துன்பம் நேர்கையில் யாழெடுத்து …

0
1 full

நண்பன் தென்னூர் யாதவன், எனது 30 ஆண்டு கால நண்பன். (இப்போது   ‘நெற்றிக்கண்’  என்ற  பத்திரிகையில் வால்மீகி’ என்ற புனைப்பெயரில்) நிருபராக பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.

திருச்சி தென்னூரில் வசித்த போதும், ஸ்ரீரங்கத்தில் வசித்தபோதும் யாதவன் வீட்டுக்கு பலமுறை சென்றிருக்கிறேன்.

மழைபோல் அன்பைப் பொழிபவன். யாதவன் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் யாதவனின் அம்மா சாந்தா அம்மா உணவு பரிமாறி என்னை உபசரித்திருக்கிறார். அவர்களைப் பார்க்கும்போது, பேசும்போது என்னைப் பெற்ற அம்மாவைப் போல் பாச உணர்வு மனதில் ஏற்படும்.

2 full

20.02.2020 அன்று சாந்தாம்மா இறந்த செய்தி கேள்விப்பட்டபோது என்னையும் அறியாமல் அழுகை வந்தது.

அவங்க உடல் நிலை சரியில்லாமல் இருந்தது கேள்விப்பட்டு ஹார்லிக்ஸ், ஆப்பிள் பழங்கள் எல்லாம் வாங்கிட்டு போய் அவங்களை பார்த்துட்டு வரணும்னு  நினைத்துக் கொண்டிருந்தேன்.

திடீரென்று அவங்க இறந்து போனது மனதை கனமாக்கியது. நண்பன் யாதவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

நண்பர்களை உபசரிப்பதில் யாதவனை மிஞ்ச முடியாது, அன்பை செலுத்துவதில் யாதவன் அம்மாவைப்போல்.

30 ஆண்டுகளுக்குமுன்பு யாதவன் வீட்டில் பாக்கெட் நாவல்கள் நிறைந்து குட்டி நூலகம்போல் இருக்கும். ராஜேஷ்குமார் நாவல்கள் என்றால் விரும்பி படிப்பான். ஒவ்வொருமுறை அவன் வீட்டுக்குச் செல்லும்போதும் அங்கிருந்து நிறைய நூல்கள் எடுத்து வருவேன்.

“தஞ்சாவூர் அரண்மனை, தஞ்சை பெரியகோவில் எல்லாம் சுற்றிப் பார்க்கணும்” என்று எப்போதோ யாதவனிடம் சொல்லி இருந்தேன். போன மாதம் தன் காரில் என்னை  அங்கே அழைத்துச் சென்றான்.

“ராஜேஷ்குமார் எழுதிய நாவல்கள் விரும்பிப் படித்த நீ எப்படி அரசியல் புலனாய்வு இதழில் இப்போது பணி புரிகிறாய்?” என்று யாதவனிடம் கேட்டேன்.

அதற்கு யாதவன் “ராஜேஷ்குமார் கதையில் வரும் விவேக், ரூபலாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.  கொலை, குற்றங்களை அவர்கள் புலனாய்வு செய்து கண்டு பிடிப்பது எனக்கு பிடிக்கும்.  அதுதான் என்னை புலனாய்வு பத்திரிகையில் நிருபராய் பணியாற்ற வைத்தது” என்றான்.

ராஜேஷ்குமாரின் வாசகரான யாதவனின் அம்மா இறந்த செய்தி  ராஜேஷ்குமாருக்கு வாட்ஸ் அப்பில் தெரியப்படுத்தினேன்.

உடனே ராஜேஷ்குமார்  அவர்கள், தென்னூர் யாதவனுக்கு போன் பண்ணி, அம்மாவின் பிரிவால் சோகத்தில் இருந்த  அவனுக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறார்.

ராஜேஷ்குமார் அவர்களின் ஆறுதல் வார்த்தைகள், காயம் பட்ட புண்ணிற்கு மயிலிறகால் மறந்து தடவுவதுபோல் யாதவனுக்கு ஆறுதல் தந்திருக்கிறது.

எழுத்தாளர்கள் என்பவர்கள் பாராட்டு விழாக்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், தொலைக்காட்சி பேட்டிகள் போன்ற மகிழ்ச்சியான தருணங்களில் மட்டும் கலந்து கொண்டு வாசகர்களோடு பேசுவதில்லை.  தன் எழுத்தை விரும்பி வாசிக்கும் வாசகன் வீட்டில் நடந்த துக்கத்திலும்கூட பங்கு கொண்டு ஆறுதல் சொன்னதைக் கேட்டபோது மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

3 half

Leave A Reply

Your email address will not be published.