“தன்னம்பிக்கை தமிழ்“ உடன் ஒரு நேர்காணல்

உங்களது சொந்த ஊர் எது?லால்குடியை அடுத்த மாந்துறை.
பெற்றோர்?
அப்பா தமிழ்பேராசிரியர், அம்மா ஐஏஎஸ் ஆபீசர். அப்பாவிற்கு தமிழ்பற்று அதிகம். நான் ஒரே பெண். அதனால் தமிழ் என பெயரிட்டனர். அம்மா சென்னையில் பணிபுரிந்ததால் நான் படித்தது சென்னையில். சென்னையில் நிறைய பள்ளியில் படித்தேன். கேசரி பள்ளியில் படித்தபோது எனக்கு கிடைத்த தமிழ் ஆசிரியர், சமூகவியல் ஆசிரியர்கள் எனக்குள்ளே தமிழையும், சமூக அறிவியலையும் வளர்த்தனர். பிளஸ்டூ வரை படித்தேன்.
பின்னர் உளவியல் தபால்வழியில் படித்தேன்.லால்குடி புலவர் அருணாதான் அப்பா. அவர் திமுகவை சேர்ந்தவர். கலைஞர் தலைமையில்தான் எனது பெற்றோர் திருமணம் நடந்தது. கோவிந்தம்மாள் எம்.ஏ.பிட். (அம்மா)வேலையை ராஜினாமா செய்து விட்டு 1969-ல் எம்.எல்.ஏ. எலெக்ஷனில் நின்று தோற்றுவிட்டார். கலைஞர் மறுவாய்ப்பு தந்தபோதும் அதிலும் தோல்விதான்.

உங்கள் திருமணம் பற்றி?
ப்ளஸ் டூ முடித்துவிட்டு, மருத்துவக்கல்லூரிக்கு என்ட்ரன்ஸ் கோச்சிங் கிளாஸிக்காக லால்குடியிலிருந்து திருச்சி வந்து போய்க்கொண்டு இருந்தேன். அப்போது ஒரு ஆண் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்னிடம் காதல் பிரபோஸ் செய்தார்.
அதன் பின் எனக்கு திருமணம் என்று பேசும்போது அவரை தேர்வு செய்தேன். பின்னர்தான் தெரிந்தது அவருக்கு திருமணத்திற்கு முன்னரே பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்று.
இது தெரியவந்தவுடன் உடனே எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்ள நினைத்தோம்.
அப்போது இந்த அளவுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை பிரபலம் ஆகவில்லை. சென்னையில் தான் இருந்தது. எங்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்தோம். அப்போது எங்கள் இருவருக்கும் எச்.ஐ.வி. இருப்பது தெரியவந்தது. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்திற்கு தள்ளப்பட்ட நான், எனது முதல் பெண்குழந்தைக்கு அந்த பரிசோதனையை மேற்கொண்டேன். குழந்தைக்கு இருந்தால் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என, ஆனால் என் குழந்தைக்கு எச்.ஐ.வி. இல்லை. மனதில் சிறு நம்பிக்கை. குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வர நான் எச்.ஐ.விக்கு சிகிச்சை மேற்கொண்டேன்.
எத்தனை குழந்தைகள் உங்களுக்கு?
2 பெண் குழந்தைகள். 1 இறந்து விட்டது.
எச்.ஐ.வி. தொற்று எதனால் பரவுகிறது?
ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரைமுறை இல்லாமல் போகையில், ஊசி மூலம், அம்மாவிற்கு எச்.ஐ.வி. இருந்தால் குழந்தைக்கு வரும், ரத்தம் ரத்தம் சம்பந்தப்பட்ட செயல்களால் வரும். அதற்கு எச்.ஐ.வி.க்கு மருத்துவம் செய்கிறேன் என்று கூறும் போலி மருத்துவர்களிடம் சென்று ஏமாற வேண்டாம். ஏனெனில் நானும் எனது கணவரும் அப்படி ஏமாந்ததால்தான்,அவர் 27 வயதில் அவர் இறந்தார். அப்போது எனக்கு 23.
எப்படி சிகிச்சை எடுத்துக்கொண்டீர்கள்?
எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஏஆர்டி மருத்துகள் கிடைக்கிறது. அவற்றை எடுத்துக்கொண்டால் மட்டும் போதாது சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும்.
என்ன என்ன சிகிச்சை எடுத்துக்கொண்டீர்கள்?
தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன். இப்போது தாலுக்கா மருத்துவமனையிலும் இந்த மருந்துகள் கிடைக்கும். சிகிச்சைக்கு பின் எச்.ஐ.வி. வைரஸ் இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்கிறேன். சத்தான உணவு எடுத்துக்கொள்கிறேன். எங்களுக்கு வழிகாட்டியாய் இருந்தவர் இராமபாண்டியன். மாத்திரைகளுடன் யோகா, மூச்சுப்பயிற்சி, செய்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி கூடும். அதனுடன் சத்தான, ஆரோக்கியம் நிறைந்த உணவுகளான கொண்டைகடலை, கீரைகள், சாப்பிடணும். ஒவ்வாத உணவுகளை சாப்பிட வேண்டாம்.
இந்த சமூகத்தின் முன் நீங்கள் வைக்கும் கோரிக்கை என்ன?
சமூகத்தில் வேலைவாய்ப்புகள் தரவேண்டும். எங்களை ஒதுக்கி வைக்கக் கூடாது.
உங்களுக்கு அரசு என்ன திட்டங்கள் வைத்துள்ளது? உதவுகிறார்களா?
மாதாந்திர உதவித்தொகை மத்திய அரசு தரவில்லை. மாநில அரசு அதுவும் கிராமங்களில் ரூ.1000 தருகிறார்கள். நகர்ப்புறங்களில் உதவித்தொகை. எதுவும் இல்லை. விதவை, முதியோர் உதவித்தொகையாக ரூ.1000 தருகிறார்கள். சத்துமாவு ஏஆர்டி மையத்தில் கொடுத்தால் நல்லது. உதவித்தொகை கொடுத்தால் நல்லது.
சமூகத்திற்கு உங்கள் அறிவுரை?
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்ணை தவறாக பார்க்கிறார்களே ஒழிய, அதற்கு முதல் காரணம் ஆண்தான் என்பதை இந்த சமூகம் உணர வேண்டும்.
உங்கள் தன்னம்பிக்கை பேச்சால் செஞ்சிலுவை சங்க இளைய தலைமுறையை ஈர்த்துள்ளீர்கள்? அவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
இளைஞர்களுக்கு திருமணத்திற்கு முன் எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொண்டு திருமணம் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் பெற்ற விருதுகள் பற்றி சொல்லுங்கள்?
2007-ல் சென்னையில் சிறந்த சாதனையாளர் விருது பெற்றேன். திருச்சி பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சாதனையாளர் விருது தந்தது. (ஜெயந்தி ராணி அவர்கள் பரிந்துரையின் பேரில்), ரோட்டரி சங்கத்தில் வொக்கேஷனல் எக்சலன்ஸ் விருது பெற்றேன். யாழ்ப்பாணத்தில் ஒரு மையத்தில் சாதனையாளர் விருது பெற்றேன்.
வெளிநாடுகள் சென்றது தொடர்பாக கூறுங்கள்?
2 முறை இலங்கைக்கு சென்று பயிற்சி கொடுத்தேன். அதன்பின் அவர்கள் ஏற்படுத்திய தொண்டு நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி கொடுத்தேன். சர்வதேச கருத்தரங்குகளில் கலந்து கொண்டேன். மேலும், இலங்கை, கனடா, தாய்லாந்து, ஆம்ஸ்டர்டாம் சென்று அங்கு நடக்கும் எச்.ஐ.வி. கருத்தரங்குகளில் பங்கேற்று அவர்கள் எப்படி இந்நோயை எதிர்கொள்கின்றனர், அதற்கான வழிமுறைகள் என படித்துக்கொள்கிறேன். பாங்காங்கில் “இந்தியாவில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்களை”ப்பற்றிய ஒரு கட்டுரையை பதிவு செய்தேன்.
-வெற்றிச்செல்வன்
