ஸ்ரீரங்கம் தொகுதியில் யாருக்கு சீட்டு ; ரேஸில் யாருக்கு வெற்றி கிடைக்கும் ?

0
1

ஸ்ரீரங்கம் தொகுதியில் யாருக்கு சீட்டு ; ரேஸில் யாருக்கு வெற்றி கிடைக்கும் ?

ஸ்ரீரங்கம் தொகுதி தமிழக அரசியலை பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும் ஸ்ரீரங்கம் கோவில் இந்தியா முழுவதும் அறியப்படும் பிரபலமான கோவில்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் வாழை விவசாயம் மற்றும் பூக்கள் உற்பத்தி வணிகரீதியாக முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தொகுதி மாநகராட்சியின் 6 வார்டுகளையும் மற்றும் பெரும்பாலானவை ஊரக உள்ளாட்சி உட்பட்ட பகுதிகளையும் கொண்ட சட்டமன்ற தொகுதி இதுவாகும்.

2

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அவர் முதல்வராக இருந்த காலத்தில் 3,000 கோடி ரூபாய் செலவில் பல்வேறு நலத்திட்ட பணிகளை அந்த தொகுதியில் மேற்கொண்டிருக்கிறார்.

பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல, திருச்சி மாநகராட்சி 58 வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருந்த வளர்மதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது வளர்மதி தான் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாகவும் அமைச்சராக உள்ளார்.

இந்த தொகுதியில் முத்துராஜா, தலித்துகள் குறிப்பாக பள்ளர் மற்றும் உடையார், பெரும்பான்மை சமூக பிரிவாக உள்ளது.

அதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் பகுதிகளில் பிராமணர் ,கோனார், நாயுடு, வாக்கு வங்கியும் குறிப்பிட தக்க சதவீதம் உள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதி 145,562 ஆண்களையும், 1,55,182 பெண்களையும், 25 மூன்றாம் பாலினத்தவர்களையும் வாக்காளராக கொண்ட தொகுதியாகும்.

ஸ்ரீரங்கம் தொகுதியை கைப்பற்ற தமிழக அரசியல் கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் எந்த அரசியல் கட்சியின் சார்பில் யார் யாரெல்லாம் போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றனர் என்பதை பார்ப்போம் !

திமுகவைப் பொறுத்தவரை ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மேலும் தற்போதைய எம்எல்ஏவான அமைச்சர் வளர்மதியின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு இல்லை. என்பதால் கண்டிப்பாக வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் திமுகவினர் தொகுதியை கைப்பற்றும் நோக்கில் மும்முரமாக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

திமுகவின் சார்பில் பழனியாண்டி, ஆனந்த் ஆகிய இருவரும் ஏற்கனவே போட்டியிட்டு இருக்கின்றனர். ஆனால் இருவரும் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் முயற்சித்து வருகின்றனர். மேலும் பிச்சைமுத்து,  அந்த நல்லூர் யூனியன் சேர்மன் துரைராஜ், ஒன்றிய செயலாளர் கதிர்வேல் , மணிகண்டம் ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா ஆகியோரும் சீட்டை கைப்பற்றி விட வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

அதிமுகவை பொறுத்தவரை தற்போதைய எம்எல்ஏவாக இருக்கின்ற அமைச்சர் வளர்மதி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் பரஞ்ஜோதி மாவட்ட செயலாளராகிய பிறகு அமைச்சர் வளர்மதியின் செயல்பாடுகள் குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. பரஞ்சோதியும் ஸ்ரீரங்கத்தை கைப்பற்றலாம் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறாராம். இதனால் வளர்மதி வேட்பாளராக இருந்தாலே போதும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்.  தமிழரசியும் ஸ்ரீரங்கம் தொகுதியை கேட்டு வருகிறார். ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், கே.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோரும். மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பூனாட்சி, என்.ஆர் சிவபதி, கு.ப. கிருஷ்ணன் ஆகியோரும் இரண்டு தொகுதியை தலைமையிடம் முன்வைத்து ஒரு தொகுதியை பெற்றுவிடலாம் என்று காய் நகர்த்தி வருகிறார்களாம்.

மேலும் அதிமுகவினரை பொறுத்தவரை ஸ்ரீரங்கம் ஜெயலலிதாவின் பூர்வீகம் என்பதால், இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் கண்டிப்பாக அமைச்சர் ஆகிவிடலாம் என்ற செண்டிமெண்ட் லாஜிக்கோடு பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

அமமுகவின் சார்பில் மாநில கழக பொருளாளர் முன்னாள் சட்டமன்ற கொறடா மனோகரன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

பிஜேபி யை பொருத்தவரை மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தொகுதியை கைப்பற்றும் நோக்கத்தோடு நேரடியாக பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கட்சியில் சீனியரான மருத்துவர் ஒருவருக்கு பிஜேபி தலைமை சீட்டு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.

மற்றும் கட்சியில் புதிதாக இணைந்துள்ள தொழில் அதிபர் ஒருவர் ராஜாவை சந்தித்து சீட்டு கொடுத்தால் 10 சி வரை செலவு செய்கிறேன் என்று அழுத்தத்தைக் கொடுத்து வருகிறார். எப்படி இருந்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதி உடன்பாடு எட்டுவதைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படும் என்று கூறுகின்றனர் பிஜேபியினர்.

மக்கள் நீதி மையம் சார்பில் திருச்சியில் களமிறக்கப்பட உள்ள வேட்பாளர்களுக்கான முதல் கட்ட முன்னெடுப்புகள் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற, கமலஹாசனின் திருச்சி பிரச்சார சுற்றுப் பயணத்தின் போது வெளிப்பட்டது என்று கூறுகின்றனர் மையத்தினர்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் கண்ணன், ஸ்ரீரங்கம் தொகுதி செயலாளர் தீரன் கோபி, பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வேட்பாளருக்கான தேர்வு பட்டியலில் உள்ளார்களாம்.

மேலும் இந்தத் தொகுதியில் பட்டியல் இன மக்களை வேட்பாளராக களமிறக்க எந்த அரசியல் கட்சியும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வரக்கூடிய தேர்தலில் பட்டியலின மக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

மெய்யறிவன்

3

Leave A Reply

Your email address will not be published.