லண்டனிலிருந்து திரும்பிய பெண் உள்பட 3 பேருக்கு கரோனா!

0

லண்டனிலிருந்து திரும்பிய பெண் உள்பட 3 பேருக்கு கரோனா!

லண்டனிலிருந்து திரும்பிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 3 பயணிகளுக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மூவருக்கும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் லண்டனிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 72 பயணிகள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 53 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3 பயணிகளுக்கு தொற்று நோய்க்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் கோவிந்தராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 3 பயணிகளின் ‘மாதிரிகள்’ மேல்பரிசோதனைக்கான புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், நோய்த் தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவரும் வல்லம் கரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

இங்கிலாந்து நாட்டிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்தவர்கள், அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துகொண்டு, தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதேபோல, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கை சுத்திகரிப்பான் பயன்படுத்துதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.