நாசா’விலிருந்து விண்ணில் பறக்க உள்ள தஞ்சை மாணவனின் சாட்டிலைட்!

0

நாசா’விலிருந்து விண்ணில் பறக்க உள்ள தஞ்சை மாணவனின் சாட்டிலைட்!

தஞ்சையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கண்டுபிடித்துள்ள உலகிலேயே மிகச் சிறிய செயற்கைக்கோள்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்தவர் ரியாஸ்தீன் (18). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் வடிவமைத்துள்ள உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோள் வரும் 2021-ம் ஆண்டு ஜுன் மாதம் அமெரிக்காவின் நாசா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

‘நாசா’ விண்வெளி மையமும் ‘ஐ டூடில் லேர்னிங்’ என்ற அமைப்பும் இணைந்து ‘க்யூப் இன் ஸ்பேஸ்’ என்ற விண்வெளி ஆராய்ச்சி போட்டிகளை நடத்தி வருகின்றன. கடந்த 2019-2020-ம் ஆண்டுக்கான போட்டியில் 73 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அப் போட்டியில் பங்கேற்ற ரியாஸ்தீன் வடிவமைத்த விஷன்-1, விஷன்-2 ஆகிய இரண்டு செயற்கைக்கோள்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன.

“இவ்விரு செயற்கைக்கோள்களும் தலா 37 மிமீ உயரமும், 33 கிராம் எடையும் கொண்டவை. இதற்கு ‘ஃபெம்டோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஃபெம்டோ என்றால் எடையில் சிறியது எனப் பொருளாகும். இது டெக்னாலஜி எக்ஸ்பெரிமென்ட்டல் செயற்கைகோள்,” என்கிறார் ரியாஸ்தீன்.

செயற்கைக்கோள் விஷன்-1 பாலி எதரி இமைடு அல்டம் 9085, விஷன்-2 பாலி எதரி இமைடு அல்டம் 1010 என்று சொல்லக்கூடிய தெர்மோ பிளாஸ்டிக் மூலம் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான மின் சக்தியை செயற்கைக்கோளின் மேற்புறத்தில் உள்ள சோலார் செல்களிலிருந்து பெறமுடியும். இதில் 11 சென்சார் பொருத்தப்பட்டு இருப்பதால், விண்வெளியில் இருந்து பல வகையான தகவல்களை அறியலாம். ராக்கெட்டில் ஏற்படும் காஸ்மிக் கதிர்களின் தன்மைபற்றி தெரிந்து கொள்ளலாம் என்கிறார் ரியாஸ்தீன்.

“விஷன்-1 செயற்கைக்கோள் நாசா மூலம் விண்வெளியில் செலுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2021 ஜுன் மாதம் நாசா விண்வெளி தளத்திலிருந்து எஸ்ஆர்-7 ராக்கெட் மூலம் விஷன்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதேபோல, விஷன்-2 செயற்கைக்கோள் ஆர்பி-6 என்ற தளத்தில் இருந்து ஆராய்ச்சி பலூனில் பறக்கவிடப்பட உள்ளது,” என்கிறார் ரியாஸ்தீன்.

Leave A Reply

Your email address will not be published.