முருகன் தன் வேலால் தடாகம் அமைத்து பெற்றோரை வழிபட்ட தலம்

0
1 full

முன்பொரு காலத்தில் வேட்டையாட வந்த சோழ மன்னன் தண்ணீர் தாகம் எடுக்க நீருக்கு அலைந்து இப்போது கோயில் இருக்கும் இடத்துக்கு வரும் போது மூன்று கிளைகளாக வளர்ந்த கரும்பு ஒன்றை கண்டான்.  அதனை ஒடித்து தாகம் தீர்க்க எண்ணி கரும்பை ஒடித்த போது அதிலிருந்து இரத்தம் கசிந்தது. அவ்விடத்தை தோண்டிப்பார்த்த போது சிவலிங்கம் இருந்ததாகவும் பின்னர் கோயில் எழுப்பியதாக கூறுவர்..எங்கே எனில் நம் திருச்சியில் சிறப்பு பெற்ற குமாரவயலூரில்தான்.

சிவன் கோயிலில் முருகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தலம். மூலஸ்தானத்தில் முருகன் மயில் வடக்கு பக்கம் பார்த்து இருக்கிறது. இதற்கு தேவமயில் என்று பெயர். ஆதிநாயகி ஏனைய தலங்களில் வடக்கு முகம் பார்த்தே இருப்பாள். இங்கு மட்டும் தென்முகம் பார்த்து இருப்பது அபூர்வமானது. ஏனைய தலங்களில் முருகப்பெருமான் தாய்தந்தையரை தனித்து நின்று பூஜை செய்வார். ஆனால் வயலூரில் வள்ளி, தெய்வானையோடு சேர்ந்து பூஜை செய்கின்றார். முருகக் கடவுள் தனது வேலினால் தடாகம் உருவாக்கி அம்மை அப்பரை வழிபட்டார்.

முருகன் திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு “முத்தைத் தரு” அடியெடுத்துக்கொடுக்க எனத்துவங்கும் திருப்புகழ் பாடினார்.

2 full

திருவண்ணாமலையில் இருந்த சமயம்  ஒலித்த அசரீரி, வயலூருக்கு வா! என்றது. மகிழ்ந்த அருணகிரியார் இங்கு வந்தார். முருகன் காட்சி தரவில்லை. அசரீரி பொய்யோ? என உரக்கக் கத்தினார். அப்போது, விநாயகர் அவர் முன் தோன்றி அசரீரி உண்மையே! எனச்சொல்லி, இங்கிருந்த சுப்பிரமணியரைக் காட்டினார். முருகன், தனது வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன்பின், இத்தல முருகனைப் போற்றி அவர் 18 திருப்புகழ் பாடல்கள் பாடினார்.

கந்த சஷ்டியின்போது முருகன் தெய்வானை, பங்குனி உத்திர திருவிழாவில் முருகன் வள்ளி திருக்கல்யாணம் நடக்கும். வள்ளி திருமணத்தின் போது, முருகனுக்கு வேடன், கிழவன் போல அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப்படுவது போலவும் பாவனையாகச் செய்வர். தைப்பூசத்தன்று அருகிலுள்ள 4 கோயில் சுவாமிகளுடன், முருகன் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாகக் காட்சி தருவர்.

சதுர தாண்டவ நடராஜர் வழக்கமாக ஒரு பாதம் தூக்கி நடனமாடும், கோலத்தில் காட்சி தரும் நடராஜரை, இங்கு காலைத் தூக்காத கோலத்தில் தரிசிக்கலாம். இதை நடனமாடுவதற்கு முந்தைய நிலை. அதனால் சடாமுடியும் முடியப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. காலுக்கு கீழே முயலகன் இல்லை.மார்கழி திருவாதிரைத் திருநாள் இவருக்கு விசேஷமாக நடக்கும்.

1934ம் ஆண்டில், முருகபக்தரான கிருபானந்த வாரியார், இக்கோயிலுக்கு வந்தபோது ஜம்புநாத சிவாச்சாரியார் என்ற அர்ச்சகர், அவருக்கு சுவாமி தரிசனம் செய்வித்தார். மகிழ்ந்த வாரியார், ஐம்பது பைசாவை காணிக்கையாக கொடுத்தார். அன்றிரவில் கோயில் நிர்வாகி ஒருவரின் கனவில் சந்நியாசி வடிவில் தோன்றிய முருகன், ஐம்பது பைசா வாங்கியிருக்கிறாயே? அதை வைத்து கோபுரம் கட்ட முடியுமா? என்று கேட்டார். வியந்த நிர்வாகி, மறுநாள் கோயிலுக்கு வந்த விசாரித்தபோது, வாரியார் ஐம்பது பைசா கொடுத்தது தெரியவர அந்த காசை திருப்பி அனுப்பி விட்டார். அதன்பின், இங்கு வந்த வாரியார், நடந்ததை அறிந்து, கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்வித்தார்.

சிவன் சன்னதிக்குப் பின்புறம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இது சிவத்தலம் என்றாலும், இவரே விசேஷ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். சுவாமி, மணக்கோலத்தில் குமரனாக இருப்பதால், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட, தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும்.

அருணகிரியார் திருப்புகழ் பாட அருளிய முருகன் என்பதால், எழுத்துத் துறையில் உள்ளவர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வேண்டிக்கொள்ள கலையில் சிறப்பிடம் பெறலாம்.

அருணகிரிநாதருக்கு காட்சி தந்த பொய்யா கணபதி அருணகிரியார் இவரைப்போற்றி திருப்புகழில் காப்புச்செய்யுள் பாடியுள்ளார். யாருக்கு எவ்வளவு தகுதி இருக்கிறதோ, அந்த அளவிற்கு இவர் பொருளை சீராகக் கொடுப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இங்கு அருணகிரிநாதருக்கும் சன்னதி உள்ளது. ஆனி மூலத்தன்று இவர் முருகனுடன் புறப்பாடாவார்.

சிவனுக்குரிய வன்னி மரம் இத்தலத்தின் விருட்சமாகும். கோயிலுக்கு வெளியே முருகன் வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது.

3 half

Leave A Reply

Your email address will not be published.