திருச்சி மாவடி குளம் படகு சவாரிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முட்டுக்கட்டையா?

பொன்மலைப்பட்டி மாவடிக்குளம் படகு சவாரிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முட்டுக்கட்டையா?
திருச்சி பொன்மலைப்பட்டி, பொன்னேரிபுரம் பகுதியில் பொதுபணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 142 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாவடிக்குளம் பல ஆண்டுகளாக கட்சியினர் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2013 – 2014 ஆண்டுகளில் அப்போதையே திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் முயற்சியில் மீட்கப்பட்டது.
அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் இந்த குளத்தை பாதுகாத்து சுற்றுலா தளமாக மாற்றி, படகு சவாரி மையமாக அமைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதற்கிடையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதி ஒதுக்கீட்டில் ரூ.2 கோடி ஒதுக்கியதில் அக்குளம் தூர்வாரப்பட்டு, குளத்தின் கரைபலப்படுத்தப்பட்டு, நடைபாதை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு வந்தது. மேலும், அதிக தொகை ஒதுக்கீடு செய்து. அக்குளத்திலுள்ள ஆகாய தாமரைகள் அப்புறப்படுத்தி, படகு சவாரி விடவேண்டுமென்று இயற்கை ஆர்வலர்கள் சங்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
மாவட்ட ஆட்சியரும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறிவிட்டு இதுவரையில் அதற்கான முயற்சிகள் எடுத்ததாக தெரியவில்லை. மேலும், ஆளும் கட்சி பிரமுகரின் அழுத்தத்தின் காரணமாக ஏதோ உள்நோக்கத்தோடு படகு சவாரி விடுவதற்கு முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது. இக்குளம் மாநகராட்சி பகுதியாக இருந்தாலும் ஊராட்சி நிர்வாகமும் முன்வந்து இயற்கை ஆர்வலர்களோடு இணைந்து சுமார் ரூ.2 இலட்சம் செலவில் இரண்டு படகுகள் வாங்கி தயாராக இருக்கும் நிலையில், பொதுபணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
தற்போது அந்த அதிகாரிகளில் சிலர் இடமாற்றத்தின் காரணமாகவும், மாவட்ட ஆட்சியரின் தாமதமான முயற்சியின் காரணமாகவும் இந்த படகு சவாரி விடும் பணி தாமதப்பட்டு வருகிறது. அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாவடிக்குளம் நவீன வசதிகளோடு மேம்படுத்தப்பட்டு நடைப்பாதை உள்ளிட்ட வசதிகளோடு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்பில் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் இதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்வாரா?
