திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் பலி.. பெற்றோர் புகார்

திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் பலி.. பெற்றோர் புகார்
திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தனலட்சுமி சீனிவாசன் தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மாணவ, மாணவிகள் விடுதியுடன் உள்ளது. இக் கல்லூரியில் அரியலூர் மாவட்டம், கருப்பூர் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமையாவின் மகள் ராஜேஸவரி டி பாம் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார். மாணவி ராஜேஸ்வரி இம் மாதம் 17 ம் தேதி தனது வீட்டிலிருந்து கல்லூரிக்கு வந்துள்ளார். திங்கள் கிழமை இரவு 1 மணி வரை கல்லூரி விடுதியில் உள்ள தனது சக தோழிகளுடன் நன்றாக பேசியுள்ளார்.
அதிகாலையில் மாணவி ராஜேஸ்வரி விடுதியில் காணவில்லை என சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவ இடத்தில் வந்து பார்த்த போது விடுதியின் தரைப்பகுதியில் மர்ம்மான முறையில் சடலமாக கிடந்தார். மாணவி உயிரிழந்தது குறித்து அவரது பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகத்தினர் தகவல் கூறியதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்தினை பார்த்த போது , சம்பவ இடத்தில் எவ்வித ரத்தம் சிதறிகிடக்கவில்லை. மாணவி தங்கி இருந்த விடுதியின் 3 மற்றும் 2 வது மாடி படிகள் தண்ணீர் ஊற்றி கழுவியிருந்தனர்.


மேலும் உயிரிழந்த மாணவியின் கழுத்து நெரிக்கப்பட்டும், முகத்தாடையிலும், தொடைப் பகுதியிலும் கத்தியால் குத்திய காயங்கள் இருந்துள்ளது. இதனால் மாணவி ராஜேஸ்வரியின் சாவில் மர்மம் உள்ளதென கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவக்கல்லூரி முன் போராட்டம் நடத்த முயன்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐஜி மற்றும் போலீஸார் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினருடன் பேசினர். போலீஸ் ஐஜி, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் முறையாக புகார் அளித்தால் உரிய விசாரணை நடத்திடுவோம் எனக் கூறினார். அதன் பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை ராமையன் மகள் சாவில் மர்மம் உள்ளதென புகார் கூறியதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
ஜே.கே.
