திருச்சியில் இருந்து 9 மாவட்டங்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி அனுப்பபட்டது

திருச்சியில் இருந்து 9 மாவட்டங்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி அனுப்பபட்டது
திருச்சி மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பாக கோவிட்-19 பெருந்தொற்று நோய் பரவலை தடுக்க தடுப்பூசி மருந்துகள் சென்னையில் இருந்து திருச்சிராப்பள்ளி மண்டலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


சுகாதார அலுவலக மண்டல தடுப்பூசி கிடங்கில் மருந்துகள் வைத்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு.இ.ஆ.ப, அவர்கள் தலைமையில், மக்கள் நல்வாழ்வுத்;துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்கள், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆய்வுக்கு பிறகு தடுப்பூசி மருந்துகள் தகுந்த குளிர்பதன முறையில் பராமரிக்கப்பட்டு புதுக்கோட்டை உள்ளிட்ட 9 சுகாதார மாவட்டங்களுக்கு மருந்து வாகனத்தை இன்று (13.01.2021) கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

இந்திய அரசாங்கம் கோவிட்-19 பெருந்தொற்று நோயினை தடுக்க தடுப்பு மருந்தினை இலவசமாக வழங்க உள்ளது. இவற்றின் முதல் கட்டமாக மருத்துவத் துறையினை சார்ந்த அனைத்து மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் (பாராமெடிக்கல்), முன்களப் பணியாளர்கள்; மற்றும் இதர பணியாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை திருச்சி மாவட்டத்தில் 08.01.2021 அன்று கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வரும் 16.01.2021 அன்று மகாத்மாகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, இலால்குடி அரசு மருத்துவமனை, முசிறி அரசு மருத்துவமனை, இனாம்குளத்தூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பசுகாதாரநிலையம், புத்தாநத்தம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதாரநிலையம், இராமலிங்கநகர் நகர்புற அரசு ஆரம்பசுகாதாரநிலையம், ஆகிய 8 இடங்களில் மருத்துவப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
