களுக்கு தண்ணீர் தாருங்கள். அவர்கள் தண்ணீர் பருகும்வரை நான் இறந்துவிட்ட விஷயத்தை கூறாதீர்கள் என்றான்.

தசரதனும் தண்ணீரை அவனின் பெற்றோரிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டு அமைதியாக நின்றான். அப்போது சிரவணனின் தந்தை நீ எனது மகன் இல்லை. உன் மேல் சந்தன வாசம் அடிக்கிறது. நீ இந்த நாட்டின் மன்னன் அல்லவா? என் மகன் எங்கே என கேட்கிறார். அப்போது நடந்த உண்மைகளை தசரதன் கூற, நான் என் குழந்தையை இழந்து புத்திர சோகத்தால் உயிர் துறக்கிறேனோ? அதுபோல் நீயும் வாடுவாய் என்று சாபம் கொடுக்கிறார். அப்போது, தசரதனுக்கு உள்ளூற ஒரு சந்தோஷம் நமக்கு குழந்தையே இல்லையே. இவர் சாபம் குழந்தை இருந்தால்தானே பலிக்கும் என்று நினைத்தான். பின்னர் அவர் சாபத்திற்காகவாவது நமக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று நினைத்து மகிழ்ந்தான்.

அதனால் கொரோனா என்ற சாபத்தால் மாணவர்களே உங்களுக்கு  பல வரங்கள் கிடைத்துள்ளது. அதனை சரிவர பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றார்.

வரலாற்றில் தொலைத்தொடர்பு சாதனங்கள் அற்ற காலமான அக்பர் காலத்தில், அக்பரின் மனைவி டெலிவரிக்கு பதேபூர் சிக்ரி சென்றிருந்தார். அக்பரோ டில்லியில் இருந்தார். அவருக்கு ஒரு ஆசை தனக்கு குழந்தை பிறந்ததும் உடனே தெரிந்துகொள்ள வேண்டும் என்று. அதற்காக மனைவியின் ஊரிலிருந்து டில்லிக்கு ஒரு மைலுக்கு ஒரு ஆளை நிறுத்தி வைத்தார். ஒவ்வொருவரிடம் ஒரு முரசம் இருக்கும். அங்கு குழந்தை பிறந்தவுடன் ஒருவன் முரசம் அடிக்க அந்த சப்தம் கேட்டவுடன், அடுத்தவன் தன்னுடைய முரசத்தை முழங்க வேண்டும். இப்படியாக சில மணிகளில் அக்பருக்கு குழந்தை பிறந்த விஷயம் தெரியவருகிறது. அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஆனால் அது சில நிமிடங்கள்தான். ஏனெனில் குழந்தை பிறந்துவிட்டது. அது ஆண்குழந்தையா, பெண்குழந்தையா என தெரியவில்லையே என்று. ஒரு பேரரசனுக்கு இந்த நிலைமை இருந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவில் குழந்தை பிறந்தால் நார்மல் டெலிவரி, டாக்டர் யார்? எந்த ஆஸ்பத்திரி, எவ்வளவு பில், என அனைத்தும் அடுத்த செகண்டில் கிடைத்துவிடுகிறது. டெக்னாலஜி அந்த அளவிற்கு முன்னேறியுள்ளது. அதனை எப்படி சரியாக பயன்படுத்தவேண்டும் என்ற விவேகம் நம்மிடம் வேண்டும் என்றார்.

பருவமடைந்த ஆண்பிள்ளைகள் அதிகம் பேச மாட்டார்கள். ஆனால் பருவமடைந்த பெண்பிள்ளைகள் அதிகம் பேசுவார்கள். இது இயற்கையின் நியதி. நீங்கள் கம்பேரிசன் என்ற பெயரில் ஆண்பிள்ளைகளை பெண்பிள்ளைகளைப்போல் இல்லை என்றும், பெண்பிள்ளைகளை ஆண்பிள்ளைகள் போல் இல்லை என்றும் சொல்லும்போது இயற்கையின் நியதி(இயல்பு)யை மீறுகிறீர்கள். தயவுசெய்து ஆண்குழந்தையை ஆண்குழந்தைகளாக இருக்க விடுங்கள். பெண்பிள்ளைகளை பெண்பிள்ளைகளாக இருக்க விடுங்கள் என்றார்.

அமெரிக்காவில் 15 வயதுக்கு பிறகு பெற்றோர் குழந்தையை பார்த்துக்கொள்வது இல்லை. அவர்கள் தாங்களாகவே சம்பாதித்து படித்து பட்டம் பெற்று தனக்கான வாழ்க்கையை வாழ்கிறார்கள். மாறாக இந்தியாவில் பிராவிடன்ட் பண்ட் உட்பட கடைசி சேமிப்பையும் துடைத்து மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் செய்து கொடுத்துவிட்டு, அவர்கள் சந்தோஷத்தில் தன்னை சோகத்தை மறக்கும் பெற்றோர்கள் எத்தனை லட்சம் பேர் இருக்கிறார்கள். மாணவர்களே இந்த மாதிரி ஒரு குடும்பம் என்ற பாரம்பரியத்தை பாசத்தை வேறு எந்த உலக நாடுகளிலும் நாம் காண இயலாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றார்.

பிள்ளைகளிடம்  வீட்டின் வரவு செலவை பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு வீட்டு நிலமை புரியும், பின்னால் ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதற்கு அது பேருதவியாக இருக்கும். என்றார்.

குழந்தைகளிடம் மனம்விட்டு பேசுங்கள் அப்போதுதான் அவர்கள் தங்களை பகிர்ந்து கொள்வர். வேறுபாதையை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். அவர்கள் வேறுபாதையை தேர்ந்தெடுப்பதற்கும் பெற்றோர்களே காரணம் என்றார்.

சி.வி.ராமன் யூஜி முடித்துவிட்டு வேலைக்கு மனு செய்திருந்தார். அப்போது இன்டர்வியூ நாள் வந்தது. இவரை இன்டர்வியூ செய்த அதிகாரி நீ பிஜி படிக்கவில்லை. எனது வேலைக்கு பிஎஸ்ஸி பிசிக்ஸ் தேவை, அதனால் உனக்கு வேலை இல்லை என்று கூற, அவரும் (சி.வி.ராமன்) அதிகாரியிடம் விடைபெற்றுக்கொண்டு அறையை விட்டு கிளம்பும்போது, ஒரு குண்டூசி காலில் பட உடனே அதனை எடுத்து குண்டூசி பாக்சில் குத்தி வைத்துவிட்டு நகர்ந்தார். அப்போது அந்த அதிகாரி, சி.வி.ராமனை கூப்பிட்டு “யூ ஆர் அப்பாய்ன்டட்” என்கிறார்.

சார் நான்தான் எம்எஸ்எஸி பிசிக்ஸ் படிக்கலையே பின் எப்படி என கேட்டார்.

அதற்கு அந்த அதிகாரி சொன்ன பதில் என்ன?

எம்எஸ்எஸி பிசிக்ஸ் பாடத்தை நான் கற்றுக்கொடுத்துவிடுவேன். ஆனால் ஒரு பொருளையும் வீணாக்கக் கூடாது என்ற இந்த குண்டூசி பாடத்தை வீட்டில் உள்ள உன் பெற்றோர் அல்லவா கற்றுக்கொடுத்து உள்ளார்கள். இந்த பண்பாட்டை, பொறுப்பை என்னால் கற்பிக்க இயலாது. அதனால்  “யூ ஆர் அப்பாய்ன்டட்” என்கிறார். பிசிக்ஸ் ஈஸி நான் கற்றுக்கொடுத்துவிடுவேன் என்றார்.

அதனால் பண்பாடுள்ள பிள்ளைகளாக வளர்த்துவிட்டால் போதும் என பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு யார் ரோல் மாடல் என்றால் “பெற்றோர்களே” என்றார்.

அதற்கு அமெரிக்க பெற்றோர்களை ஒரு உதாரணமாக கூறி, ஒரு கதை சொன்னார். ஒருமுறை அவரது அமெரிக்க நண்பர் இவருக்கு(சு.கி.சிவம்) போன் செய்தாராம். எனக்கு ஒரு கிரிட்டிக்கல் சிட்டுவேசன். நீதான் தீர்க்கனும் என்றாராம். சொல்லுடா என்று சு.கி.சிவம் கூற, அமெரிக்க நண்பர் கூறினாராம்.

காலையில் என் மனைவியும், மகனும் (காரில்) மகனுடைய நண்பனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றார்கள். காரை என் மனைவி வேகமாக ஓட்டிச்சென்றார். அமெரிக்க காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஏன் இயல்பைவிட அதிக வேகத்தில் காரை ஓட்டினீர்கள் என கேட்கின்றனர் காவலர்கள். அதற்கு என் மனைவி என் பிள்ளையின் நண்பன் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உள்ளான். அவனை பார்க்கும் ஆவலில் இவ்வாறு செய்தேன் என்று கூறி உள்ளார். அப்படியா என கேட்ட காவலர், மகனிடம் பேச, அவன் உண்மையை கூற, காவலர்கள் இருவரையும் தண்டிக்காமல் இவ்வளவு நல்ல குழந்தைக்கு அம்மாவாக இருந்து பொய் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் குழந்தைக்காக உங்களை தண்டிக்காமல் விடுகிறோம் என்று கூறி அனுப்பி விட்டனர்.

வேலை முடிந்து வீட்டிற்கு நான் வந்ததும் உங்கள் பிள்ளை நான் சொன்னதை மாற்றி சொல்லிவிட்டான் என்ன என்று கேளுங்கள் என்று அவரது மனைவி கூற, ஏண்டா என்று அவர் மகனிடம் கேட்க, டாடி, காலையில் பொய் சொல்லாதே என்கிறாய், மாலையில் பொய் சொல் என்கிறார். இப்போது சொல் நான் பொய் சொல்லனுமா? சொல்லக்கூடாதா? என்று சொல்லிவிட்டு அவனது அறைக்கு சென்றுவிட்டானாம். இப்போது நான் என்ன செய்ய என்று  கேட்க, சு.கி.சிவம் கூறினாராம். மகனது அறைக்கு சென்று அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேள். ஏனெனில் அவன் மனதில் உனக்காக உள்ள தங்க சிம்மாசனத்திலிருந்து இப்போது நீ இறங்கிவிட்டால் பின் என்றுமே அந்த இடம் உனக்கு கிடைக்காது. மகனும் மாறிவிடுவான். அதனால் பெற்றோர்களே நீங்கள் தான் அவர்களின் ரோல் மாடல். என்றார்.

 

 

 

 

 

 

3

Leave A Reply

Your email address will not be published.