கிராமத்து மரபணு புரட்சியாளர் – அங்கம்மாள்

காதில் விழுந்த (திருச்சி) வரலாறு - 4

0
full

திருச்சி-பொன்மலையை அடுத்துள்ள ஓர் அழகிய சிற்றூர் கீழக் கல்கண்டார்கோட்டை. தற்போது மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியாக உள்ளது. இந்த ஊரின் மேற்கே உய்யகொண்டான் ஆறு ஓடுகிறது. மற்ற மூன்று திசைகளிலும் வயல்கள் சூழ்ந்திருக்கும். கேரள கிராமங்கள் போன்று தென்னை மர சோலைக்குள் இந்த ஊர் இருக்கும். வயலும் வயல் சார்ந்த இந்த மருதநிலத்தில் 1925ஆம் ஆண்டு வாக்கில் பிறந்தவர்தான் அங்கம்மாள். கல்லணையையொட்டியுள்ள தோவூரில் பெருமாளுக்கு வாழ்க்கைப்பட்டாலும், தோவூரில் வாழாமல் தான் பிறந்த கீழக் கல்கண்டார்கோட்டையில் அந்தக் காலத்தில் வடக்குத் தெரு என்று அறியப்பட்டு, தற்போது பெரியார் தெரு என்று அழைக்கப்படும் அத் தெருவில் பெருமாளோடு இணைந்து வாழ்ந்து வந்தார்.

10 ஆண்டு காலம் குழந்தை பேறின்மையாக இருந்த இவருக்கு 1955இல் வாக்கில் நீலா என்னும் பெண் குழந்தையும் 1960 வாக்கில் மனோகரன் என்னும் ஆண் குழந்தையும் பிறந்தன. பிறந்த ஊரிலே மணம்முடித்த நிலையிலும் வாழும் வாய்ப்புக் கொண்ட பெண்கள் தைரியசாலிகாவும் அஞ்சாத உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். அங்கம்மாளும் விதிவிலக்கல்ல. தெருவில் யார் வீட்டில் சண்டை, கூச்சல், குழப்பம் என்றால் அங்கம்மாள் போய் நிற்பார். மாமியார் மருமகள் சண்டை, அண்ணன் தம்பி சண்டை, பக்கத்து வீட்டார் சண்டை எந்த சண்டையாக இருந்தாலும் அந்தப் பிரச்சனைகளைப் பேசி தீர்த்து வைப்பார். தவறு யார் பக்கம் இருந்தாலும் அவர்கள் உறவினர்கள் என்றாலும் நெற்றிக் கண்ணைத் திறந்து குற்றம் குற்றமே என்று தீர்ப்புரைக்கும் பெண் நக்கீராக ஊரில் வலம் வந்தார். அங்கம்மாளின் நெற்றிக்கண் பார்வைக்கு ஆண்களும் அஞ்சுவார்கள் என்றால் அவரின் ஆளுமையை உணர்ந்துகொள்ள முடியும்.

அங்கம்மாள் ஒல்லியான உயரமான உடல் வாகு, 6 அடி உயரம் இருப்பார். நீண்ட முகம், வாயில் வெற்றிலைப் பாக்கு மென்றுக் கொண்டிருப்பார். காலை நீட்டி உட்கார்ந்திருக்கும்போது ஒரு காலின் மீது மற்றொரு காலை வைத்து கம்பீரமாக அமர்ந்திருப்பார். பள்ளிப் படிப்பு படிக்காத அங்கம்மாள் கை வைத்தியம் கற்றுக்கொண்டவர்.  அவரிடம் சென்று காய்ச்சல், கழிச்சல், மாந்தம், வயிற்று வலி, சீதபேதி என்று சொன்னால் உடனே நம் வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி அந் நோய்களைப் போக்க வழிமுறைகளைக் கூறுவார். கடுமையான இருமல் என்றால் வெற்றிலையில் தேனைத் தடவி இரவு படுக்கபோகும் முன் கடைவாய் பல்லில் வைத்துக் கொண்டால் போதும் அதன் வெற்றிலை தேன்சாறு இறங்கி இருமலைக் கட்டுப்படுத்திவிடும் என்பார். சளித் தொல்லை என்றால் நாலு மிளகு 5 அரிசி எடுத்து இரண்டையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் அதன் சாறு இறங்கினால் சளி நின்றுவிடும் என்பார். பிள்ளைகளுக்கு அம்மைநோய் வந்தால் அந்த வீட்டிற்குச் சென்று நோய் தீரும்வரை நாள்தோறும் கவனித்து வருவார். அம்மை நோய் தீர்ந்து பிள்ளைகளை வேப்பில்லை நீரில் குளிப்பாட்டி பின்னர் குடிக்க இளநீர் கொடுப்பார். அந்த இல்லத்தார் அங்கம்மாளின் காலில் நீர் ஊற்றி விழுந்து வணங்குவார்கள். இளநீர், வேப்பில்லை, வெல்லம் கலந்து அரிசி மாவோடு வெற்றிப்பாக்குக்கு என நாலணா (25 பைசா) கொடுப்பார்கள். அங்கம்மாள் அதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வார். பிள்ளைகளுக்குக் கொடுக்கவேண்டிய உணவுமுறைகளைப் பட்டியலிடுவார். பெற்றோர் கைக்கட்டி கேட்டுக் கொள்வார்கள்.

poster

இது மட்டுமல்ல கீழக் கல்கண்டார்கோட்டை கிராமத்தில் 1990 வரை பெரும்பாலான குழந்தைகள் இவர் பிரசவம் பார்த்து பிறந்த குழந்தைகள்தான். பிள்ளை பிறப்பதில் நெருக்கடி ஏற்பட்டால்தான் மருத்துவமனையில் பிள்ளைகள் பிறக்கும். ஊரில் உள்ள பிள்ளைகள் அனைவரும் எந்த தமிழ் மாதத்தில் எத்தனையாவது நாளில் பிறந்தார்கள் என்பதை மறக்காமல் சொல்லுவார். சுமார் 500 பிள்ளைகளின் பிறப்பை அப்படியே மூளையில் பதிவு செய்து வைத்திருப்பார். மேலும் பிள்ளைகளின் பிறப்போடு மழை பொய்தது, புயல் வீசியது, கொடுமையான பஞ்சம் வந்தது, மின்சார விளக்கு வந்தது, ஊருக்குப் பேருந்து வந்தது எல்லா கதைகளும் உடன் வந்துகொண்டே இருக்கும். 70 வயதில் சுமார் 50 ஆண்டுகால வரலாற்றை எந்தக் குறிப்பும் இல்லாமல் சொல்வார்.

அங்கம்மாள் கிராமத்தில் விவசாய நிலத்தில் கூலியாகவும் வேலை பார்த்தவர். கிடைத்த வருவாயை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தவர். எல்லாரிடத்தும் அன்பு செலுத்துவார். 1996ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுபவம் வாய்ந்த பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகளை நியமித்தார். கீழக் கல்கண்டார்கோட்டைக்கு தமிழ்நாடு அரசால் அங்கம்மாள் கிராம மருத்துவச்சியாக நியமிக்கப்பட்டார். குறைந்த அரசு ஊதியமும் பெற்றார். இதனால் கீழக் கல்கண்டார்கோட்டையை அடுத்துள்ள கிழக்குறிச்சி, ஆலத்தூர் போன்ற ஊர்களிலும் அங்கம்மாளின் மருத்துவ சேவை தொடர்ந்தது. எப்படிப்பட்ட பிரச்சனைக்குரிய பிரசவம் என்றாலும் கொஞ்சம் விளக்கெண்ணெய், கொதிக்கும் சூடுநீர் இருந்தால்போதும் குழந்தை பிறந்துவிடும். அப்போதும் அங்கம்மாள் வெற்றிப் பாக்குக்கு என உரிய தொகையாக அதிகபட்சம் 2010இல் ரூ.5/- பெற்றுக் கொண்டார்.

அங்கம்மாளிடம் பேசினால் உடல் நலம் சார்ந்த பல செய்திகளைச் சொல்லுவார். “பால் கொடுக்கிற மனுசங்க, நாய், பன்றி, கழுதை, மாடு, ஆடு இவையொல்லாம் எத்தனைக் குட்டிப் போடும் என்பதை அதற்குள்ள முலைகாம்பை எண்ணினால் போதும் அவ்வளவுதான் பிறக்கும். அதிசயமாய் அதிகம் பிறக்கும் அது வேற கதை” என்பார். மேலும் இந்த உலகத்துல ஆண், பெண் விலங்கு, பறவை பிறப்பு எல்லாம் சமமாகத்தான் இருக்கும். இது இயற்கை நீதி என்பார்.

ukr
 அங்கம்மாள்

கோழி முட்டையிடுது…. ஒரு முட்டை பொட்டை கோழி முட்டை, இன்னொன்று சேவக்கோழி முட்டை. பறவைகள் இரட்டைப்படையதான் முட்டையிடும் என்பார். மனுசங்களத்தான் சில சமயத்துல பொண்ணா பிறக்கிறதும் ஆணா பிறக்கிறதும் நடக்குது… பெண்ணா பெத்தவுங்க ஆண் குழந்தை இல்லேன்னு ஏங்குறங்க. ஆணா பெத்தவுங்க பொம்பளபுள்ள இல்லையேனு ஏங்குறாங்க. ஆம்பள புள்ள பொத்துக்கவும் பொம்பளபுள்ள பொத்துக்கவும் நான் ஒரு வழிமுறை கண்டிருக்கிறேன். எப்படினா…… ஒரு பொம்பளைக்கு பொம்பளபுள்ள பிறந்தவுடன் 6 மாதம் கழிச்சி மாதவிலக்கு ஏற்படும்போது வெளியேறும் கருமுட்டை ஆண் குழந்தைக்காக கருமுட்டை. ஆம்பளபுள்ள பிறந்து பின் ஏற்படும் மாதவிலக்கின்போது வெளியேறும் கருமுட்டை பெண்குழந்தைக்காக முட்டையாகத்தான் இருக்கும். இப்ப மூணு பொம்பளபுள்ள பொத்தவுங்க ஆம்பள புள்ள வேணுமுனா…. எப்ப ஆண்குழந்தைக்கான கருமுட்டை கருப்பையில வந்து தாங்குகிறது என்பதை 28 நாளுக்கு ஒருமுறை என்று பட்டியல் போட்டுக் கொள்ளவேண்டும் என்பார்.

ஆண்குழந்தைக்காக கருமுட்டை கருப்பையில் இருப்பதை பட்டியலின்படி கண்டுகொண்டு பின்னர் மாதவிலக்கு ஏற்பட்ட 11,12,13 இந்த மூன்று நாள்களில் ஆண் பெண் இணைந்தால் ஆண்குழந்தை பிறக்கும் என்பார். யாரும் இதை செய்து பார்க்க முன்வரவில்லை. அங்கம்மாளின் ஊரை சார்ந்த அவரின் உறவினர் ஒருவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவரிடம் இந்த செய்தியை அங்கம்மாள் சொல்ல, அவர், அங்கம்மாள் கூறியபடி 28 நாள்களுக்கான பட்டியலை தயார் செய்தார். 2000 ஆம் ஆண்டில் அவரின் துணைவியாருக்கு அங்கம்மாளின் அருள்வாக்கின்படி ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் திருச்சி தூய வளனார் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரும் அங்கம்மாளின் 28 நாள் பட்டியலைத் தயார் செய்தார். அவரின் துணைவியாரும் ஆண் குழந்தை பெற்றுள்ளார்.

நம் மருத்துவர்களால் இதுவரை இனம் காணமுடியாத ஆண், பெண் குழந்தை பிறப்பை அங்கம்மாள் தன் எளிமையான பொதுஅறிவு கொண்டு சிந்தித்தது பெருமையாக உள்ளது. இந்த நவீன காலத்தில் மரபணு புரட்சி (Gene Revolution) ஏற்பட்டுள்ளது. அமெரிக்க போன்ற நாடுகளில் தற்போது ஆண்குழந்தை வேண்டுமா? பெண்ணின் X குரோமசோமையும் ஆண்ணின் Y குரோமசோமையும் செயற்கையாக இணைத்து ஆண் குழந்தையும், பெண்ணின் X குரோமசோமையும் ஆண்ணின்  X குரோமசோமையும் செயற்கையாக இணைத்து பெண் குழந்தையும் உருவாக்கி தருகிறார்கள். இதற்கு ஆகும் செலவு இந்திய மதிப்பில் சுமார் 30 இலட்சம். ஆனால் அங்கம்மாள் 1980களில் ஆண் குழந்தை பிறப்புக்கும், பெண் குழந்தை பிறப்புக்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளார் என்பது கதையல்ல….. வரலாறு. 2010 ஆண்டில் மறைந்த அங்கம்மாளின் சிந்தனையில் உதித்த மரபணு சிந்தனைகள் 1980களில் அமெரிக்காவை எட்டியிருந்தால் அங்கம்மாள் நோபல் பரிசும்கூட பெற்றிருப்பார்.

-ஆசைத்தம்பி

அங்கம்மாள்

half 1

Leave A Reply

Your email address will not be published.