பல் இளிக்கும் டிஜிட்டல் திருச்சி, பளபளப்பாகப் போவது எப்போது.?

0
1 full

 

‘எங்கெங்கு காணினும் குப்பையடா’ என்றால் அது திருச்சி மாநகராட்சி பகுதிகளை தான் குறிக்கும். வழக்கமாக குப்பைகளும், சாக்கடையும் பெருகி கிடக்கும் பகுதியினை சேரிப் பகுதி என்பார்கள். ஆனால் தற்போது திருச்சி மாநகரமே சேரியாக உள்ளது.

“திருச்சி மாநகர பகுதி மக்கள் யாரும் இனி குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டாம். உங்கள் வீடு தேடி வரும் வாகனத்தில், குப்பைகளை கொடுத்துவிட்டால் போதும்” என கூறிவிட்டு, மாநகர தெருக்களில் வைக்கப்பட்டிருந்த இரும்பு குப்பை தொட்டிகள் அனைத்தையும் எடுத்து, எடை கடையில் போட்டு காசு பார்த்து விட்டது திருச்சி மாநகராட்சி நிர்வாகம். இந்த பொறுப்பான காரியத்தை செய்தது யாரென்றால், செல்லும் இடங்களில் எல்லாம் (திண்டுக்கல், திருச்சி, ஆவடி) ஊழல் புகாரை சுமந்த செல்லும், தற்போது சேலம் மாநகர ஆணையாளராக செயலாற்றும் ரவிச்சந்திரன்.

2 full

சரி போனவர் போகட்டும். இருப்பவர் என்ன செய்கிறார் என்று பார்த்தால், திருச்சி மாநகர மக்கள் சுகாதார சீர்கேட்டினால் செத்து சீரழிந்தாலும் பரவாயில்லை, ரிட்டையராகி போகும் காலத்தில், நிர்வாகத்தில் எந்த உருப்படியான காரியத்தையும் செய்வதில்லை என்ற முனைப்போடு மாதாமாதம் வரும் வரும்படியை வாங்கிக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறார் மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியம்.

திருச்சி மாநகராட்சியின் எந்த தெருவிற்குள்ளும், பகுதிக்குள்ளும் நுழைந்து வந்தால், அப்பகுதியின் சாலை ஓரம் குப்பை கிடக்கும். அதை ஆடு, மாடு, நாய்கள் உணவிற்காக கிளறித் தெரு முழுக்க பரவச் செய்திருக்கும். அப்பகுதியை கடக்கும் பொது மக்கள் ஒரு யு டர்ன் போட்டு, மூக்கைப் பொத்திக் கொண்டு செல்வார்கள். தேங்கிக் கிடக்கும் குப்பையினை நான்கைந்து நாட்களுக்கு ஒரு முறை டாடா ஏஸ் வண்டி மூலம், பொது மக்களிடம் பெற்ற பழைய சேலை, வேட்டி, போர்வை, சாக்கு உள்ளிட்டவைகளை கொண்டு, அள்ளி மூட்டை கட்டி எடுத்துச் செல்வார்கள்.

மத்திய அரசு, டிஜிட்டில் இந்தியா கனவுடன், இந்தியாவில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருச்சி மாநகராட்சியினை தேர்வு செய்ய, இங்கோ பழைய துணிகளை கொண்டு குப்பைகளை அள்ளும், ‘டிஜிட்டல் இந்தியா’ டிசைன் குறித்து பல முன்னணி தமிழ், ஆங்கில பத்திரிக்கைகளும் எழுதித் தள்ளிவிட்டன. ஆனால் எதற்கும் செவி சாய்க்காமல், தேமே என பத்திரிக்கைகளுக்கு அறிக்கை தருவதோடு தனது நிர்வாக செயல்பாடுகளை செய்து வரும் திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியனின் செயல்பாடுகளை கண்டால் மெய்சிலிர்க்கச் செய்யும்.

இருந்த இரும்பு குப்பை தொட்டிகளை அகற்றிவிட்டு, 100க்கும் மேற்பட்ட டாடா ஏஸ் வண்டியை வாங்கி, மாநகராட்சி கரூவுலத்தில் இருக்கும் காசை காலி செய்து, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத, கடன்கார மாநகராட்சியாக ஆக்கியதோடு நில்லாமல், தற்போது, நிர்வாகத்தில் காசு இல்லாவிட்டாலும், கடன் வாங்கி பேட்டரி வாகனத்தை வாங்க முனைப்பு காட்டி வருகிறார்கள் அதிகாரிகள்.

பேட்டரி வாகனத்தை வாங்குவதில் காட்டும் முனைப்பில் ஒரு சதவீதம் கூட நகரை தூய்மையாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு அதிகாரியின் மனதிலும் தோன்றவே இல்லை என்பது தான் வேதனையிலும் வேதனை.

பல் இளிக்கும் டிஜிட்டல் இந்தியா, உண்மையில் பளபளப்பாகப் போவது எப்போது.?

அதிகாரிகளின் இப்படி தொடர் அலட்சிய போக்கினால் ஆளும் கட்சியின் எதிரான மனநிலைக்கு மக்கள் மனநிலை மாறிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை !

– திருச்சி நேசன்

3 half

Leave A Reply

Your email address will not be published.