துறையூர் தொகுதி பஞ்சாயத்து 1 ; எந்தக் கட்சிக்கு வாய்ப்பு, யாருக்கு தொகுதி.?

0
1

துறையூர் தொகுதி பஞ்சாயத்து 1 ; எந்தக் கட்சிக்கு வாய்ப்பு, யாருக்கு தொகுதி.?

திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளை முழுமையாகக் கொண்டது துறையூர் தொகுதியாகும். இந்தத் தொகுதி முழுக்க முழுக்க கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கிய, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களையும் பிரதானமாகக் கொண்ட பரந்து விரிந்த தொகுதி. மேலும் இந்தத் தொகுதி திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரே தனி தொகுதியாக உள்ளது.
2006 மறு சீரமைப்புக்கு முன்புவரை உப்பிலியபுரம் பழங்குடியினர் தொகுதியாக இருந்தது, பிறகு துறையூர் தனித் தொகுதியாக பெயர் மாற்றம் கண்டது.

மேலும் திருச்சியின் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கக்கூடிய புளியஞ்சோலை, பச்சைமலை இந்தத் தொகுதியில் அமைந்துள்ளது என்பது தனி சிறப்பு.
துறையூர் தனித்தொகுதியில் 1962 முதல் 2 முறை காங்கிரசும், 6 முறை அதிமுக வும், 5 முறை திமுகவும் வென்றுள்ளது. இந்தப் தொகுதி தற்போது திமுகவின் கைவசம் உள்ளது. துறையூர் தொகுதி எம்எல்ஏவாக ஸ்டாலின் குமார் உள்ளார்.

2

இந்த தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில்1,05,943 ஆண் வாக்காளர்களையும், 112563 பெண் வாக்காளர்களையும், 10 மூன்றாம் பாலினத்தவர் களையும் வாக்காளர்களாக கொண்ட தொகுதி இதுவாகும்.

தற்போதைய எம்எல்ஏ ஸ்டாலின் குமார் மீண்டும் தேர்தலில் போட்டியிட திமுகவிடம் வாய்ப்பு கேட்க உள்ளார். மேலும் திமுகவின் மகாலிங்கம் வாய்ப்பு கேட்டு முயற்சித்து வருகிறார். அதுமட்டுமல்லாது கீதா செங்குட்டுவன், பரிமளா தேவி, போன்ற திமுகவினரும் தொகுதியை கைப்பற்றும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.இதில் யாருக்கு தொகுதி தொகுதியை கொடுக்கலாம் அல்லது கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கலாமா என்று திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அதிமுகவை பொறுத்தவரை துறையூர் தொகுதியை கேட்டு நிர்வாகிகள் ஏராளமானோர் காத்திருக்கின்றனர். அப்படியாக சரோஜா இளங்கோவன், தொடர்ந்து 3 முறை வேட்பாளராக நிற்க ஆர்வம் காட்டி நேர்காணல்களில் பங்கேற்றிருக்கிறார். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது சீட்டு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு நான்காவது முறை நேர்காணலில் பங்கேற்க தயாராக இருக்கிறார். மேலும் மைவிழி அன்பரசன், இந்திரா காந்தி, சகுந்தலா, அறிவழகன் விஜி, அறிவழகன் விஜயின் மனைவி மணியம்மை, வழக்கறிஞர் அன்பு பிரபாகரன், சோபனபுரம் திருப்பதி, பச்சப் பெருமாள்பட்டி மனோகரன் உள்ளிட்டோர் தொகுதியை கேட்கும் முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் அதிமுகவின் வேட்பாளருக்கான நேர்காணலில் பங்கேற்க தயாராக இருக்கிறார்களாம்.

திமுகவிற்குள்ளே தொகுதியைக் கைப்பற்ற போட்டி நடந்து கொண்டிருக்கக் கூடிய வேளையில் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் கிழக்கு பகுதியை கேட்கிறது. கிழக்கு தொகுதி கிடைக்காத பட்சத்தில் அடுத்த ஆப்ஷனாக துறையூர் தொகுதியை முன் வைக்க திட்டமிட்டு இருக்கிறது. துறையூர் தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸின் முக்கியத் தலைவர் தற்போது மாற்றுக் கட்சிக்கு சென்று விட்டதால், மாவட்டம் முழுவதும் வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனை நடைபெறும் என்று கூறுகின்றனர்.மேலும் காங்கிரஸ் கட்சியினர் துறையூர் தொகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு போஸ்டர் மூலம் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் துறையூர் தொகுதியை கேட்டு திமுக முதன்மைச் செயலாளர் இடம் கோரிக்கை விடுத்துள்ளது. கே. என். நேரு அவர்களின் கோரிக்கையை தலைமைக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்திருக்கிறாராம். அப்படி அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்திற்கு துறையூர் தொகுதி ஒதுக்கப்படும் பட்சத்தில் அதனுடைய நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் பொன் .முருகேசன் போட்டியிடுவார்.

மேலும் திமுகவின் கூட்டணியின் பிரதான கட்சிகளில் ஒன்றாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திருவரம்பூர் தொகுதியை கேட்க உள்ளதாம். இப்படி விடுதலை சிறுத்தைகளுக்கு ஒருவேளை தொகுதி ஒதுக்கும் பட்சத்தில் விசிகவின் தலைவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று விசிக நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும் சென்ற முறை போட்டியிட்ட சுஜா தேவி தொகுதியை கேட்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் துறையூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்றமுறை போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு துறையூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

அதிமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான பிஜேபி தனது வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டிருக்கிறது. மேலும் வேட்பாளராக களமிறக்க மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், என்ற பெரிய பெயர் பட்டியல் தேர்வுக்காக உள்ளதாம்.

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை பீரங்கி சுப்பிரமணியன் துறையூர் தொகுதியில் போட்டியிடுவாராம். மேலும் அவர் தொகுதி முழுக்க பிரபலமானவர் என்பதால் தேர்தல் களத்தில் முக்கிய ஆளுமையாக செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
மக்கள் நீதி மையம் துறையூர் தொகுதியில் போட்டியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.கட்சியின் ஒன்றியச் செயலாளர் அறிவுச்செல்வன் தொகுதியை தலைமை இடம் கேட்டு பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தொகுதிவாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறது. துறையூர் தனித் தொகுதி என்பதால் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று ஆலோசனை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறதாம்.

 

இவ்வாறு துறையூர் தொகுதியில் தங்கள் கட்சி வேட்பாளர்களை கொண்டு வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை சந்திக்கலாம் என்று பல்வேறு அரசியல் கட்சிகளால் திட்டங்கள் தீட்டப் பட்டிருக்கின்றன. ஆனால் காலமே பதில் சொல்லும் யார் வேட்பாளர்கள் என்று.

மெய்யறிவன்

3

Leave A Reply

Your email address will not be published.