திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி பஞ்சாயத்து 1; யார் வேட்பாளர், முழுமையான அலசல் !

0
1

திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி பஞ்சாயத்து 1; யார் வேட்பாளர், முழுமையான அலசல் !

திருவரம்பூர் தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி என்று அழைக்கப்படுகிறது. முக்கிய தொழிற்சாலைகள் மற்றும் அது சார்ந்த சிறு குறு நிறுவனங்கள் என்று திருச்சியின் தொழில் நகராக திருவரம்பூர் தொகுதி உள்ளது.

இந்த தொகுதியில் பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி, குவளக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தாளப்பேட்டை, அகரம், எல்லக்குடி, ஆலத்தூர், கிழக்குறிச்சி, கீழக்கல்கண்டார்கோட்டை, சோழமாதேவி, வாளவந்தான்கோட்டை, திருநெடுங்குளம், அசூர், எலந்தப்பட்டி, கும்பக்குடி, குண்டூர், சூரியூர் மற்றும் காந்தலூர் கிராமங்கள். மற்றும் திருச்சி வட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண்: 7, 27 முதல் 32 வரை மற்றும் 36 அதிக வார்டுகளையும், பாப்பாக்குறிச்சி, திருவெறும்பூர் (மாநகராட்சி), கூத்தப்பார் (பேரூராட்சி), கிருஷ்ணசமுத்திரம், துவாக்குடி (நகராட்சி), நாவல்பட்டு மற்றும் பழங்கணங்குடி. ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது திருவரம்பூர் தொகுதி ஆகும்.

2

திருவரம்பூர் தொகுதியில் 1967 காங்கிரஸ், 1971 – திமுக,1977 – அதிமுக, 1980 -அதிமுக, 1984 -அதிமுக, 1989 -சிபிஐ(எம்), 1991- அதிமுக, 1996-திமுக, 2001-திமுக, 2006-திமுக, 2011 – தேமுதிக, 2016 – திமுக ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது வெளியிடப்பட்டுள்ள விரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 1,38,346 ஆண்களையும், 1,43, 131 பெண்களையும், 52 மூன்றாம் பாலினத்தவர் களையும் வாக்காளர்களாக கொண்ட தொகுதி இதுவாகும்.

தொகுதியின் நிலவரங்கள் இவ்வாறு இருக்க, வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்த கட்சி யார் யாரை வேட்பாளராக நிறுத்த வாய்ப்புள்ளது என்ற தெளிவான அலசலைக் காண்போம்.

திமுகவைப் பொறுத்தவரை ஸ்டாலினின் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய வரும் உதயநிதி ஸ்டாலினின் உற்ற நண்பருமான மகேஷ் பொய்யாமொழி திருவரம்பூர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக உள்ளார். மு. க. ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கூறும்போது மகேஷ் பொய்யாமொழி க்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் எனக்கு அளிப்பதற்கு சமம் என்று கூறி வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் மகேஷ் பொய்யாமொழி வெற்றி பெற்ற சட்டமன்றம் சென்றார். தொகுதியின் ஆக்டிவான ஒர்க்கராக மகேஷ் பொய்யாமொழி இருந்தாலும்,   மகேஷ் பொய்யாமொழிக்கு தொகுதி மாற வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டதாம்.

இதன் அடிப்படையில் திருச்சி கிழக்கு அல்லது மணப்பாறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

மேலும் திமுகவில் திருவரம்பூர் தொகுதிக்கு கடும் போட்டி நிலவுகிறது. திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் கே. என்.சேகரன், மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் கருணாநிதி, காயம்பு, குண்டூர் மாரியப்பன், மற்றும் நவல்பட்டு விஜி ஆகியோர் திருவரம்பூர் தொகுதியை தலைமையிடம் கேட்டு, தொகுதியைக் கைப்பற்ற முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிமுகவும் திருவரம்பூர் தொகுதியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. மாவட்டச் செயலாளர் பா. குமார் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியை குறிவைத்து தேர்தல் பணியை தொடங்கி செய்து வருகிறார். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ ரத்தினவேல், ஜெயா பேரவை பவுன், ராவணன், கும்பக்குடி கோவிந்தராஜ், எஸ்.பி. பாண்டியன் ஆகியோரும் திருவெறும்பூர் தொகுதியை தலைமையிடம் கேட்டுள்ளார்கள். ஆனால் பா.குமார் தொகுதி முழுக்க தேர்தல் பணியை மும்முரமாக செய்து வருகிறார்.

திருவரம்பூர் தொகுதியில் இரண்டு பெரிய கட்சிகளின் உள்புற சூழல் இவ்வாறாக இருக்க, வேட்பாளருக்கான போட்டியில் திமுக,அதிமுகவின் கூட்டணியின் கட்சிகளை பார்ப்போம்.

திருவரம்பூர் தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி என்பதாலும், தொழிற்சங்கங்கள் வலுவாக இருப்பதாலும் இந்த தொகுதியில் கம்யூனிஸ்ட்களுக்கு தனி செல்வாக்கு உள்ளது என்றே சொல்லலாம். இந்தநிலையில் சிபிஎம் திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதனால் திமுக இடமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருவரம்பூர் தொகுதி ஒதுக்கும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய வேட்பாளராக, மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாதர் சங்கத்தின் முன்னணித் தலைவராக உள்ள வாசுகி, விவசாய சங்கத் தலைவர் முகமது அலி, மற்றும் இந்திய வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் லெனின் ஆகிய நிர்வாகிகளில் இருந்தே வேட்பாளர், தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

திமுக கூட்டணியில் திருவெறும்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முன்வைக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கும் பட்சத்தில் வேட்பாளராக புறநகர் மாவட்ட செயலாளர் இந்திரஜித் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

திருவரம்பூர் தொகுதியை திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் கேட்க வாய்ப்பில்லை. ஏனென்றால் ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு தொகுதியை கைப்பற்றும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

தேமுதிக திருவரம்பூர் தொகுதியில் (2011ஆம் ஆண்டு) சென்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தேமுதிக தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளது. இந்த முறை அதிமுகவிடம் இருந்து திருவரம்பூர் தொகுதியை தேமுதிக எதிர்பார்த்து உள்ளது.

 

தேமுதிகவிற்கு திருவரம்பூர் தொகுதி கிடைக்கும் பட்சத்தில் கொ. தங்கமணி அல்லது செந்தில்குமார் ஆகியோர் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.

மேலும் தேமுதிக தனித்து நின்ற போது கோ.தங்கமணி  போட்டியிட்டு 18,000 வாக்குகளை பெற்றார். அதனால் இவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பிஜேபி திருவரம்பூர் தொகுதியை, தனக்கான தொகுதிகள் லிஸ்ட் பட்டியலிலையே வைக்கவில்லையாம்.

அமமுக தனியாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் தொழிற்சங்கத்தை சேர்ந்த கலைச்செல்வன் அல்லது மாவட்ட பொருளாளர் திரிசங்கு ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று நிர்வாகிகள் கூறுகின்றனர்.

மக்கள் நீதி மையம் கண்டிப்பாக திருவரம்பூர் தொகுதியில் போட்டியிடும், என்றும் அதன் வேட்பாளராக கட்சியின் அமைப்பு மற்றும் சார்பு பிரிவின் பொதுச் செயலாளர் MMM என்று அழைக்கப்படக்கூடிய எம்.முருகானந்தம் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார். மேலும் இவர் தொகுதி முழுக்க தீவிர களப் பணிகளை செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய நிர்வாகிகள் சேர்ப்பு மற்றும் இளம் வாக்காளர்களை கவரும் வகையிலும் தொகுதி முழுக்க வெற்றி பெறும் நோக்கோடு MMM பணிகளை செய்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சி தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளது. திருவரம்பூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மாவட்ட தலைவர் அப்துல்லாசா அல்லது திருவரம்பூர் தொகுதியின் பொறுப்பாளர் சா. செல்வகுமார் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தம்பிகள் கூறுகின்றனர்.

திருவரம்பூர் தொகுதியை பொறுத்தவரை மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களே அந்த அந்த கட்சியின் வேட்பாளருக்கான தேர்வு பட்டியலில் உள்ளனர்‌.

இந்த தொகுதியைப் பொறுத்தவரை கள்ளர்களின் வாக்கு வங்கி எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு பட்டியலின மக்களின் வாக்கு வங்கியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-மெய்யறிவன்

3

Leave A Reply

Your email address will not be published.