தேரையர் (பதினென் சித்தர்கள் – 18)

0
1

இளமை வாழ்க்கை

தேரையர் தம் பெயரைத் தேரன் என்றே பல இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார். போகரும் கருவூராரும் அவர் பிராமண கலத்தவர் என்று கூறியுள்ளனர்(பாடல்: போகர் ஏழாயிரம் 5942 கருவூரார் வாதகாவியம் 621). அவர் பாலாற்றின் வடக்கரையில் உள்ள திருமலைச்சேரியில் பிறந்தவர். தந்தை பெயர் நம்பூபதி. இவர் கூரத்தில் வாழ்ந்த தரும சௌமியர் என்ற புத்த மதத்துறவியிடப் மருத்துவம் பயின்றார். அத்துறவியின் வழிகாட்டுதலின் படி அகத்தியரின் சீடரானார் என்று பல மருத்துவ ஆய்வு நூல்கள் கூறுகின்றன.

2

அகத்தியர் தகுந்த சீடன் ஒருவனைப்பெறவேண்டி பொதிகை மலையிலிருந்து இறங்கி ஊருக்குள் வந்தார். வழியில் ஔவையாரை சந்தித்தார். முனிவரிடம் ஒளைவையார் ஒரு சிறுவனைக்காண்பித்து ‘இவன் முற்பிறப்பில் இராமதேவர் என்ற சித்தராக இருந்தவன் இப்போது இவன் ஒரு வாய்பேசாத ஊமையாக என்னிடம் வந்துள்ளான். இவன் உங்களுக்கு ஏற்ற சீடனாக இருப்பான்’ என்று கூறினார். தேரன் அகத்தியரின் சீடனானான்.

கூன் பாண்டியனின் கூனை நிமிர்த்திய கதை

ஒரு பாண்டிய மன்னனின் முதுகு கூனலாய் இருந்தது. அவன் கூனலை நிமிர்க்க தேரனை அழைத்துக்கொண்டு அகத்தியர் சென்றார். மன்னருக்குத் தேய்க்க ஒரு பெரிய கொப்பறையில் தைலம் காய்ச்சப்பட்டது. அவசரமாக மன்னன் அழைக்க அகத்தியர் சீடனிடம் ‘கவனமாய் பார்த்துக்கொள்’ என்று கூறிவிட்டு மன்னனிடம் சென்றார். அப்போது எண்ணெய்க் கொப்பறைக்கு மேலே இருந்த தளத்தில் முங்கிலால் வில் போல் வளைத்து செய்யப்பட்டிருந்த பல்லக்குக் கொம்பு ஒன்று போடப்பட்டிருந்தது. தைலம் கொதித்துக்கொண்டிருந்தபோது பல வளைவுகளோடிருந்த பல்லக்குக் கொம்பு கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்து நேராகி வந்தது. அதைக்கண்ட தேரன் தைலம் பதத்திற்கு வந்து விட்டதை யூகித்தறிந்து அடுப்பை அணைத்து விட்டான். திரும்பி வந்த அகத்தியர் திடுக்கிடும் ” ஏன் நெருப்பை அணைத்தாய் என்று கேட்க சீடன் மேல் தளத்தில் நிமிர்ந்து கிடந்த பல்லக்குக்கொம்பை குருவிடம் காட்டினான். அதைக்கண்ட அகத்தியர் ‘என் சீடனான ஊமைப் பிள்ளைக்கு பேச்சுதான் வரவில்லையே தவிர மற்ற எல்லா வகையிலும் அவன் கெட்டிக் காரனாய் இருப்பதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்’ என்று கூறினார். அதுமுதல் அவர் வைத்தியம் பார்க்க எங்கு சென்றாலும் அவனையும் அழைத்துச்செல்வது வழக்கமாகிவிட்டது.

திரணாக்கியிரின் தலைநோயை நீக்கியது

ஒரு சமயம் சங்கப்புலவர்களில் ஒருவரான திரணாக்கிய முனிவர் தாங்க முடியாத தலைவலியால் துடித்துக்கொண்டிருந்தார். அதற்குக் காரணம் அவரது மண்டை ஓட்டிற்குள் ஒரு தேரை இருந்ததுதான். அகத்தியர் அவர் மண்டை ஓட்டைப் பிளந்து தேரை இருப்பதைக் கண்டார். ஒரு இடுக்கியால் அவர் அந்தத் தேரையை எடுக்க முனைந்தபோது, அப்படிச் செய்தால் புலவரின் மூளையே பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த தேரன் அகத்தியர் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தி விட்டு ஒரு குழிவான தாம்பாளத்தில் தண்ணீரைக் கொண்டுவந்து தேரை பார்க்கக்காட்டினான். தண்ணீரைக்கண்ட தேரை உடனே தாம்பாளத்தில் தாவிக்குதித்தது. உடனே அகத்தியர் சந்தானகரணி என்ற மூலிகைச் சாற்றைக் கொண்டு மண்டை ஓட்டை புலவரின் தலையில் பொருத்தினார். புலவர் தலைநோய் நீங்கப் பெற்றார். தேரன் இப்படி எளிமையாகத் தேரையைத் தலையிலிருந்து எடுத்ததைக் கண்டு மகிழ்ந்த குருநாதர் தன் சீடனுக்குத் தேரையன் என்று பெயர் சூட்டியதுடன் அவனது ஊமைத் தன்மையைப் போக்கி அவனை நன்றாகப்பேசவும் வைத்தார். இந்த வரலாறும் அகத்தியர் 12000 என்ற நூலில் உள்ளது.

சங்கப் புலவரான இந்தத் திரணாக்கியர்தான் அகத்தியத்தின் வழி நூலான தொல்காப்பியத்தை இயற்றிய குருவான அகத்தியரால் தொல்காப்பியன் என்று சிறப்பிக்கப்பெற்றார். இத்தொல்காப்பியர் தான் அகத்தியரால் தலைநோய் நீங்கப்பெற்றவர் என்பது அகத்தியரே தம் நூலில் கூறியிருக்கும் உண்மை.

நக்கீரருக்குப் பத்தாண்டு காலம்  தீராத  தலைவலி இருந்ததென்றும் நச்சினார்க்கினியரின் அழைப்பிற்கிணங்கள் அகத்தியரும் தேரையரும் வந்து அவரது நீண்டகாலத் தலைவலியை நீக்கினார்கள் என்றும் சில மருத்துவ ஆய்வு நூல்களில் கூறப்பட்டுள்ளன.

தேரையர் செத்துப் பிழைத்த கதை

4

தேரையர் நிறைநிலை சித்தராகவும் மருத்துவராகவும் வளர்ந்துவிட்டதால் அவரது குருநாதரே அவரைத்தனித்திருந்து செயல்படும்படி கூறி ஆசிவழங்கி அனுப்பிவைத்தார். தேரையரும் அகத்தியரைவிட்டகன்று நாகலா மலைப்பகுதியில் தவக்குடில் அமைத்துக்கொண்டு மக்களுக்கு மருத்துவ உதவி செய்து கொண்டும், சீடர்களை சித்த நெறியில் வளர்ச்சிபெற வழிகாட்டிக்கொண்டும் வாழ்ந்துவந்தார். அப்போது நாட்டில் ஒருபெரும் பஞ்சம் ஏற்பட்டது. சிறிது தங்கம் தயாரித்துக் கொடுத்தால் அதை விற்று நாங்கள் பஞ்சம் போக்கிக்கொள்வோம் என்று மக்கள் வேண்ட தேரையர் மிகப்பெரிய நாக மலையையே தங்கமாக்க முற்பட்டார். அவரது சீடர்கள் அம்மலையைச் சுற்றி துருத்திகளை வைத்துத் தீ மூட்டி ஊதினார்கள். மலையைச் சுற்றி உண்டான அதிகவெப்பத்தையும் புகையையும் தாங்க முடியாமல் அம்மலையில் வாழ்ந்த மிருகங்கள் நான்கு பக்கமும் சிதறிஓடின பறவைகள் பறந்தோடின. அந்த மலைமீது தவம் செய்து கொண்டிருந்த ரிஷிகள் அகத்தியரிடம் வந்து உங்கள் சீடனால் நாங்கள் தவம்புரிய இடமின்றி தவிக்கிறோம் என்று முறையிட்டனர். அதனால் கோபங்கொண்ட அகத்தியர் தேரையரை அழைத்து வரச்செய்து அவரது கால்களைப்பிடித்து அவர் உடலை இரண்டாகக் கிழித்தெறிந்துவிட்டார்.

தனக்கு இப்படி ஒரு ஆபத்து வரக்கூடும் என்பதை முன்னரே யூகித்து அறிந்திருந்த தேரையர் தன் முக்கிய சீடர்கள் இருவருக்கு பிரிந்த உடல் சேரவும் மீண்டும் உயிர் பெற்று எழவும் செய்யும் மூலிகை மருத்துவத்தைக் கற்றுக்கொண்டுத்திருந்தார். அந்தச் சீடர்களும் அவர் கூறியிருந்தபடி மூலிகை மருத்துவம் செய்து தங்கள் குருவை உயிர் பெற்று எழச் செய்துவிட்டார்கள்.

குருவுக்குப் பார்வை கொடுத்த கதை

பிழைத்தெழுந்த தேரையர் மீண்டும் குருவின் கண்களில் படாதவாறு தொலைவில் உள்ள ஒரு இருண்ட காட்டில் காட்டு மனிதனைப்போல் வாழ்ந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் அகத்தியருக்குப் பார்வைக் குறைஏற்பட்டது. அவரது சீடர்கள் அருகில் உள்ள காட்டில் ஒரு காடடுவாசி மூலிகைகளைக்கொண்டு எல்லா வியாதிகளையும் தீர்த்து வருகிறான். அவனை தேரையன் தானா என்று சோதித்தறிய குருநாதர் ”நீங்கள் போகும் போது இரவில் புளியமரத்தடியில் தான் உறங்கவேண்டும்” என்று கட்டளையிட்டார்.

காட்டுவழியில் பல நாள் நடத்து சென்று சீடர்கள் காட்டுவாசியைக் கண்டுபிடித்தனர். அந்தக் காட்டுவாசி உடல் எல்லாம் உரோமம் வளர்ந்து கரடிபோலக் காட்சியளித்தான். சீடர்கள் இருமி இருமி இரத்தவாந்தி எடுத்ததைக் கண்ணுற்ற காட்டுவாசி ஏன் இப்படி? என்று கேட்க சீடர்கள் ‘எங்கள் குருவின் ஆணைப்படி நாங்கள் நடந்துவந்த நாளெல்லாம் புளியமரத்தடியிலேயே உறங்கி வந்தோம்’ என்றனர். காட்டுவாசி ”நீங்கள் திரும்பிச்செல்லும்போது வேப்பமரத்தின் நிழலில் மட்டுமே உறங்குங்கள். குருவிடம் போய்ச் சேர்வதற்குள் குணமாகிவிடுவீர்கள். உங்களுக்கு வேறு மருந்து தேவையில்லை”. என்று கூறி நீங்கள் எதற்காக என்னை நாடி வந்தீர்கள்? என்று கேட்டான்.

‘எங்கள் குருநாதர் பார்வைக்கோளாறால் அவதிப்படுகிறார். உங்களால்தான் அவரைக் குணப்படுத்த முடியும் என்று கருதியே வந்தோம்’. என்றார்கள். தன்னை யாரென்று தெரிந்துகொள்ளவே குருநாதர் அழைத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட தேரையர், ‘நான் இரண்டு நாளில் வருகிறேன். நீங்கள் போய்வாருங்கள்’ என்று கூறி சீடர்களை அனுப்பிவைத்தார். அவர்கள் திரும்பும் வழியில் வேப்பமர நிழலிலேயே கண்ணுறங்கி நலமாகப்போய்ச் சேர்ந்து குருநாதரிடம் டந்தவைகளை ஒன்றுவிடாமல் கூறினர். அகத்தியரும் அந்தக்காட்டுவாசி தேரையர் என்று தெரிந்துகொண்டார்.

காட்டுவாசி தான் கூறியபடி இரண்டு நாள் கழித்துப்புறப்பட்டு அகத்தியரிடம் வந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினான் அவர் கண்களில் மருந்து பிழிந்து பார்வை பெறவும் செய்தான் தன்னிடம் வந்துள்ள கரடி மனிதன் தேரையர்தான் என்பதை மேலும் உறுதி செய்து கொள்ள அகத்தியர் அவனிடம்,’யாராலும் கண்டுபிடிக்கக்கூட முடியாத கண்டுவர முடியுமா’ என்று கேட்டார். நான் நிச்சயம் கொண்டு வந்து தருகிறேன் என்று கூறி குருநாதரிடம் அவன்விடைபெற்றுச்சென்றான்.

வெளிச்சென்ற காட்டுவாசி பொதிகைமலைப் பகுதிகள் முழுவதையும் தேடி பல்வேறு வகையான அரிய மூலிகைகளையும் அவற்றின் பயன்களையும் கண்டுபிடித்தான். இந்த முயற்சியில் காட்டுவாசிகா உள்ள தேரையர் மூலிகை மருத்துவத்தின் தந்தையாகி விட்டார் என்றே கூறலாம். கடைசியில் பெரிகை மலையின் உச்சப்பகுதியில் ஒரு மலையில் கண்வெடிச்சான் மூலிகைச் செடி இருப்பதையும் கண்டுபிடித்தார். அந்த மூலிகையைப் பறித்தால் அதிலிருந்து வெளிப்படும் நச்சுப்புகையால் பறித்தவனுடைய கண்களே அவிந்துவிடும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் அதனால் அவர் அங்கேயே ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து அன்னை பராசக்தியை வேண்டி ‘அன்னையே’ என் குருநாதர் எனக்கு வைத்துள்ள தேர்வில் நான் வெற்றிபெற நீயே எனக்கு அருள் புரிய வேண்டும்’ என்று வேண்டினார். சிறிது நேரத்திர் ”தேரையா! இதோ நீ கேட்ட மூலிகை’ என்று அசரீரி ஒலித்தது. கண் விழித்துப்பார்த்த தேரையர் முன் அந்த மூலிகைக் கொத்து ஒன்று அதன் நச்சுத்தன்மை வெளிப்படாவண்ணம் பத்திரமாக ஒரு இலையில் சுற்றிவைக்கப்பட்டிருந்தது. நன்றியுடன் அன்னை பராசத்தியை வழிபட்டுவிட்டுத் தேரையர் அந்த மூலிகைச் சுருளை அகத்தியர் முன் கொண்டு போய் வைத்தார்.

இந்த குரு-சீடர்களிடையே இருந்த ஒளிவுமறைவு இதற்கு மேலும் நீடிக்கவில்லை. அகத்தியர் தேரையரை அன்புடன் கட்டித்தழுவிக்கொண்டு ”அன்புத் தேரையனே!நான்வைத்த எல்லா சோதனைகளிலும் நீ தேறி விட்டாய். நீ இப்போது பொதிகை மலையில் நடத்திய ஆராய்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து ஒரு மூலிகை நடத்திய ஆராய்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து ஒரு மூலிகை மருத்துவ ஆய்வு நூல் எழுது. அது வருங்கால மருத்துவ உலகிற்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்துவரும். சித்த மருத்துவகத்தில் தேரையர் மருத்துவம் என்ற பெயரால் தனிச்சிறப்புடன் நிலைத்து நிற்கும்’. என்றுமனமாற வாழ்த்தி அனுப்பினார். குருவின் ஆணைப்படி தேரையர் பல மருத்துவ நூல்கள் எழுதியுள்ளார் அவைகளில் குணபாடகம், வைத்திய யமக வெண்பா, பதார்த்த குண சிந்தாமணி போன்ற பல மருத்துவ ஆய்வு நூல்கள் இன்றும் சித்த மருத்துவ ஆய்வாளர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருந்த வருகின்றன. இருபதாம் நூற்றாண்டின் சித்தர் மருத்துவ மேதைகளில் ஒருவரான சென்னை டாக்டர் ஆர்.தியாகராஜன் அவர்களின் தேரையர் பற்றிய தனி ஆய்வு நூல்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

தேரையர் நீண்டகாலம் மக்கள் தொண்டும் மருத்துவப்பணியும் செய்து முடித்து பொதிகை மலையைச் சார்ந்துள்ள தோரண மலைப்பகுதியில் சமாதி பூண்டுள்ளதாகக்கூறப்படுகிறது.

3

Leave A Reply

Your email address will not be published.