ஆலயம் அறிவோம்

0

ஆலயம் அறிவோம்

அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோவில்
திருமோகூர்

மூலவர்: காளமேகப் பெருமாள்

‌சந்தா 1

தாயார்: மோகூர் வல்லி, மோகன வல்லி, மேக வல்லி

உற்சவர்: திருமோகூர் ஆப்தன்

கோலம்: நின்ற திருக்கோலம்

திசை: கிழக்கு

விமானம்: சதுர்முக விமானம்

தீர்த்தம்: ஷீராப்தி புட்கரணி

மங்களாசாசனம்: நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்

நாமாவளி: ஸ்ரீ மோஹவல்லீ ஸமேத ஸ்ரீ காளமேக ஸ்வாமிநே நமஹ

ஊர்: திருமோகூர்

தலவரலாறு

திருப்பாற்கடலில் சயனித்து திருவருள் புரிகின்ற இறைவன் நாராயணன் தேவர்களைக் காக்கும் பொருட்டு மோகினி அவதாரம் எடுத்த திருத்தலம். அக்காலத்தில் “மோகன ஷேத்திரம்” என்று பெயர் பெற்று விளங்கியது. பின்னாளில் அப்பெயர் “மோகூர்” என்றானது.

திருமால் கோவில் கொண்டு திருவருள் புரிகின்ற காரணத்தால் இத்தலத்திற்கு “திருமோகூர்” என்பது பெயர். காலம் தாழ்த்தாது விரைந்து அருள் மழை பொழிபவன் என்பதால் “காளமேகப் பெருமாள்” என்பது திருநாமம்.

இத்தலத்தில் பள்ளி கொண்ட பெருமாள் சன்னதியும் உண்டு. புலத்தியர் என்ற முனிவர் இத்தலம் வந்த போது பாற்கடலில் சயனித்துள்ள இறைவனைக் காணவேண்டி இத்தலத்தில் தவம் இருந்ததாகவும், அத்தவத்திற்கு மனமிறங்கிய இறைவன் காட்சி தந்து அருளியதாகவும் கூறப்படுகிறது.

குறுந்தொகை, அகநானூறு, மதுரைக் காஞ்சி, பதிற்றுப்பத்து ஆகிய நூல்கள் திருமோகூரைப் பற்றி பேசுகின்றன.

காளமேகப் பெருமாள்

காளமேகம் என்றால் கருமேகம் என்பது பொருள். காளமேகம் நீரை தன்னுள் வைத்துக் கொண்டு அதை மக்களுக்கு மழையாகப் பெய்விப்பது போல, இத்தல பெருமாள் “அருள்” என்னும் மழையை தருகிறார். இதனால் தான் இத்தல இறைவனுக்கு “காளமேகப் பெருமாள்” என்ற திருநாமம் உண்டானது.

கள்ளநித்திரை

தூங்குபவர்களை எழுப்பக் கூடாது!! அப்படியிருக்கும் போது தூங்குவது போல் நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்? இதற்கு பெயர் தான் “கள்ளத் தூக்கம்” என்பர். இத்தலத்தில் கள்ளத் தூக்கத்தில் பெருமாளுக்கு சன்னதி இருக்கிறது (எம்பெருமான் தான் குரும்புக்காரராயிற்றே!!!).

தேவர்கள் ஒருமுறை தங்களைக் காக்க வேண்டி இத்தல பெருமாளை தரிசிக்க வரும் போது தூங்குவது போல் நடித்தாராம் இந்த கள்ளர். ஏதுமறியாதவர் போல நடித்தாராம். தேவர்களுக்கு ஒரே பயம்!! ஏனெனில் தங்களின் குறையை பெருமாளிடம் முறையிடச் செல்லும்போது பெருமாள் தான் இங்கு தூங்கிக் கொண்டிருக்கிறாரே!! பின்னே எப்படி பெருமாளிடம் தங்கள் கோரிக்கையை சொல்வார்கள்?

சந்தா 2

சுவாமியின் நித்திரைக்கு இடையூறு செய்யாமல் ஸ்ரீ தேவி, பூமி தேவி தாயார்களிடம் தேவர்கள் தங்களது குறைகளைச் சொல்லி அவரிடத்திற்குத் திரும்பி விட்டனர். தாயார்களாலும் பெருமாளை எழுப்ப இயலாத நிலை!! பின்னே என்ன செய்வது என்று அறியாமல், தங்களின் மனத்திற்குள் பெருமாளை நினைத்து, தேவர்களுக்கு அருள் புரிந்து அவர்களைக் காக்க செல்லும்படி வேண்டினார்கள்.

மனதினால் அவரை நினைக்கும்போது எம்பெருமானால் எப்படி நித்திரை கொள்ள முடியும்? அல்லது நித்திரை கொள்வதுபோல் எப்படி நடிக்கத்தான் முடியும்? தாயாரின் மனதிற்கு மட்டுமல்ல.. நம் அனைவரின் மனதிற்கும் கட்டுப்பட்டவரல்லவா எம்பெருமான்?

அதனால் நித்திரை கொள்வது போல் நடிப்பதை விட்டு விட்டு தேவர்களைக் காக்க மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு அருள்புரிந்தார்.

இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள பெருமாளுக்குத் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சயனப் பெருமாள், தன் வலது கையைத் தலைக்கு வைத்து சயனித்திருக்கிறார். பாதத்திற்கு அருகில் தாயார்கள் இருவரும் கைகளைத் தாழ்த்தி வைத்து, பிரார்த்தனை செய்யும் கோலத்தில் காட்சி தருகின்றனர்.

இவர் “பிரார்த்தனை சயனப் பெருமாள்” என்ற திருநாமம் பெற்றவர். இந்த சன்னதிக்கு கீழே “திருப்பாற்கடல் தீர்த்தம்” இருப்பதாக ஐதீகம். பாற்கடலின் ஒரு துளி இதில் விழுந்ததால் இத்தீர்த்தம் இப்பெயரில் அழைக்கப்படுகிறது.

மோட்சம் தரும் பெருமாள்

திருமங்கையாழ்வார் அழகர் கோவில் அழகரையும், திருமோகூர் பெருமாளையும் இணைத்து “சீராறும் மாலிருஞ்சோலை திருமோகூர்” என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். நம்மாழ்வார் இறைவனை சரணாகதி அடைய வேண்டி பாடிய திருவாய்மொழியில் இத்தலம் பற்றிப் பாடியுள்ளார். இங்கு வேண்டிக் கொள்ள மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே, சுவாமிக்கு “மோட்சம் தரும் பெருமாள்” என்ற திருநாமமும் உண்டு.

மோட்ச தீபம்

சிவ பூஜைக்கு உகந்தது வில்வம். சிவனுக்கான தலங்களில் பிரதானமாக இருக்கும். ஆனால், பெருமாள் திருத்தலமான இங்கு வில்வ மரமே தலவிருட்சமாக இருக்கிறது.

இத்தல தாயாருக்கும் வில்வ அர்ச்சனை செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு திதி, தர்ப்பணம் செய்ய மறந்தவர்கள் இந்த காளமேகப் பெருமாளை வேண்டி, அரிசி மாவில் செய்த தீபத்தில் நெய் விட்டு தீபமேற்றி வழிபடுகின்றனர். இதை “மோட்ச தீபம்” என்பர்.

3, 5, 9 என்ற கணக்கில் தீபமேற்றலாம். சுவாமி சன்னதியில் தரும் தீர்த்தத்தைப் பெற்று உயிர் பிரியும் தருவாயில் இருப்பவர்களுக்குக் கொடுக்கிறார்கள். இதனால், அவர்கள் அமைதியான மரணத்தைச் சந்திப்பர் என்பதுடன், மோட்சமும் பெறுவர் என்பது நம்பிக்கை.

சக்கரத்தாழ்வார்

இத்தலத்தில் புராதானமான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கான உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதிதேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர், அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார்.

சிறப்புகள்

பெருமாள் பஞ்ச ஆயுதங்களுடன் காட்சி தந்து அருளும் திவ்யதேசம்.

திருமகள் பிராட்டி மோகூர்வல்லி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

நம்மாழ்வார் – 11, திருமங்கையாழ்வார் – 1, என 12 பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.

மங்களாசாசனம்

“நாமடைந்தால் நல்லரண் நமக்கென்று நல்லமரர் தீமை செய்யும் வல்லசுரரை
அஞ்சிச் சென்றடைந்தால் காமரூபங் கொண்டு எழுந்தருளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்!!!”

– நம்மாழ்வார்.

வழித்தடம்

மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடை என்ற இடத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.
அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோவில் திருமோகூர் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் எடுத்துரைத்தார்

Leave A Reply

Your email address will not be published.