பேரறிஞர் அண்ணாவால் செதுக்கப்பட்ட திருச்சி எம்.எஸ்.வெ(வே)ங்கடாசலம்

காதில் விழுந்த (திருச்சி) வரலாறு

0
1

MSV என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது திரைப்படத்துறையில் இசையமைப்பாளராய்த் திகழ்ந்த மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படுகின்ற எம்.எஸ்.விஸ்வநாதன்தான். அரசியல் களத்தில், திருச்சியில் எம்.எஸ்.வி. என்றால் அது எம்.எஸ்.வெங்கடாசலத்தைக் குறிக்கும். எம்.எஸ்.வெங்கடாசலம் துறையூரில் உள்ள முருகப்பட்டியில் 1934ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளிப் பருவத்தில் திராவிடர் கழகத்தின் பொருளாளராக அண்ணா இருந்தபோதே அவரின் பேச்சில் எழுத்தில் மயங்கி, அண்ணாவைப் போல எழுதவேண்டும், அண்ணாவைப் போலப் பேசவேண்டும் என்ற ஒரு உறுதியைத் தனக்குத்தானே எடுத்துக்கொண்டார்.

பார்ப்பனர்கள் மத்தியிலும் அண்ணா மீது பற்று

எம்.எஸ்.வெங்கடாசலம் தன்னுடைய பள்ளிப்படிப்பைக் காஞ்சிபுரத்தில் உள்ள இராமகிருஷ்ணா பள்ளியில் படித்தார். அங்கே பார்ப்பன ஆதிக்கம் மிகுந்திருந்த காலம். அண்ணாவையும் பெரியாரையும் அங்கே ஏதோ ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு வசைபாடிக் கொண்டிருப்பார்கள். பெரியாரின் எழுத்தை, அண்ணாவின் எழுத்தைப் படித்த வெங்கடாசலத்திற்கு பார்ப்பனர்கள் வசைபாடுவதன் காரணம் புரியவில்லை. கொஞ்சக் காலத்திற்குப் பின்தான் பெரியாரும் அண்ணாவும் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள். இந்தப் பார்ப்பனர்கள் தங்களின் ஆதிக்கம் நிலைபெறவேண்டும் என்றே பெரியாரையும் அண்ணாவையும் எதிர்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார். 1950இல் வெங்கடாசலம் பள்ளி இறுதிப் படிப்பான 11-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அண்ணாவின் வேலைக்காரி என்னும் திரைப்படம் வந்தது. பார்ப்பன ஆதிக்கம் மிகுந்த இந்தப் பள்ளியில் அண்ணாவின் இந்தத் திரைப்படம் குறித்த செய்திகள் பரிமாறப்பட்டன. வெங்கடாசலத்திற்கு எப்படியாவது வேலைக்காரி திரைப்படத்தைப் பார்த்துவிடவேண்டும் என்று ஆர்வம். அந்த ஆர்வம் நிறைவேறவில்லை. அப்போது பள்ளியின் கிரிக்கெட் அணியில் வெங்கடாசலம் இருந்தார். செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியின் கிரிக்கெட் போட்டிக்கு வெங்கடாசலமும் அழைத்துச் செல்லப்பட்டார். அந்த நேரத்தில் செங்கல்பட்டில் வேலைக்காரி திரைப்படத்தைப் பார்த்து, வெங்கடாசலம் தான் பிறந்த புண்ணியத்தைத் தேடிக் கொண்டதாய் மகிழ்ந்திருந்தார்.

2

படிக்கும் காலத்தில் பரிசுகள்

பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு 1950இல் திருச்சி தேசியக் கல்லூரியில் பியூசி என்னும் புகுமுக வகுப்பு படித்தார். அப்போது திருச்சி டவுன்ஹாலில் அண்ணா பேசுகிறார் என்பதை அறிந்து, கூட்டத்தில் ஒருவராய்க் கலந்துகொண்டு அண்ணாவின் பேச்சை முதன்முறையாக நேரில் கேட்டு மகிழ்ந்துள்ளார். தொடர்ந்து அண்ணாவின் எழுத்துகளைத் தொடர்ந்து படிக்க முருங்கப்பட்டியில் இருந்த திராவிடர் கழகம் சார்ந்த ஒருவர் கொடுத்து உதவியுள்ளார். திருவானைக்காவலில் இருந்த இரங்கூன் ரெட்டியார் சத்திரத்தில் தங்கித்தான் படித்தார். தொடர்ந்து 1952 – 55 திருச்சி தூய வளனார் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தார். படிக்கும் காலங்களில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் குறிப்பாக ஆங்கிலத்தில் நடைபெறும் போட்டிகளில் பரிசுகளை வாங்கிக் குவித்துள்ளார். 1955ஆம் ஆண்டு முதுகலை பொருளாதாரமும் வளனார் கல்லூரியில் படிக்கிறார். அப்போதைய பொருளாதாரத் துறைப் பேராசிரியர் இருதயராஜ் அவர்களோடு வெங்கடாசலத்திற்கும் ஆசிரியர் மாணவர் உறவைத் தாண்டி ஒரு நட்பு ஏற்பட்டிருந்தது. காரணம் பேராசிரியர் இருதயராஜ் அண்ணா ஆங்கிலத்தில் நடத்திய Homeland இதழுக்குப் பொருளாதாரக் கட்டுரைகளை எழுதுவார். அந்தக் கட்டுரை திராவிடநாடு இதழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும். அண்ணாவுக்கும் பேராசிரியர் இருதயராஜ்க்கும் மிகநெருக்கமான நட்பு இருந்தது.

அண்ணாவிடம் வெங்கடாசலம் அறிமுகம்

1955இல் அண்ணா திருச்சிக்கு வருகிறார் என்ற செய்தி பேராசிரியர் இருதயராஜ் அறிகிறார். உடனே வெங்கடாசலத்தை அழைத்து, “அண்ணா திருச்சி வருகிறார். உன்னை அண்ணாவிடம் அறிமுகம் செய்கிறேன். வருகிறாயா“ என்றவுடன் வெங்கடாசலம் தேன்குடத்திற்குள் விழுந்த ஈயைப் போன்று மகிழ்ச்சியில் துள்ளிக் குளித்துக்,“கரும்பு தின்னக் கூலியா, அண்ணாவை நேரில் பார்க்க வருகிறேன். அறிமுகம் செய்து வையுங்கள்” என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார் வெங்கடாசலம். அதன்படியே அண்ணா வெங்கடாசலம் சந்திப்பு நிகழ்ந்தது. அந்தச் சந்திப்பின்போது அண்ணா, “உன்னைப் போன்ற படித்தவர்கள், ஆங்கிலத்தில் உரையாற்றும் வல்லமை பெற்றவர்கள் எல்லாம் அரசியலில் எதையும் சாதிக்கமுடியாது. அரசியலுக்கு வரும் எண்ணம் உனக்கு வேண்டாம். எழுத்துத்துறையில், பேச்சுத்துறையில், மொழிபெயர்ப்புத் துறையில் உன் கவனத்தைச் செலுத்தவேண்டும்” என்று அறிவுரை கூறியுள்ளார். அண்ணா இப்படிக் கூறிவிட்டாரே என்று கவலையோடு வெங்கடாசலம் இருந்தார்.

வெங்கடாசலத்திற்கு கிடைத்த வாய்ப்பும் – அவமானமும்

1955இல் திருச்சிக்கு இந்திய ஒன்றியத் தலைமையமைச்சர் பொறுப்பிலிருந்து பண்டிதர் ஜவஹர்லால் நேரு வருகை தந்தார். நேரு கலந்துகொள்ளும் கூட்டம் வளனார் கல்லூரியில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு நிகழ்ச்சிகளுக்கான அனைத்துப் பணிகளும் தொடங்கின. ஒரு காங்கிரஸ் பிரமுகர் வளனார் கல்லூரியின் அப்போதைய முதல் அருள்தந்தை எர்ஹார்ட் அவர்களைச் சந்தித்து, “நேருவின் நிகழ்ச்சியில் மொழிபெயர்க்கவேண்டிய ஓ.வி.அழகேசன் திருச்சி வரஇயலவில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே மொழிபெயர்ப்பு பணிக்குத் தங்கள் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரை நீங்கள் பரிந்துரை செய்யவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். உடனே முதல்வர் எர்ஹார்ட்,“எங்கள் பேராசிரியர்கள் தேவையில்லை. நேருவின் ஆங்கிலப் பேச்சைத் தமிழில் அழகாக மொழிபெயர்க்கும் ஆற்றல் கொண்ட முதுகலை பொருளாதாரம் படிக்கும் மாணவர் வெங்கடாசலம் இப் பணியைச் சிறப்பாகச் செய்வார். நான் சொல்லிவிடுகிறேன்” என்று கூறினார். வெங்கடாசலத்தை அழைத்து மொழிபெயர்ப்பு பணிகள் குறித்துச் செய்தியைக் கூறினார். மகிழ்ச்சியும் பயமும் ஒன்றுசேர்ந்த உணர்வில் வெங்கடாசலம் மொழிபெயர்ப்பு பணிக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். நேரு வந்துவிட்டார். நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. மொழிபெயர்க்க வெங்கடாசலம் மேடைக்குச் செல்கிறார். மேடையில் வெங்கடாசலத்திற்கு ஒரு தகவல் செல்லப்படுகின்றது. அது என்னவெனில், மொழிபெயர்க்கும் ஓ.வி.அழகேசன் வந்துவிட்டார் என்பதாகும். மகிழ்ச்சியின் எல்லையில் நின்றுகொண்டிருந்த வெங்கடாசலம் செய்தி அறிந்து அவமானம் பட்டதாகப் பதிவு செய்துள்ளார். நல்ல வாய்ப்பு தன் திறமை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பு கைநழுவிப் போய்விட்டதே என்று கவலை கொண்டார். பின்னர் மொழிபெயர்க்கும் வாய்ப்புகள் வெங்கடாசலத்திற்குக் கிடைத்தன. துறையூரில் அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் உஜ்ஜல்சிங் உரை, திருச்சியில் ஆளுநர் குர்நாம் சிங் உரை, 1971இல் புதுக்கோட்டையில் ஒய்.பி.சவான் உரை, 1974இல் திருச்சி மாநாட்டில் மேற்குவங்க முதல்வர் அஜாய்முக்கர்ஜி உரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி ஹதீசிங், கர்நாடக மாநில முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உரை, 1977 திருச்சி தேவர் மன்றத்தில் ஆசார்யா கிருபாளானி உரை, ராஜ்மோகன் காந்தி உரை, டவுன்ஹாலில் எல்.கே.அத்வானி உரை எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் உரைகளை மொழிபெயர்க்கும் பணியைச் சிறப்பாகச் செய்தார். இதற்கு வெங்கடாசலம் அண்ணாவிடம் பெற்ற ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி பயிற்சி என்றால் மிகையில்லை.

அண்ணாவின் அழைப்பு – வெங்கடாசலம் மகிழ்ச்சி

1957 பட்ட மேற்படிப்பை முடித்துக் கொண்டு வெங்கடாசலம் தன் ஊர் முருங்கப்பட்டியில் இருந்துள்ளார். முருங்கப்பட்டி துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள ஊர். சேலம் செல்வதற்கு அண்ணா முருங்கப்பட்டி வழியாகக் காரில் சென்றிருக்கிறார். ஒரு வீட்டின் முன்பு வெங்கடாசலம் நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு, அண்ணா காரை பின்னோக்கிச் செலுத்தச் சொல்லி, வீட்டு வாசல் முன்பு நின்றிருந்த வெங்கடாசலத்தைப் பார்த்து அண்ணா,“ என்ன வெங்கடாஜலம் நலமா?” என்றிருக்கிறார். வெங்கடாசலத்திற்குக் கையும் ஓடவில்லை…. காலும் ஓடவில்லை. பேசுவது அண்ணாவாயிற்றே….. பின்னர் நல்ல இருக்கிறேன் அண்ணா….. படித்து முடித்து விட்டாய்தானே? நீ சென்னை வந்து என்னைப் பார். நான் நடத்திவரும் Honeland இதழின் துணையாசிரியர் நீதான்…. என்ன மகிழ்ச்சிதானே…… என்றவுடன் வெங்கடாசலத்திற்குக் காண்பது கனவா? நனவா? என்று கிள்ளிப்பார்த்துக் கொள்ளாத குறைதான். கனவிலிருந்து மீண்டு வெங்கடாசலம் “அண்ணா சென்னை வந்துவிடுகிறேன்” என்று பதில் கூறினார்.

சென்னையில் அண்ணாவோடு – அசைவம் சாப்பிட்டார்

சென்னை சென்று அண்ணாவைச் சந்தித்தார். அண்ணா வெங்கடாசலத்தை திராவிட நாடு அலுவலகம் சென்று ஈழத்தடிகள் இருப்பார். உனக்குரிய பணிகளைத் தருவார் என்று கூறினார். அதன்படியே அலுவலகத்திற்கு வெங்கடாசலம் சென்றார். Homeland. திராவிட நாடு இதழ்களுக்கான கட்டுரைகளை மெய்ப்பு திருத்தம் செய்வது, அண்ணாவின் கட்டுரைகளை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பிழைநீக்கம் செய்வது, அச்சிட்ட இதழ்களை அலுவலகம் கொண்டு வந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பது போன்ற பணிகள் இதை இணைந்து செய்யவேண்டும் என்பதை அறிந்து கொண்டார். வெங்கடாசலத்திற்கு சென்னையில் உள்ள ஒரு உணவு விடுதியில் காலை பகல், இரவு உணவு சாப்பிட்டுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விடுதி உணவு ஒத்துக்கொள்ளாமல் வெங்கடாசலம் உடல் உபாதைகளால் அவதியுற்றார். இதனை அறிந்த அண்ணா, “வெங்கடாஜலம் (அண்ணா இப்படி ஜ போட்டுதான் அழைப்பார்) பகல், இரவு என் வீட்டில் என்னோடு உணவு சாப்பிட்டுக் கொள்ளலாம். காலை சிற்றுண்டி மட்டும் விடுதியில் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றவுடன் வெங்கடாசலத்தின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உணவுக்கு வீட்டிற்குச் சென்றபோதுதான் வெங்கடாசலத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் வெங்கடாசலம் சுத்தச் சைவம். அண்ணா வீட்டில் நாள்தோறும் ஏதாவது ஒருவகையில் அசைவ உணவு இருக்கும். அசைவ உணவின் நாற்றம் தாங்கமுடியாமல் மூக்கைப் பிடித்துக்கொண்டு இருக்கும் சாம்பார், ரசம், மோர் என்று முடித்துக்கொண்டு எழுந்துவிடுவார். சில வாரங்கள் சென்றபின்னர், அண்ணா வீட்டு அசைவ உணவின் வாசனை வெங்கடாசலத்திற்குப் பிடித்துவிட்டது. முதலில் முட்டை, அப்புறம் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன், இறால் என்று ஒரு மாதத்தில் சைவராக இருந்த வெங்கடாசலம் அசைவத்திற்கு மாறினார். அண்ணா வீட்டு இறால் தொக்கின் சுவை இன்னும் நினைவில் சுவைத்துக்கொண்டே இருக்கின்றது என்று நான் கண்ட அண்ணா என்ற நூலில் வெங்கடாசலம் பதிவு செய்துள்ளார். அண்ணாவின் இலத்திலிருந்தே அவர் BL என்னும் வழக்கறிஞருக்கான பட்டத்தையும் சென்னை சட்டக் கல்லூரியிலிருந்து பெற்றுள்ளார்.

மாவட்டத் துணைச்செயலர் – செயலர்

அண்ணா 1969இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். அண்ணாவுக்கு மிகவும் நெருக்கமாக வெங்கடாசலம் இருந்தார் என்பதில் திமுகவினர் எல்லோரும் அவர்  மீது மரியாதை உண்டு. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் துணைச் செயலர் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். 1969 அண்ணா மறைவுக்குப்பின் திருச்சி மாவட்டத் திமுக செயலராக 1977 வரை இருந்தார். மாவட்டச் செயலராக இருந்த காலங்களில் சாதி, மதங்களைக் கடந்து முடிவுகள் எடுத்துள்ளார். இவர் மாவட்டத்தில் தனக்கு என ஒரு அணியை ஏற்படுத்திக்கொள்ளாமல் அண்ணாவின் கருத்துகள், கொள்கைகள் மட்டுமே என் அணி என்று செயல்பட்டுள்ளார். இந்திராகாந்தி அறிவித்த நெருக்கடிக்கால நிலையில் மிசா கைதியாக திருச்சி சிறையில் ஒரு வருடம் சிறையில் இருந்தார். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்சி – 2 (தற்போது திருச்சி மேற்கு) தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்நிலையில் திமுகவில் வெங்கடாசலத்தின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. அன்பில் முன்னெடுக்கும் வெகுஜன அரசியல் நிலைப்பாட்டின் முன் வெங்கடாசலத்தால் ஈடுகொடுக்கமுடியவில்லை.

அதிமுகவில் வெங்கடாசலம்

1980இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் எம்.ஜி.ஆர். வெற்றிபெற்று ஆட்சியமைக்கிறார். திமுக தோல்வியடைந்த நிலையில் பலர் அதிமுக சென்றார்கள். அந்தப் பட்டியலில் வெங்கடாசலமும் அதிமுகவில் இணைகிறார். அதிமுகவில் எந்தவொரு பெரிய பதவியையும் வகித்ததாகத் தெரியவில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினராக ஆளுநரால் நியமிக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றினார். 1987-இல் எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தவுடன் அதிமுக ஜானகி அணி ஜெயலலிதா அணி என்று பிரிந்தபோது வெங்கடாசலம் ஜெயலலிதா அணியில் இருந்தார். 1989ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து நாவலர், பண்ருட்டி இராமச்சந்திரன், திருநாவுக்கரசு, எஸ்.டி.சோமசுந்தரம் அமைத்த நால்வர் அணியில் இணைந்துள்ளார்.

மீண்டும் திமுகவில் – வைகோ ஆதரவு நிலைப்பாடு

1989 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தவுடன் மீண்டும் வெங்கடாசலம் திமுகவில் இணைகிறார். 89 தேர்தலில் திருச்சியில் கே.என்.நேருவின் வெற்றி கலைஞரை மட்டுமே அறிந்த வெற்றியாகப் பார்க்கப்பட்டது. அண்ணா காலத்துத் திமுகவினருக்கு இது சங்கடங்களைக் கொடுத்தது. மூத்ததலைமுறை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிக் கொள்ளத்தொடங்கியது. அதில் வெங்கடாசலமும் அடங்குவார். 1993-இல் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றத்தின்போது வீரபாண்டி ஆறுமுகத்துடன் இணைந்து வெங்கடாசலமும் பிரச்சனை தீர்த்து ஒரு சுமூக நிலையை ஏற்படுத்தக் கலைஞரைச் சந்திக்கிறார்கள். கலைஞர் வைகோவை வெளியேற்றுவதில் குறியாக இருக்கிறார் என்பதை உணர்ந்த வெங்கடாசலம் வைகோ மீது மிகுந்த அன்பும் பரிவும் கொண்டவர் என்பதால் வைகோ கலைஞரோடு நேரில் பேசிக் கழகத்தில் நீடிக்கவேண்டும் என்றும் அதனால் அண்ணாவின் கொள்கைகள் காப்பாற்றப்படும் என்ற கருத்தைக் கழகத்தினரிடம் வெளியிட்டார். அவரின் முயற்சி விழலுக்கு இறைந்த நீராக மாறியது. திமுகவிலிருந்து நீக்கப்பட்ட வைகோ திருச்சியில் மறுமலர்ச்சி திமுக என்னும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குகிறார். வெங்கடாசலம் கலைஞரின் செயல்பாடுகளில் முரண்பட்டாலும் திமுகவிலே இருந்தார்.

இலக்கியப் பணிகள்

1990களில் அவருக்கு ஏற்பட்ட விபத்திலொன்றில் சிகிச்சை பெற்றுத் தடியூன்றி நடந்து கொண்டிருந்தார். உடல் நலிவும் ஏற்பட்டது. 2000 ஆண்டுகளில் வெங்கடாசலம் நூல்கள் எழுதுதல், மொழிபெயர்ப்பு பணிகள் போன்ற இலக்கியப் பணிகளை இல்லமிருந்தே செய்து வந்தார். நான் கண்ட அண்ணா என்ற நூலை எழுதினார். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான My Days with Anna என்ற நூல் தொடர்க்கட்டுரையாக திமுகவின் ஆங்கில வாரஏடான The Rising Sun என்னும் இதழில் வெளிவந்தது. 2000 ஆண்டுகளில் அண்ணாவின் (வளர்ப்பு) மகன் பரிமளத்தோடு இணைந்து அண்ணா இலக்கியப் பேரவை என்னும் அமைப்பைக் கட்டமைத்தார். கலைஞர் இந்தப் பேரவையின் செயல்பாடுகளை விரும்பவில்லை என்று அறிந்தும் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மாவட்டச் செயலர்களை நியமித்துப் பேரவை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குப் பாரதிதாசனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். அது நூல் வடிவம் பெற்று உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் பாராட்டப்பட்டது. காரணம் வெங்கடாசலத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்த தமிழ் மண் வாசம்தான் அதன் அடிப்படையாகும். அண்ணாவோடு இருந்த காலத்தில் வெங்கடாசலம் பாரதிதாசன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவேண்டும் என்று ஆசையுள்ளது என்று தெரிவித்துள்ளார். அண்ணா, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆங்கில அறிவும் ஆசை மட்டும் போதாது, ஆங்கிலக் கவிதையின் யாப்பிலக்கணத்தை அறிந்துகொள்ளவேண்டும். தமிழ் செய்யுளின் யாப்பிலக்கணம் அறிந்திருக்கவேண்டும். இவற்றையெல்லாம் அறிந்தபின்னர் பாரதிதாசன் கவிதைகளை மொழிபெயர்க்கலாம். அது பாரதிதாசனுக்கும் நல்லது…. உன் எதிர்காலத்திற்கும் நல்லது என்று சொன்ன அறிவுரையை ஏற்று வெங்கடாசலம் ஆங்கிலக் கவிதைக்காக யாப்பிலக்கணத்தைத் திருச்சியில் இருந்த ஆங்கிலப் பேராசிரியர் எம்.எஸ்.நாடாரிடம் கற்றுக்கொண்டு பின்னர்தான் மொழிபெயர்த்துள்ளார்.

தீவிரத் திராவிட இயக்கச் சிந்தனையாளரான வெங்கடாசலம் அண்ணாவின் சீடர், பக்தர் என்றே எண்ணலாம். கம்பராமாயணம் படிக்கப்பட வேண்டுமா? எரிக்கப்பட வேண்டுமா? என்ற பட்டிமன்றத்தில் எரிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டு, மக்கள் மன்றத்தில் அண்ணா வெற்றிபெற்றார். தந்தை பெரியார் கம்பராமாயணத்தை எதிர்த்தார். எரித்தார். ஆனால் வெங்கடாசலம் 10000 பாடல்கள் உள்ள கம்பராமாயணத்தில் 2000 பாடல்களை மட்டும் மொழிபெயர்த்துள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம்,“அண்ணா ராமாயணத்தை எதிர்த்தார். இது தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்றது அல்ல என்றார். ஆனால் கம்பனின் கவிதைத் திறத்தை அவர் எங்கேயும் குறைத்து மதிப்பிடவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். நான் கம்பனின் கவித்திறத்தைத்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன் என்று விளக்கம் அளித்தார். வெங்கடாசலத்தின் கம்பராமாயண மொழிபெயர்ப்பைத் திருச்சியின் இலக்கிய முகம் என்றறியப்படுகின்ற பிரேமாநந்தகுமார் வெகுவாகப் பாராட்டினார். அதிலும் குறிப்பாக, “வெங்கடாசலத்தின் மொழிபெயர்ப்பில் அறம் என்ற சொல் வரும்போது அதை மொழிபெயர்க்காமல் aRam என்றே ஆங்கில ஒலிபெயர்ப்பில் எழுதி அறம் என்ற சொல் எந்தெந்த இடத்தில் என்னனென்ன விளக்கம் பெறுகின்றது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அறம் என்பதற்கு நிலையான விளக்கம் இல்லை, இடத்திற்கு இடம் மாறுபாடும் தன்மை கொண்டது என்பதைத் தெளிவுபடுத்தியதைப் பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வெங்கடாசலத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது தமிழ்ப் பண்பாடு மிளிர்வதையும் உணரமுடிகிறது என்று பாராட்டியுள்ளார்.

உதிக்கமுடியாது மறைந்தார்

அண்ணா அறிந்தவர்கள் தூரத்திலிருந்து தெரிந்துகொண்ட பலரும் சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக, அமைச்சராக, முதல்வராக வலம் வந்துகொண்டிருந்த வேளையில் அண்ணாவோடு 12 ஆண்டுகள் நெருக்கமாக வாழ்ந்த எம்.எஸ். வெங்கடாசலம் அரசியல் வாழ்வில் எந்த உயர்வையும் பெறவில்லை. அதிமுகவிற்குச் சென்றும்கூட அவரால் புகழ் என்றும் ஏணியின் முதல் படியில்கூடக் கால் வைக்கமுடியவில்லை. அண்ணா சொன்னதுபோல் மிகுந்த பல்துறை அறிவுகொண்ட அறிவாளிகள் அரசியலில் நிலைத்திருக்க முடியாது என்ற அறிவுரைக்கு எடுத்துக்காட்டாய் அண்ணா செதுக்கிய இலக்கியச் சிற்பம் எம்.எஸ்.வெங்கடாசலமே இருந்தது வரலாற்றின் முரண் என்றால் மிகையில்லை. உடல் நலம் குன்றிய நிலையிலும் அண்ணாவின் அறிவுரைப்படி இலக்கியப்பணிகளையும் மொழிபெயர்ப்பு பணிகளையும் செய்தார் என்பது வெங்கடாசலம் தான் தலைவராக ஏற்றுக்கொண்ட அண்ணாவுக்குச் செய்த மிகப்பெரிய மரியாதையாகும். அண்ணாவால் வளர்க்கப்பட்ட அல்லது செதுக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் சிந்தை ஆளுமையான வெங்கடாசலம் 10.10.2010இல் திருச்சி காந்தி மருத்துவமனை அருகேயுள்ள அவர் இல்லத்தில் மரணம் அடைந்தார். மரணம் அடைகின்ற வரையில் தான் படித்த தூய வளனார் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலர் பொறுப்பில் பல ஆண்டுகள் இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தியாகும். திருச்சியின் அனைத்துக்கட்சி பிரமுகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவர் இல்லத்திலிருந்து அவர் உடல் காவிரியின் தென்கரை ஓயாமாரிக்குத் தகனம் செய்ய எடுத்துச்செல்லப்பட்டவளும், இலக்கிய உலகின் மொழிபெயர்ப்பு துறையில் அவரின் நினைவுகள் எதிர்காலத் தலைமுறைக்குக் கலங்கரை விளக்கமாக ஒளிவீசிக் கொண்டேயிருக்கும் என்பது உண்மை மட்டுமல்ல யாராலும் மறுக்கமுடியாத வரலாறாகும். திருச்சியின் வரலாற்றிலும் இலக்கியத்தின் வரலாற்றிலும் எம்.எஸ்.வெ(வே)ங்கடாசம் வாழ்ந்துகொண்டிருப்பார். (அவர் எழுதிய நான் கண்ட அண்ணா நூலில் வேங்கடாசலம் என்றே குறித்துள்ளார்)

-ஆசைத்தம்பி

 

3

Leave A Reply

Your email address will not be published.