ஆருத்ரா தரிசனம்- திரு உத்தரகோசமங்கை

தமிழ்நாட்டில் சமயக்குறவர்கள் நால்வரால் பாடப் பெற்ற சிவாலயங்கள் 276 . இதில் முதன் முதலில் பாடப் பெற்ற சிவாலயம் என்ற பெருமைக்குரியது. உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் தான். அதனால் தான், எம்பெருமான் ஈசனும் உண்ணுவதும் உறங்குவதும் இந்த உத்தரகோசமங்கை கோவிலில் தான் என்பது ஐதீகம்.
இங்குள்ள நடராஜர் முழுதும் மரகத கல்லால் ஆனது. ஆண்டு முழுதும் அதனை சந்தனத்தால் காப்பிட்டு வைத்திருப்பர். ஆருத்ரா தரிசனத்திற்கு முதல்நாள் சந்தனக்காப்பு களையப்பட்ட மரகத நடராஜரை தரிசனம் செய்யலாம். திரு உத்தரகோசமங்கையில் தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் இயற்கையாகவே மென்மையானது. ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்க முடியாத தன்மை கொண்டது. “மத்தளம் முழங்க மரகதம் உடைபடும்” என்ற சொல்லிற்கு ஏற்ப, ஒலி ஒளி அதிர்வுகளில் இருந்து இந்த சிலையைப் பாதுகாக்கிறார்கள்.
ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை திருநாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் கலையப்பட்டு அன்று இரவே மீண்டும் சந்தனம் பூசுவது வழக்கமாக இருக்கிறது. உத்திரகோச மங்கை திருக்கோயிலில் இருக்கும் நடராஜருக்கு நாளை டிசம்பர் 29ஆம் தேதி சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மகா அபிஷேகமும், டிசம்பர் 30 காலை ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது. மரகத நடராஜராக காட்சியளிக்கும், மரகதக் கல், முதலில் வீட்டுக்கு உபயோகப்படும் படிக்கட்டாகவே இருந்துள்ளது என்பது ஆச்சரியமான உண்மை. இந்த கல்லை பரிசோதித்த மன்னரின் ஆட்கள் அது அரிதான பச்சை மரகதக்கல் என்பதை அறிந்து, அதன்பின்பே மரகத நடராஜர் சிலையை உருவாக்கினர்.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காலை 32 வகையான அபிஷேகங்கள் செய்யப்படும். 32 வகையான அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை நடைபெறும். அதன் பின் வேறு எங்குமே நடைபெறாத வகையில் சிறப்பாக ஒன்று நடைபெறும். அது என்னவெனில்? 32 வகையான அபிஷேகம் செய்ததும் சுவாமிக்கு பசி எடுத்து விடுமாம். இதனால் சுவாமிக்கு முதலில் நைவேத்தியம் சமர்ப்பிக்கிறார்கள். அதன் பின்பு அலங்காரம் நடைபெறும்.
உத்தரகோசமங்கை கோவில் கருவரையில், முதலில் ஐந்தரை அடி உயரம் கொண்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்து அதன் பின்பே கருவறையை கட்டி முடித்துள்ளனர் என்பது தான் ஆச்சரியம்.
