வேட்டியில் இருந்து பேண்ட்டுக்கு மாற்றிய கமலஹாசனின் திருச்சி நகர்வலம் ஒரு லைவ் ரிப்போர்ட் !

வேட்டியில் இருந்து பேண்ட்டுக்கு மாற்றிய கமலஹாசனின் திருச்சி நகர்வலம் ஒரு லைவ் ரிப்போர்ட் !
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் பரபரப்புகளும் சூடுபிடித்து வருகிறது. அரசியலைப் பொருத்தவரை திருச்சி என்றால் திருப்பு முனை என்பார்கள். அதன் அடிப்படையில் எந்த ஒரு மிகப்பெரிய அரசியல் நிகழ்வாக இருந்தாலும், அதில் திருச்சி பிரச்சாரம் முக்கிய பங்காற்றும். இந்த வகையில் 27. 12. 2020 அன்று தனது மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் திருச்சியில் தொடங்கினார்.

பிரச்சாரத்திற்காக சென்னையில் இருந்து விமானம் வழியாக திருச்சி வந்து அடைவார் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், திடீரென்று சென்னையில் இருந்து மதுரை வந்து இறங்கிய நடிகர் கமலஹாசன் பிறகு அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மோரைஸ் சிட்டியில் வந்து இறங்கினார்.

நடிகர் கமலஹாசன் பார்க்க அந்த இடத்தில் திருச்சி மட்டுமல்லாது, பிற மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருமளவில் குவிந்திருந்தனர். மேலும் உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய நடிகர் கமலஹாசனுடன் அவருடைய மகள் அக்ஸரா , மற்றொரு பெண் நிர்வாகிகள் வந்திருந்தனர்.
பிறகு ஹெலிபேட் வேளியின் உள் இருந்தவாறு வலம் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பிறகு தனது திறந்தவெளி வாகனத்தில் ஏறி அனைவருக்கும் கை காட்டியப்படி பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமலஹாசன்.
பச்சை உடையில் பசுமையான தோற்றத்தில் காட்சியளித்த கமலஹாசனை பார்க்க சாலையின் இருபுறமும் பொதுமக்கள் கூடியிருந்தனர். தொடக்கத்தில் ஸ்பீடாக கிளம்பி அவருடைய பிரச்சார வாகனம் பிறகு மெதுவாக சென்றது.

வாகனத்தில் தனது இருக்கைக்கு அருகே உள்ள கண்ணாடி திறந்து இருக்க, தனது இருக்கையில் அமர்ந்த படி இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வரும் நிர்வாகிகளுக்கு மெதுவாக வாருங்கள், ஹெல்மெட் அணிந்து வாருங்கள் என்று அறிவுரை வழங்கினார்.
மக்கள் நீதி மையம் கட்சியினர் தொடர்ந்த வாகனங்களிலும் ஆங்காங்கே அளிக்கப்பட்ட வரவேற்பிலும் பெருமளவில் இளைஞர் பட்டாளமே குவிந்து இருந்ததைப் பார்க்க முடிந்தது. இந்த இளைஞர்களும் அரசியலில் அடையாளமான வெள்ளை உடையும், வேட்டிக்கு பதில், வெள்ளை நிற பேண்ட்டும் அணிந்து தங்கள் தலைவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
சிகப்பு நிற பிரச்சார வேனில் வலம் வர, கமலஹாசனின் வேனுக்கு முன்பு இரு சிகப்பு நிற கார்களும், பின்பு ஒரு சிவப்பு நிற காரும், அதற்கு அடுத்தபடியாக கமலினுடைய வெள்ளைநிற காரும், பிறகு துணைத் தலைவர் மகேந்திரனுடைய காரும், அதற்கு அடுத்தபடியாக பொது செயலாளர் எம்.எம்.எம்.முருகனுடைய காரும் சென்று கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
மோரைஸ் சிட்டியில் இருந்து, விமான நிலைய சாலை வழியாக சென்று, விமான நிலையத்திற்கு எதிர்புறம் உள்ள வழியை அடைந்து, கே.கே நகர் வழியாக, சென்னை பைபாஸ் வழியாக டிவிஎஸ் டோல்கேட், சுப்ரமணியபுரம், வழியாகச் சென்று எஸ்ஆர்.எம் ஹோட்டலை அடைந்தது. ஹோட்டலில் வந்து இறங்கிய கமலஹாசனை வரவேற்க கூடியிருந்த கூட்டத்தினர். அவரை பார்த்த குஷியில் அவரோடு செல்ல முயன்றனர். அப்போது எஸ்ஆர்எம் ஹோட்டலின் முன்புற கண்ணாடி உடைந்தது.
அந்த ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வேடுத்து, பிறகு மீண்டும் தனது பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார் கமலஹாசன். மத்திய பேருந்து நிலையம் வழியாக வலம் வந்து, ரம்யாஸ் ஹோட்டலில் தொழில் முனைவோர்களை சந்தித்து தனது அரசியல் திட்டங்களை விளக்கி பேசினார். பிறகு தனது திறந்தவெளி வாகனத்தின் வழியாக பிரச்சாரத்தை மேற்கண்டபடி பாலக்கரை வழியாக மலைக்கோட்டை பகுதியிலும், அண்ணா சிலை பகுதியிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். பிறகு நம்பர் ஒன் டோல்கேட் வழியாக சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டு, பிறகு திரும்பி திருவரம்பூர் சென்றார் கமலஹாசன்.
கமலஹாசனின் பிரச்சாரப் பயணத்திற்காக மாநகர் முழுவதையும் மக்கள் நீதி மையத்தினர் ஒரு கலக்கு கலக்கி விட்டனர். பிரம்மாண்ட வரவேற்புகள், குழுமியிருந்த மக்கள் என்று நேற்றைய பொழுதை மக்கள் நீதி மையத்தினர் கோலாகலமாக கொண்டாடினர்.
