தமிழரின் நிலம் : தமிழ்நாடு ஆனது !

0
1

தமிழரின் நிலம் : தமிழ்நாடு ஆனது !

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! என்று ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தினர் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வகைகளில் வரும் எதிரிகளை வென்று மொழியையும் பண்பாட்டையும் நிலத்தையும் காத்திருக்கின்றனர். என்றால் அது மிகையாகாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதற்கான ஆதாரம் கையில் இருக்க, அதற்கு முன்பாகவே தோன்றியிருக்கலாம் என்ற கருத்துக்கள் உலா வர தமிழ் என்பது மிகவும் பண்டைய பண்பாடுகளை உள்ளடக்கிய நிலப்பகுதி என்பதை ஒவ்வொரு ஆய்விலும் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு சான்றுகளின் வழியாக உறுதி செய்து கொண்டிருக்கின்றது.

இப்படி தனக்கென்று தனி அடையாளத்தோடு இருந்த நிலப்பரப்பு, நாளடைவில் அடைந்த வீழ்ச்சியின் காரணமாக தன்னுடைய அடையாளங்களை இழந்து வந்த வேலையில் மீண்டும் வெகுண்டெழுந்து மீண்டும் பிறந்தது தமிழ்நாடு. இப்படி மீண்டும் பிறந்த தமிழ் நாட்டைப் பற்றிய பார்வையே இது..!

2

நவம்பர் 1 தமிழ் நாடு நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் பல நாட்கள் கொண்டாட நாட்களாகவும் விடுமுறை நாட்களாகவும் இருக்கின்றது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், உழைப்பாளர் தினம், தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு என்று பல நாட்கள் தமிழகத்தால் கொண்டாட்ட நாட்கள் ஆக உள்ள நிலையில் தமிழகத்திற்கு என்று ஒரு நாள் கொண்டாடப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த நாளில் அதற்கான முயற்சிகளை அடையாளப்படுத்துவதில் பெருமைப்படுகிறது எம் திருச்சி டாட் காம்.

இந்தியாவின் சுதந்திர வேட்கையோடு மொழிவாரி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையும் சேர்ந்து எழ தொடங்கியது. கலாச்சாரம், பண்பாடு, மொழி, மக்களின் வாழ்வியல் பாதுகாக்க மொழிவாரி மாநிலங்கள் வேண்டும் என்ற முழக்கம் இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கும் முழக்கமாக மாறியது. அந்தக் காலகட்டத்தில் ஹைதராபாத் நீங்களாக ஆந்திரம், மைசூர் நீங்களாக கர்நாடகம்,கேரளாவின் மலபார் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகள் சென்னை மாகாணமாக இருந்தது. இந்த சென்னை மாகாணத்தை1937ல் காங்கிரஸ் ஆந்திரம்,கர்நாடகம் பகுதிகளை தனியாக பிரிக்க வேண்டும் கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கியது.மேலும் 1938ல் வர்த்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழுவும் மொழிவாரி மாநிலம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் ஆலோசனையில் எஸ் .கே தார் குழு அமைக்கப்பட்டது.அக்குழு மொழிவாரி மாநிலங்கள் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று இந்திய அரசிடம் ஆலோசனையை வழங்கியது. தார் குழு எதிர்ப்பின் காரணமாக, 1948 மீண்டும் நேரு, பட்டேல், பட்டாபி சீதாராம் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இக்குழு சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவை தனியாக பிரிக்க ஒப்புதல் அளித்தது.

இதனிடையே பொட்டி ஸ்ரீராவடு என்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மொழிப்போர் தியாகி மொழிவாரி மாநிலம் கேட்டு சாகும்வரை உண்ணாவிரதமிருந்து மரணித்தார். இதனால் சிறிய அளவில் எழுதிக் கொண்டிருந்த தீ பெரிய அளவில் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது, தனி ஆந்திரம் கேட்கும் போராட்டம் பெரிய அளவில் பரவி 1952ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆந்திரா இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.

மேலும் நாடு முழுவதும் மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. தமிழகத்திலும் பெரியார், அண்ணா, காமராஜர், ஜீவா, மா பொ சி, சங்கரலிங்கனார், மார்ஷல் நேசமணி ஆகியோர் தமிழகத்தில் போராட்டத்தை பெரிய அளவில் முன்னெடுத்தனர்.

தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியாரும், உயிரைக் கொடுத்தேனும் தலைநகரை மீட்பேன் என்று மா பொ சியும், உண்ணாவிரதம் இருந்து உயிரை கொடுத்த சங்கரலிங்கனாரும், இலக்கியமும் இலக்கணமும் காக்கப்பட மொழிவாரி மாநிலம் வேண்டும் என்று ஜீவாவும் என தமிழகம் முழுவதும் தலைவர்கள் மொழிவாரி மாநில கோரிக்கையை பெரிய அளவில் முன்னெடுத்து போராடினார்கள்.

அப்பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பூபேஷ் குப்தா நாடாளுமன்றத்தில் மொழிவாரி மாநிலம் அமைப்பது தொடர்பாக கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய அறிஞர் அண்ணா “வடவேங்கடம் தென்குமரி ஆயிடம் தமிழ்கூறும் நல்லுலகம்” என்ற தொல்காப்பிய வசனத்தை குறிப்பிட்டு மொழிவாரி மாநிலம் நாட்டின் தேவை என்று எடுத்துரைத்தார்.

இதே காலகட்டத்தில் திருவாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் கன்னியாகுமரி இருந்தது. கன்னியாகுமரி தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் அதே சமயத்தில் திருவாங்கூர் சமஸ்தானம் மலையாள மக்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகவும் இருந்தது. இதனால் அங்கு ஆட்சி மொழியாக மலையாளம் இருந்ததாலும் தமிழக மக்கள் ஒதுக்கப்படும் நிகழ்வு தொடர் நிகழ்வாக மாறியது. சாதிய ஏற்றத்தாழ்வுகள் தமிழ் பேசும் மக்களை மேலும் ஒதுக்க தொடங்கியது. இதை எதிர்த்து மார்ஷல் நேசமணி தலைமையில் கன்னியாகுமரி எங்கும் போராட்டங்கள் வெடித்தன துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இறுதியாக 1953ல் நேருவால் ஏற்படுத்தப்பட்ட பசல் அலி கமிட்டி மொழிவாரி நிலம் தொடர்பாக அரசுக்கு பல திட்டங்களை முன்வைத்தது. அதன்படி கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டு 1956இல் மாநில மறுசீரமைப்பு சட்டம் வகுக்கப்பட்டது.

1956 நவம்பர் 1தேதி சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளா ஆகியவை பிரிக்கப்பட்டு தனி தனி மாநிலங்களாக உதயமாயின.

எண்ணற்ற உயிர் தியாகங்களுக்கும் எண்ணிலடங்கா போராட்டங்களும் கிடைத்த பரிசுதான் மொழிவாரி மாநிலம். மொழி, கலாச்சாரம், பண்பாடு, பண்டிகைகள், வியாபாரம், பழக்கவழக்கம், உணவுமுறை என இமயம் முதல் குமரி வரை எத்தனையோ வேறுபாடுகள் சூழ்ந்து நிறைந்திருந்தாலும் நாட்டில் இன்னும் ஒவ்வொரு மக்களின் வாழ்வியல் முறை காக்க பட மொழிவாரி மாநிலங்களே காரணமாக அமைந்திருக்கின்றது.

-க.இப்ராகிம்

3

Leave A Reply

Your email address will not be published.