சைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை கோவில்

மலையடிப்பட்டி கண் நிறைந்த பெருமாள் கோவில்

0
full

தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியை அடுத்த கிள்ளுக்கோட்டை பிரிவு சாலையில் 15 கி.மீ. தொலைவில் மலையடிப்பட்டி என்ற ஊர் அமைந்துள்ளது.

இங்கு சைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஒரு ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை கோவில் உள்ளது.

இது இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. முற்காலத்தில் ஆலத்தூர்தளி என இங்குள்ள சிவன் கோவிலை அழைத்தனர் நம் முன்னோர்கள்.

poster

மலையின் கிழக்கே முன் மண்டபம் உள்ளது. சற்று தள்ளி சதுர வடிவில் கருவறை உள்ளது. இங்கு பாறையை குடைந்து சிவலிங்கத்தை வடிவமைத்துள்ளனர். அவர் பெயர் வாக்கீஸ்வரமுடையார். எதிரே நந்திதேவர்.

உள் சுற்றில் வடக்கே தட்சிணாமூர்த்தி, தெற்கே வீரபத்திரர் மற்றும் சப்த மாதாக்கள், மேற்கே முருகன், சிங்க வாகனத்தில் சங்கர நாராயணர் அருள் பாலிக்கின்றனர்.

பிற்காலத்தில்தான் மலையை ஒட்டி சுற்று சுவர் அமைக்கப்பட்டு விநாயகர், முருகன், அம்பாள் வடிவுடைநாயகி ஆகியோரின் சந்நதிகள் அமைக்கப்பட்டன.

ஏரழிஞ்சி மற்றும் வில்வம் தலவிருட்சங்கள்.

ஏரழிஞ்சி இந்த மரத்தின் சிறப்பு என்னவெனில் இதன் விதை கீழே விழுந்தால் திரும்பவும் மரத்திலேயே சென்று ஒட்டிக்கொள்ளுமாம். அதனால் இந்த விதை முளைப்பதில்லை.

என்னடா, சைவ வைணவ ஒற்றுமை என்றாயே என்கிறீர்களா? பொறுங்கள் வைணவக் கோயிலைப் பற்றி சொல்கின்றேன்.

ukr

முதலில் தீர்த்தம் என்று பார்த்தால் கோயிலுக்கு முன் சுனை ஒன்று உள்ளது. இதனை சக்கர தீர்த்தம் அல்லது சுதர்சன தீர்த்தம் என்பர் இதனை இறைவனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

வலதுபுறம் கமலவல்லித்தாயார் சந்நதி உள்ளது. இடதுபுறத்தில் திருமங்கையாழ்வார், ராமானுஜர். நாதமுனிகள், விஷ்வக்சேனர் சிலைகள் உள்ளது.

நடுவில் கருடாழ்வார் மற்றும் பலிபீடம் மலையை குடைந்து முன் மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் அமைக்கப்பட்டுள்ளன.

முன் மண்டபத்தில் தரையிலுள்ள பாறையில் ஐந்து குழி அமைப்பு காணப்படுகிறது. (எப்படி ஸ்ரீரங்கத்தில் ஐந்துகுழி அமைப்பு உள்ளதோ அதுபோல) இதில் நமது வலது கை ஐந்து விரல்களை வைத்து இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு ஹரிநேத்திர தூண்கள் இடையே மூன்று வாயில்கள் வழியே பள்ளி கொண்ட பெருமாளை தரிசிக்கலாம். இதனால் பித்ரு சாபம் மற்றும் தோஷங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

அர்த்த மண்டபத்தில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத புண்டரிகாட்சப் பெருமாள், ஹயக்ரீவர், நரசிம்ம மூர்த்தி மற்றும் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் வைகுண்டநாதன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.

கருவறையில் இரு தூண்கள் அதுதான் ஹரிநேத்திர தூண்கள் உள்ளது. இதன் வாயில்கள் வழியே சிருஷ்டி, ஸ்ருதி, லயம் என்ற மூன்று வாயில்கள் வழியே பள்ளி கொண்ட பெருமாளான அனந்த பத்மநாபரை தரிசிக்கலாம். அவர் திருவடிகளை தாமரை மலர்கள் தாங்குகின்றன. இவரே கண்நிறைந்த பெருமாள். இவரை தரிசிப்பதால் கண் சம்பந்தமான நோய்கள் தீர்கின்றன. ஏராளமான பக்தர்கள் கண்பார்வை பெற்றுள்ளனர்.  இவரின் பாதத்தை தாமரை தாங்குவதால் பாத தரிசனம் காண செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இவர் திருவனந்தபுரம் பத்மநாதசுவாமிக்கு நிகரானவர்.

பெருமாளை சுற்றி இறக்கை விரித்த கருடன், இட்ச, கின்னர, கிம்புருடர்கள், தும்புரு, நாரதர், வித்யாதரர், இந்திரன், வருணன், வாயு, குபேரன், பிரம்மா, அக்கினி, சூரியன், சந்திரன், யமன், காமதேனு, கற்பகவிருட்சம், அட்சயபாத்திரம், மது, கைடபர் (அசுரர்கள்)ஆகியோர் பெருமாளை வழிபட்டபடி காட்சி தருகின்றனர்.

துவாரபாலகர்களுக்கு இரண்டு கைகள் மட்டுமே உண்டு. இது கூட விசேஷம் தானே.

இங்கு ஒரே மலையில் குடவரை கோயில்களில் சிவா-விஷ்ணு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பிரதோஷநாட்களில் மக்கள் கிரிவலம் வருகின்றனர்.

வாய்ப்பு கிடைத்தால் ஒரு நடை சென்றுவிட்டு வாருங்களேன்.

half 1

Leave A Reply

Your email address will not be published.