2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஃபாஸ்ட் ஃபுட் கடை: அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு

2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஃபாஸ்ட் ஃபுட் கடை: அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு
பழங்கால ரோமபுரி நகரான ‘பாம்பேய்’ ( Pompeii )யில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய ‘துரித உணவகம்’; கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு, பாம்பேய் அகழ்வாராய்ச்சிப் பகுதியில் ஃப்ரஸ்கோஸ் எனப்படும் ஈரமான சுண்ணாம்புக் கல் மீது வரையப்படும் ஒருவகையான ஓவியங்கள் மற்றும் சுடுமண் பாத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எனினும், இந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி தான் அவை வெளி உலகத்துக்கு காட்டப்பட்டன.

டெர்மோலியம் என்றழைக்கப்படும் இத்துரித உணவகத்தில் மக்களுக்குச் சூடான உணவு வகைகள் மற்றும் பானங்கள் வழங்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இத்துரித உணவகத்தில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் கோழி, தலைகீழாக தொங்கவிடப்பட்டுள்ள வாத்து ஆகியவை காணப்படுகின்றன. எனவே இந்த துரித உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு கோழி மற்றும் வாத்து இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மேலும், பன்றி இறைச்சி, மீன், நத்தை, மாட்டிறைச்சி போன்ற இறைச்சிகள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் இப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாத்திரங்களில் காணப்படுகின்றன. கிபி 79-ல் வெசுவியஸ் மலையில் எரிமலை சீற்றம் ஏற்பட்டு அதில் வெளிப்பட்ட எரிமலைக் குழம்பில் பாம்பேய் நகரம் மூழ்கிப் போனது. எரிமலைக் குழம்பில் மூழ்கிப்போன பாம்பேய் நகரம் ஓர் அடர்த்தியான சாம்பல் அடுக்கால் மூடப்பட்டது. இச் சாம்பல் அடுக்குதான் பல காலமாக இந்நகரத்தை பாதுகாத்தது. எனவே இந்த பாம்பேய் நகரம் அகழ்வாராய்ச்சிக்கு முக்கிய இடமாக கருதப்படுகிறது.
நேபிள்ஸ் நகரில் இருந்து தென் கிழக்குப் பகுதியில் சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாம்பேய் அகழ்வாராய்ச்சிப் பகுதி தற்போது கரோனா தொற்றால் மூடப்பட்டுள்ளது. இந்த பூங்கா ஈஸ்டர் திருநாள் பண்டிகைக்குள் மீண்டும் திறக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. எரிமலைச் சாம்பலில் புதைந்து கிடக்கும் பாம்பேய் நகரத்தின் மூன்றில் ஒரு பகுதி இன்னும் அகழ்வாராய்ச்சி செய்யப்படவில்லை. இப் பகுதியை அகழ்வாராய்ச்சி செய்யச் செய்ய புதிய விஷயங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கடந்த மாதம்கூட பாம்பேய் தொல்பொருள் ஆய்வில், எரிமலைச் சாம்பலில் ரோமப் பேரரசின் ஆண்டான் – அடிமை உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
