தமிழ்ப் பல்கலைக் கழகத்தை ஊழலிலிருந்து மீட்டெடுப்போம் : கமலஹாசன்

தமிழ்ப் பல்கலைக் கழகத்தை
ஊழலிலிருந்து மீட்டெடுப்போம் : கமலஹாசன்
மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் கொடுத்த தமிழ்ப் பல்கலைக் கழகத்தை ஊழலில் இருந்து மீட்டெடுப்போம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன், தஞ்சாவூரில் ஒரு தனியார் மண்டபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய கமலஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடுகளைக் ‘காப்பியடித்து’ திமுக தற்போது கிராமசபைக் கூட்டம் நடத்தி வருவதாக அக்கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கினார்.

“மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கிராமசபை கூட்டத்தை நடத்தினோம். வெற்றிகரமாக இருந்ததால் மற்றவர்கள் எங்களைப் பார்த்து அதுபோல் நடத்தி வருகின்ற்னர்,” என்றார் கமலஹாசன். “நேர்மை என்பது உங்களிடம் இருந்து வரவேண்டும்.
பிறகு எங்களிடம் இருந்து வரவேண்டும். அப்போது நடுவில் உள்ளவர்கள் தானாகவே மாறிவிடுவார்கள்,” எனக்கூறிய கமலஹாசன், விவசாயிகளின் தேவைக்கேற்ப மானியம் வழங்க வேண்டும். அரசின் தேவைக்கேற்ப மானியம் வழங்கக் கூடாது என்றார்.
அதன்பின்னர், ஒரத்தநாடு பகுதியில் பேசிய கமலஹாசன், தவறான அறிவுரைகள் சொல்லும் தலைவர்கள் மாற வேண்டும். விவசாயிகளை மதிக்கிற அரசு இருக்க வேண்டும் என்றார்.
“மழைக் காலங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மணிகள் மழையில் நனைந்து வீணானது. ஆனால், டாஸ்மாக் கடையில் உள்ள பாட்டில்களை பாதுகாப்பாக எடுத்துச் சென்று குடோனில் இவர்கள் வைத்துள்ளார்கள்,” என்றார் கமலஹாசன்.

அமமுக தலைமைநிலைய செய்தி போல் உள்ளது. செய்தி உள்வாங்கி வெளியிடவேண்டும். திருத்தம் மேற்கொள்ளவும்.