திருச்சி வரலாற்றில் மக்கள் வாழ்வோடு பிணைந்திருந்த திரையரங்குகள்

காதில் விழுந்த செய்தி

0

எம்ஜிஆர் மத்திய அரசின் பட்டத்தை திருப்பித்தந்து ஏன்?

எம்ஜிஆர் படத்திற்கு மஞ்சுளாவால் கிடைத்த விளம்பரம்

உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் 100 நாள் விழாவிற்கு எம்ஜிஆர் வந்த தியேட்டர்

இளையராஜா இசையில் அன்னக்கிளி 100 நாள் ஓடிய தியேட்டர்

30 வருடங்களாக இந்தி படங்களை திரையிட்ட தியேட்டர்

சன்டிவி மிட்நைட் மசாலாவில் இடம்பெற்ற எம்ஜிஆரின் பெண் ரசிகைகளே வெறும் பாடல்…

தமிழ் சினிமாவில் ஆபாச காட்சி அமைய காரணமான மொழி படங்கள்.

கல்லூரி மாணவர்களின் நெருக்கமான சந்திப்பு நடைபெற்ற தியேட்டர்

திருச்சியில் உலகதரமான ஆங்கில படங்களை வெளியிட்ட பெருமை …

வரிவிலக்கு படமான நாடோடி ரெமியை திரையிட்ட ஏசி தியேட்டர்

இலக்கிய ரசனைமிக்கவர்களுக்கு தீனி போட்ட தியேட்டர்

விஜயகாந்த் படத்திற்கு ஒரு வாரம் முழுவதும் ரசிகர் காட்சி ஒட்டிய தியேட்டர்

இன்னும் பல சுவாரசியான தகவல்கள்…

 

திருச்சி திரையரங்குகள் பற்றிய காதில் விழுந்த வரலாற்றின் முதல் பகுதி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது என்ற செய்தியைத் தொடர்ந்து பகுதி – 2எழுதுவதற்கு எனக்கு நம்பிக்கையைத் தந்தது என்று குறிப்பிட்டிருந்தேன். பகுதி – 3எழுதுவதற்கும் வாசகர்கள் தந்த வரவேற்புதான் அடிப்படை என்பதைப் பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

‌சந்தா 1

80களில் திருச்சியில் நிறைய திரையரங்குகள் முளைக்கத் தொடங்கின. அரசின் மொத்த வருவாயில் கேளிக்கை வரியின் மூலம் கிடைக்கும் வருவாய் 25% என்பதால் அரசு சனி,ஞாயிறுகளில் 4 காட்சிகள் என்றிருந்ததை நாள்தோறும் 4 காட்சி என்று அறிவித்தது.

காலை காட்சி 11.30 மணிக்குத் தொடங்கும். அப்படித் தொடங்கும் எல்லாப் படங்களும் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் அமைந்திருக்கும் மலையாளப் படங்கள் அல்லது ஆங்கிலப் படங்களாக இருக்கும்.

இதற்குப் பெண்கள் கூட்டம் என்பது அறவே இருக்காது. அரங்கம் முழுவதும் ஆண்களால் நிரம்பியிருக்கும். 12.30 மணிக்கு இடைவேளை விடும்வரை டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். இடைவேளை முடிந்தவுடன் 15 நிமிடங்கள் 15 நிமிட ‘பிட்’ என்று சொல்லுகின்ற ஆபாசக் காட்சிகள் திரையிடப்படும்.

அந்தக் காட்சி முடிந்தவுடன் நண்பகல் 1.00 மணியளவில் கூட்டம் ஏதோ ஒரு மனநிறைவோடும் மனமகிழ்ச்சியோடும் அரங்கைவிட்டு வெளியேறுவது அன்றாட வழக்கமாக இருந்தது.

இதுபோன்ற சூழல்களிலும் திரையரங்குகள் ஒரு அறநெறியைப் பின்பற்றிக் கொண்டிருந்தன என்றால் ஆச்சரியமாக இருக்கும்.

A  சான்றிதழ் பெற்ற படம் என்றால் 18 வயது நிரம்பியிருக்கவேண்டும் என்பது சட்டத்தின் விதி. இந்தச் சட்டத்தின்படி தோற்றத்தில் 18 வயதைக் அடையாதவர்களும் 18 வயதை கடந்தும் போதிய உயரம் இல்லை என்றாலும் டிக்கெட் கொடுக்கமாட்டார்கள். மீறி வம்பு செய்தால் திரையரங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் தர்மஅடி கொடுக்கவும் தயங்கமாட்டார்கள்.

மலையாளத் திரைப்படங்களுக்கும் ஆங்கிலத் திரைப்படங்களுக்கும் தமிழில் தலைப்பு கொடுக்கும்போது இரவு என்பதை இலவச இணைப்பாக இணைத்துக் கொள்வார்கள்.

மழு என்ற மலையாளப் படத்திற்குத் தமிழில் ‘மாமனாரின் இன்ப வெறி’ ஈட்டா என்பதற்குக் ‘காட்டில் காமவெறி‘, ஈவனிங் டியூசன் என்பதற்கு டீச்சரின் இரவுகள், அவளோட ரவுகள் என்பதற்கு அவளின் இரவுகள் என்றும் ஆங்கிலப் படங்களுக்குத் தட் மேன் இன் இஸ்தான்புல் என்பதற்கு இஸ்தான்புல் இரவுகள் என்றும், பியர் ஓவர் சிட்டி என்பதற்கு நகரத்தின் காம இரவுகள் என்ற வகையில் சம்பந்தம் சம்பந்தமில்லாமல் தமிழில் சுவரொட்டிகளை வெளியிட்டு ஆண்களைத் திரையரங்கிற்கு வரவைக்க வலை வீசுவார்கள்.

இந்த ஆண்கள் கூட்டத்தில் அதிகம் இளைஞர்களும் அந்தக் காலக் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

80களில் ராஜா திரையரங்கில் பகல் 11 மணி காட்சி செம்மீன் என்ற மலையாளப் படம் திரையிடப்பட்டது. மாணவர்களின் கூட்டத்தால் அரங்கம் நிரம்பி வழிந்தது. படம் ஓடி இடைவேளை விடப்பட்டது. இடைவேளைக்குப் பின் அந்த 15 நிமிடமும் கடந்து போனது. 30 நிமிடம் ஆனது. நண்பகல் 1.30தொட்டும் பிட் போடப்படவில்லை என்பதால் மாணவர்கள் கூட்டம் கூச்சல்போட்டுக் கலாட்டா செய்தனர். நாற்காலிகள் உடைக்கப்பட்டன.

82இல் முதுகலை தமிழ் படித்தபோதுதான் மலையாளத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர் தகழி சிவசங்கரபிள்ளையின் செம்மீன் நாவல்தான் திரைப்படமாக எடுக்கப்பட்டு, 1965இல் இந்தியாவின் மிகச் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டுத் தங்கத்தாமரை (பத்மஸ்ரீ) விருது வழங்கப்பட்டது.

84இல் கலையரங்கில் 11 மணி காட்சியாகத் திரையிடப்பட்டபோது அதே படத்தை இலக்கியத் தரத் தில் இரசிக்கவும் முடிந்தது என்றால் சினிமா எப்படி நம்மை ஆக்கிரமித்திருந்தது என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். இனித் திருச்சியில் தற்போதும் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் திரையரங்குகளின் வரலாற்றைப் பார்ப்போம்.

பேலஸ்

மதுரை சாலையில் திருச்சி பள்ளிக் கல்வி அலுவலகத்திற்கு நேர் மேற்கே இந்தத் திரையரங்கம் அமைந்துள்ளது. இந்தத் திரையரங்கில் நிறைய எம்ஜிஆர் படங்கள் வெளிவரும். இந்தத் திரையரங்கின் உரிமையாளர்தான் அரியமங்கலம் சரோஜா (முதல் பகுதியில் காட்டூர் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுவிட்டது) திரையரங்கையும் நிர்வகித்து வந்தார் என்பதும். அவர் வீதிவடங்கம் என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று நண்பர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன்.

1971இல் எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாகாரன் திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படம் எம்ஜிஆருக்குச் சிறந்த நடிகர் என்ற தகுதியின் அடிப்படையில் இந்திய அரசின் பாரத் பட்டம் வழங்கப்பட்டது.

அந்தப் பாரத் பட்டத்தில் தாமரைப் படம் இருந்தது. மேலும் பட்டத்தில் இந்தி எழுத்துகளும் ஆங்கில எழுத்துகளும் இருந்தன. தமிழில் எழுத்துகள் இல்லை என்று எம்ஜிஆர் அந்தப் பட்டத்தை இந்தி அரசிடமே திருப்பித் தந்தார்.

எம்ஜிஆர் காஷ்மீரில் கைடாக நடித்த இதயவீணை படம் பேலஸில்தான் வெளிவந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி என்னவெனில், இதயவீணை கதாநாயகி மஞ்சுளா வயசுக்கு வந்தார் என்பதுதான்.

மஞ்சுளா நடிக்கவேண்டிக் காட்சிகள் ஒருவாரம் தள்ளிப்போடப்பட்டது என்றும் வயசுக்கு வந்த மஞ்சுளா மீண்டும் நடித்தார் என்று செய்திகள் மஞ்சுளாவைச் சுற்றி வந்ததுகொண்டிருந்த காலம். படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பி மஞ்சுளாவைப் பத்திரிக்கையாளர் போட்டோ எடுத்து, ரிக்ஷாகரன் திரைப்படத்து மஞ்சுளாவின் போட்டோவையும் தற்போது எடுத்த போட்டோவையும் இணைத்துப்போட்டு வயதுக்கு வருவதற்கு முன் மஞ்சுளா, வயதுக்கு வந்தபின் மஞ்சுளா என்று நாளிதழ்களும் வார இதழ்களும் போட்டி போட்டுக்கொண்டு செய்திகளை வெளியிட்டன. இது இதயவீணைக்கு நல்ல விளம்பரமாக அமைந்தது.

எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகிய பின் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் இங்குதான் வெளியிடப்பட்டது.

வெளிவந்த முதல்நாள் இரசிகர்களுக்கான சிறப்பு காட்சி காலை 7 மணிக்கு நடைபெற்றது. இரசிகர் காட்சிக்கு ஆண்களும் பெண்களும் காலை 4 மணியிலிருந்து குவியத் தொடங்கினார்கள்.

எம்ஜிஆர் இரசிகர் மன்றத் தலைவர் முசிறி புத்தன் அவர்களின் வழியாக இரசிகர்களுக்கு முன்கூட்டியே டிக்கெட் அதிக விலைக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த இரசிகர் காட்சி டிக்கெட் எல்லா வகுப்புக்கும் ரூ.10 என்றும் ஒரே கட்டணம்தான். ஆனால் பிளாக்கில் ரூ.25 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது என்ற வரலாறு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்கு மட்டுமே உண்டு.

இத் திரையரங்கில் நாகேஷ் நடித்த எதிர்நீச்சல், பாலச்சந்தரின் அரங்கேற்றம், சிவாஜியின் ராஜா, ஜெய்சங்கர் நடித்த எங்க பாட்டன் சொத்து, கமல் ரஜினியின் நினைத்தாலே இனிக்கும் போன்ற திரைப்படங்கள் வெளிவந்தன.

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் 100 நாள் விழாவிற்கு எம்ஜிஆர் இந்தத் திரையரங்கிற்கு வந்ததாகவும் செய்திகள் உண்டு. தற்போது முதன்மை நிலையில் ஓடிய திரைப்படங்களை 2ஆம் நிலையில் திரையிடப்படும் அரங்கமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இராமகிருஷ்ணா

இந்தத் திரையரங்கம் மரக்கடைக்கு அருகில் தென்னூர் செல்லும் வழியில் மதுரை சாலையில் அமைந்துள்ளது. 70களில் இந்தத் திரையரங்கம் ஓடிய திரைப்படங்களை மீண்டும் திரையிடும் 2-ஆம் நிலை திரையரங்கமாகச் செயல்பட்டு வந்தது. 80களில்தான் முதல்நிலைத் திரையரங்கமாகத் திரைப்படங்களை ரீலிஸ் செய்து செயல்பட்டது.

இதில் எம்ஜிஆர் நடித்த சங்கே முழங்கு படம் வெளியிடப்பட்டது. சிவக்குமார் நடித்த ஏணிப்படிகள், ஏழாம் மனிதன், கண் சிவந்தால் மண் சிவக்கும் போன்ற பல நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் ரீலிஸ் செய்தும், மறுவெளியீடு செய்தும் இயங்கிவந்தது.

இந்தத் திரையரங்கில்தான் இளையராஜா இசை அமைத்து, இளையராஜாவின் ‘மச்சானைப் பாத்தீங்களா..’ என்னும் நாட்டுப் புற மெட்டில் அமைக்கப்பட்ட பாடலுக்காகவே ஓடிய அன்னக்கிளி முதன்முறையாக ரீலிஸ் செய்து வெளியிடப்பட்டது.

முதல் வாரம் கூட்டமில்லை. இரண்டாவது வாரமும் கூட்டமில்லை என்பதால் படம் கீழரண்சாலையில் உள்ள முருகன் டாக்கீஸிக்கு மாற்றப்பட்டுப் படம் ஓடியது.

ஸ்லோ பிக்-அப் முறையில் அன்னக்கிளி திரைப்படத்திற்குக் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. முருகன் டாக்கீஸில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஒரு மாதம் அன்னக்கிளி வெற்றிப்படமாக ஓடியது. அன்னக்கிளி மீண்டும் இராமகிருஷ்ணாவில் திரையிடப்பட்டு 100 நாள் வெற்றிகரமாக ஓடியது என்ற வரலாறு உண்டு.

இப்போதும் இராமகிருஷ்ணா 2ஆம் நிலை திரையரங்கமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருச்சியில் திரையரங்கில் ஒலி அமைப்பு மிகவும் துல்லியமாக இருக்கும் என்ற பெருமையும் இராமகிருஷ்ணா திரையரங்கிற்கு உண்டு.

கெயிட்டி

இந்தத் திரையரங்கம் மேலரண் சாலையில் திருச்சி தமிழ்ச்சங்கத்திற்கும் BSNL   அலுவலகத்திற்கும் இடையில் அமைந்திருக்கும்.

70, 80, 90கள் வரை இத் திரையரங்கில் இந்திப் படங்கள் மட்டுமே திரையிடப்படும். வேறு மொழி படங்கள் திரையிடப்படாது என்பது வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய செய்தியாகும்.

இந்தியில் வெற்றிப்படமான, யாத்தோங்கிப் பாரத், தோரஹா, ஷோலோ, கம்கிசிசே கம் நஹி, ஷாந்தி, ஆராதனா போன்ற படங்கள் வெளியிடப்பட்டன.

இந்தத் திரையரங்கில் இந்திப் படத்தின் பாட்டுப் புத்தகங்கள் தமிழ் ஒலிபெயர்ப்புடன் விற்கப்படும். இதை வாங்குவதற்கு ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டு இருக்கும். காரணம் அந்தக் காலத்தில் ஆங்கிலம் பேசினால், இந்தியில் பாடினால் சமூகத்தில் ஒருவித மதிப்பு இருந்தது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

யாத்தோங்கிப் பாரத் திரைப்படம் வந்தபோது பார்த்தவர்கள் இது எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோவில் படத்தின் கதைதான் என்று சொன்னார்கள். குடியிருந்த கோவில் பார்த்தவர்கள் யாத்தோங்கிப் பாரத் படத்தையும் பார்த்தனர்.

இதில் ஒரு வேடிக்கையான நிகழ்வும் நடைபெற்றது. அது என்னவெனில் இந்தியில் வெளியான யாத்தோங்கிப் பாரத் படம் தமிழில் நாளை நமதே எனத் தயாரிக்கப்படுகின்றது என்றும் அதில் எம்ஜிஆர் கதாநாயகனாகக் (குடியிருந்தகோவில் கதாநாயகன் எம்ஜிஆர்) நடிக்கிறார் என்பதுதான். எம்ஜிஆரும் தான் நடித்த குடியிருந்த கோவில் கதைதான் என்று தெரிந்தும் நடித்தார்.

யாதோங்கி பாரத் படத்தில் வரும் ஒரு ஆபாசக் காட்சி பாடல் போன்றே நாளை நமதே படத்திலும் எம்ஜிஆர் – லதா இணைந்து மிகவும் நெருக்கமாக “நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது.” என்ற பாடலுக்கு நடித்தார்கள். எம்ஜிஆர் ஏன் இவ்வளவு ஆபாசமாக நடித்தார் என்ற கேள்விகளை அவரின் பெண் ரசிகர்கள் முன்வைத்தனர்.

இதனால் இந்திப் படம் வெற்றிபெற்ற அளவுக்குத் தமிழில் நாளைநமதே வெற்றிபெறவில்லை என்பது முக்கியச் செய்தியாகும். மேலும் சன் டிவியில் நள்ளிரவு 12.00 மணிக்கு ஒளிப்பரப்பட்ட ‘மிட் நைட் மசாலா’வில் ஒரே எம்ஜிஆர் பாடல் இதுதான் என்றால் அந்தப் பாடல் எவ்வளவு ஆபாசமாக இருந்தது என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

இந்தியில் வெளியான ஆராதனாவை தழுவித் தமிழில் சிவாஜி நடித்த சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் ‘எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது.’ (இந்தியில் ரூப்தரா மஸ்தானா யாருமிரா தீவானா பாடல்) என்ற பாடலும் மிட் நைட் மசாலாவில் ஒளிப்பரப்பட்டது என்ற கூடுதல் செய்தியும் உண்டு. இந்திப் படங்கள் தமிழ் திரைப்படங்களில் ஆபாசக் காட்சிகள் அமையக் காரணமாக இருந்தன என்ற பேரூண்மையை விளங்கிக் கொள்ளவேண்டும்.

சந்தா 2

முருகன்

இந்தத் திரையரங்கம் திருச்சியில் உள்ள 3ஆம் நிலை திரையரங்கம். பேலஸ், பிரபா போன்ற அரங்குகளில் ரீலிஸ் செய்யப்பட்ட படங்கள் ஓடி முடிந்த பின்னர் 2-ஆம் நிலை அரங்குகளான இராமகிருஷ்ணா, ருக்மணியில் திரையிடப்படும். இதற்குப் பின்னர் 3-ஆம் நிலை திரையரங்கான முருகன் டாக்கீஸ்-இல் வெளியிடப்படும்.

வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் இந்த அரங்கிற்கு வரக் குறைந்தது ஒரு வருடக் காலம் ஆகும். 50 நாட்கள் ஓடிய திரைப்படங்கள் 6 மாதங்களில் திரையிடும் வாய்ப்பு கிடைக்கும்.

பொதுவாக எப்போதும் பழைய படங்கள்தான் இதில் திரையிட்டுக் கொண்டிருப்பார்கள். தெலுங்கில் விட்டாலச்சாரியாரின் மாயாஜாலப் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு இங்கு வெற்றிகரமாக ஓடும். இந்தத் திரையரங்கின் ரசிகர்கள் விளிம்புநிலை மக்கள் என்றழைக்கப்படும் உழைக்கும் மக்கள்.

வரகனேரி, தாராநல்லூர், தேவதானம், மார்க்கெட்டில் பணியாற்றும் சரக்கு ஏற்றுவோர், கை வண்டி இழுப்போர், ரிக்ஷா தொழிலாளர்கள், வெளியூர் லாரி தொழிலாளர்கள் என இந்தத் திரையரங்கின் ரசிகர் பட்டாளம் அமைந்திருக்கும்.

இந்த அரங்கில் முதல் வகுப்பு விழா மற்றும் பண்டிகை காலங்கள் தவிர்த்து எளிதில் நிரம்பி விடாது. திருச்சி பகுதி கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிப்போர் காதலில் ஈடுபட்டால், அவர்களின் நெருக்கமான சந்திப்பு முருகன் டாக்கீஸ் முதல் வகுப்பில் நடக்கும் என்பது எழுதப்படாத விதி.

பொங்கல், தீபாவளி, ஆடி பதினெட்டு போன்ற பண்டிகைக் காலங்களில் இந்தத் திரையரங்கம் நிரம்பி வழியும். டிக்கெட் வாங்கிக் கொண்டு இடமில்லை என்றால் திரையின் முன்பு தரையில் அமர்ந்து படம் பார்ப்பார்கள்.

வைகுண்ட ஏகாதசியின்போது, சிவராத்திரியின் போது நள்ளிரவு 12.30 முதல் 3.30 மணி வரை சிறப்பு காட்சி நடைபெறும். இந்து மதம், கிறித்தவ மதம், இஸ்லாமிய மதம் சார்ந்த பண்டிகைகள் வரும்போது அந்த மதம் தொடர்பான திரைப்படங்களைத் திரையிடுவார்கள்.

ஆடி பதினொட்டு விழாவின்போது எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை, நம் நாடு, சிவாஜி நடித்த சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவிளையாடல், ஜெய்சங்கர், நாகேஷ் நடித்த பட்டணத்தில் பூதம் இந்தப் படங்களில் ஒன்றைத் திரையிடுவார்கள். முருகன் திரையரங்கில் இந்தப் படங்களில் 10 முறைக்குமேல் பார்த்தவர்கள் உண்டு.

எம்ஜிஆர் பிறந்தநாள், நினைவுநாள், சிவாஜி பிறந்தநாள் நினைவுநாள் – இவைகளின்போது அந்தந்த நடிகர்களின் வெற்றிப்படங்களைத் திரையிடுவதை இந்தத் திரையரங்கத்தினர் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

காலம் மாறிக் கொண்டிருக்கிறது. இந்தச் செய்திகளில் சின்னச்சின்ன மாற்றங்கள் இருந்தாலும் 1950களில் வெளிவந்த படங்களை இன்றும் திரையிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தங்கப்பதுமை, உத்தமபுத்திரன், பெற்றால்தான் பிள்ளையா, ஆயிரத்தில் ஒருவன், கௌரவம், பட்டிக்காடா பட்டணமா, குலதெய்வம், பணமா பாசமா, பேசும் தெய்வம், பராசக்தி, மனோகரா, நீலமலைத் திருடன், குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும், நல்லதங்காள், துலாபாரம், சாதுமிரண்டால், தேவதாஸ், காதலிக்க நேரமில்லை, மன்னாதி மன்னன், வீரபாண்டிய கட்டப்பொம்மன், கப்பலோட்டிய தமிழன், அபூர்வராகம், இளமை ஊஞ்சலாடுகிறது, 16 வயதினிலே, கிழக்கே போகும் இரயில், புதிய வார்ப்புகள், மண்வாசனை. எனப் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும்.

விளிம்பு நிலை மக்களின் சினிமா ரசனைக்கு ஏற்பத் திரைப்படங்களைத் தேர்வு செய்து வெளியிடுவதில் முருகன் டாக்கீஸ் முதலிடத்தில் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

அருணா

இந்தத் திரையரங்கம் உறையூர் குறத்தெருவிற்குத் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஆங்கிலப் படங்கள்தான் அதிகம் வெளியாகும். சில இந்திப் படங்களும் வெளியாயின.

70களில் அருணா திரையரங்கம் என்றால் ஆங்கிலப் படங்களில் ரோஜர்மூர் நடித்த ஜேம்ஸ்பாண்ட் படங்கள் இங்குதான் வெளியாகும் என்ற பெயரைப் பெற்றிருந்தது. உலகத் தரமான ஆங்கிலப் படங்களை வெளியிட்ட பெருமை அருணா திரையரங்கிற்கு உண்டு.

உலக அளவில் புகழ் பெற்றிருந்த, The Game on the bed. Playing with Card .  டைட்டானிங் (ஆங்கிலத்தில்) இத் திரையரங்கில் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் சினிமா கிளப் திருச்சியில்தான் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதன் தலைவராக இருந்தவர் பேராசிரியர் தாமஸ். இந்திய அளவில் புகழ்பெற்ற வேற்றுமொழி திரைப்படங்கள் மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற ஆங்கிலப்படங்கள் சினிமா கிளப் உறுப்பினர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை காலையில் திரையிடப்படும். இந்தப் படங்கள் அருணா திரையரங்கில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன.

திருச்சியில் இலக்கிய ரசனைமிக்கவர்களின் விருப்பத்திற்குத் முறையான தீனிபோட்ட திரையங்கம் அருணா என்பதில் தனித்துவமான பெருமை உள்ளது.

அருணாவில் வெளிவந்த இந்தித் திரைப்படம் பாபி. இந்தப் பாடல்கள் கேட்பதற்கு ரசனையாக இருக்கும். இந்தி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ராஜ்கபூரின் மகன் ரிஷிகபூர் நடித்த படம்தான் பாபி. இந்தப் படம் திருச்சியில் 100 நாள்கள் ஓடியது.

இந்திய திரையுலகத்தை ஒரு கலக்கு கலக்கியப் படம் சிமி என்ற நடிகை நடித்த சித்தார்த்தா. காரணம் அந்தப் படத்தில் நடிகை சிமி அரை நிர்வாண காட்சியில் துணிச்சலாக நடித்திருப்பார்.

அரை நிர்வாண கோலத்தில் நடிகை விரல்களை கடவுள்போல முத்திரைக் காட்டிக் கொண்டு நிற்க, ஒரு நடிகர் அந்த நடிகையை வணங்கிக் கொண்டிருக்கும் சுவரொட்டிகள் 1976இல் திருச்சியைக் கலக்கிக் கொண்டிருந்தன. சித்தார்த்தா திரைப்படமும் அருணாவில்தான் வெளியிடப்பட்டது.

திரைப்படத்தை இலக்கியமாக பார்த்த பேராசிரியர்களுக்கு மாதம் ஒருமுறை இடம் கொடுத்து அந்தக் காலத்தில் அருணா இலக்கியவாதிகளின் இதயங்களில் இடம் பிடித்திருந்தது மறுக்கமுடியாத உண்மையாகும்.

சோனா – மீனா

மத்தியப் பேருந்து நிலையம் அருகில் இந்தத் திரையரங்குகள் ஒரே இடத்தில் உள்ளன. 90களுக்குப் பின் உருவாக்கப்பட்ட இத் திரையரங்குகள் குளிர்சாதன வசதி கொண்டவை.

இந்த அரங்கில் பாரதிராஜாவின் டிக்-டிக்-டிக், உள்ளத்தை அள்ளித்தா, பூவே பூச்சூடவா, அண்மையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற பல வெற்றிப் படங்கள் இங்குத் திரையிடப்பட்டுள்ளன.

மீனாவில் வரிவிலக்கில் சிறுவர்களுக்கான திரைப்படமான ‘நாடோடி ரெமி’ திரையிடப்பட்டது. திருச்சியில் உள்ள பல பள்ளிகளிலிருந்து மாணவர்கள் இத் திரைப்படத்தைக் குளிர் நிறைந்த அரங்கில் குறைந்த கட்டணத்தில் பார்த்து மகிழ்ந்தார்கள் என்பது சிறப்பான செய்தியாகும்.

லிபியா நாட்டின் விடுதலைப் போரை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட உமர்முக்தார் (தமிழில் பாலைவனச் சிங்கம்) திரைப்படம் மீனா திரையரங்குகளில் தினசரி 4 காட்சிகளாக 100 நாள் வெற்றிப் படமாக ஓடியது. இன்றைய நிலையில் இரு திரையரங்குகளிலும் சுமார் 4 படங்கள் ஓடுகின்றன.

 

ரம்பா – ஊர்வசி

சத்திரம் பேருந்து நிலையத்திற்கு மிக அண்மையில் உள்ளன இந்த இரு திரையரங்குகள். ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இவைகளும் 90களுக்குப் பின் உருவாக்கப்பட்டவை. குளிர்சாதன வசதிகள் கொண்டவை.

விஜயகாந்த் நடித்து வெள்ளிவிழா கண்ட ‘கேப்டன் பிரபாகரன்’ ரம்பாவில் வெளியிடப்பட்டது. 100 நாள்கள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. ரசிகர் காட்சி முதல் காட்சிதான் வழங்கும் வழக்கத்தை எல்லாத் திரையரங்குகளும் கடைபிடித்தன.

கேப்டன் பிரபாகரன் படத்திற்கு ஒரு வாரம் காலை 11.00 மணி காட்சி விஜயகாந்த் ரசிகர்களுக்காக ஒதுக்கப்பட்டது. அப்போது திருச்சி மாவட்ட விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தவர் கொ.தங்கமணி.

இவரின் முயற்சியால் ஒரு வார ரசிகர் காட்சி சாத்தியப்பட்டது. இந்த வரலாறு வேறு எந்தப் படத்திற்கும் கிடையாது என்று துணிந்து சொல்லலாம்.

ஊர்வசி திரையரங்கில் மௌனராகம், தென்மேற்கு பருவக் காற்று, மேற்கு தொடர்ச்சி மலை போன்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

2000 வாக்கில் ஒரே திரைப்படம் 4 திரையரங்குகளில் திரையிடப்படும் முறையில் ஊர்வசியில் படம் திரையிடப்படும். சத்திரம் பேருந்து நிலையம் அருகில் இருப்பதால் இதற்கு எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

 

L A

முன்பு மாரீஸ் வளாகம் என்ற பெயரில் 5 திரையரங்குகள் ஒரே இடத்தில் இயங்கி வந்தன. அப்போது மண்வாசனை, பணக்காரன், படிக்காதவன், ரஜியின் சொந்தப் படமான மாவீரன் 70விவி-இல் தயாரிக்கப்பட்டு மாரீஸ் 70விவி வெளியிடப்பட்டது. 

பின்பு சில ஆண்டு காலம் திரைப்படங்களைத் திரையிடுவதை நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்தது. அதன் பின் திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு L A

 திரையரங்கம் என்னும் புதுப்பெயரை தாங்கி கொண்டது. அதன் பின் கபாலி, விஸ்வரூபம் போன்ற பல வெற்றிப் படங்கள் இங்கே திரையிடப்பட்டன. மேலும் மதுரை சாலையில் பழைய ஜூபிடர் திரையரங்கிற்கு வடக்குப் பகுதியில் ஸ்டார் என்னும் திரையரங்கம் தற்போது இயங்கி வருகிறது.

சாலை ரோட்டில் கரூர் புறவழிச் சாலையில் அமைந்துள்ளது கோஹினூர் திரையரங்கம். இது தொடக்கக் காலத்தில் தமிழ்ப் படங்களை வெளியிட்டு வந்தது. தற்போது ஆங்கிலப் படங்களை வெளியிட்டு வருகின்றது.

இத் திரையரங்கம் இரட்டைமாடி அமைப்பைக் கொண்டது. இதுபோன்ற அமைப்பு திருச்சியில் வேறு திரையரங்கம் அமையவில்லை. இந்தத் திரையரங்கில் மகேந்திரனின் இயக்கத்தில் வெளியான மெட்டி, ஆழகிய கண்ணே போன்ற படங்கள் வெளிவந்தன.

கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலப் படங்களை வெளியிட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக டிராகுலா போன்ற பேய் படங்கள் அதிக அளவில் திரையிடப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தச் செய்தியாகும்.

வாசகர்களே, காதில் விழுந்த செய்திகளையும், நினைவில் நின்ற செய்திகளையும் எதையும் மிகைப்படுத்தாமல் திருச்சி திரையரங்குகளின் வரலாற்றைப் பதிவு செய்துள்ளோம்.

இந்த வரலாற்றில் இன்னும் சேர்க்கப்பட வேண்டிய தகவல்கள் ஏராளமாக இருக்கும். தெரிந்தவர்கள் அந்த வரலாற்றைப் பகிர்ந்து கொள்ளும் போதுதான் இந்த வரலாறு முழுமையடையும். வரலாற்றை உருவாக்கவும், புதுப்பிக்கவும் நீங்கள் எங்களோடு கரம்கோர்க்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்: 8838320628

Leave A Reply

Your email address will not be published.