சொர்க்கவாசல் திறக்கப்படுவது பற்றி புராணங்களில் கூறப்படும் கதை.

0
Business trichy

சொர்க்கவாசல் திறக்கப்படுவது பற்றி புராணங்களில் கூறப்படும் கதை

அவதார புருஷரான எம்பெருமாளுடன் போரிட்டு., அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி பெருமாளிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளி வரும்போது தங்களை தரிசிப்பவர்களும்., தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும்., அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக்கொண்டார். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஸ்வாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது.

Image

நவ திருப்பதி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் இரவில் திறப்பு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் அதிகாலையில் தான் திறக்கப்படும். ஆனால் நெல்லை மாவட்டம் நவதிருப்பதிகளில் ஸ்ரீவைகுண்டம்., வரகுணமங்கை (நத்தம்)., திருப்புளியங்குடி., இரட்டை திருப்பதி., பெருங்குளம்., தென்திருப்பேரை., திருக்கோளூர் ஆகிய கோவில்களில் வைகுண்ட ஏகாதசியன்று இரவு 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும்.

பின்னர் இந்த கோவில்களில் இருந்து மாலைகள் ஆழ்வார் திருநகரியில் உள்ள பன்னிரு ஆழ்வார்களில் முதல்வரான நம்மாழ்வார் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யப்படும். அதன்பின்னர் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு மறுநாள் (துவாதசி) காலை 5 மணி அளவில் ஆழ்வார் திருநகரி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

அதேபோல் ராமநாதபுரத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில்., வைகுண்ட ஏகாதசியன்று இரவில் தான் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

பகவத்கீதை உபதேசித்த தினம்

பாண்டவர்களுக்கும்., கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருஷேத்திர யுத்தத்தின்போது அர்ஜூனன் மனம் தளர்ந்து காண்டீபம் வில்லை கீழே வைத்து விட்டு போரிட மறுத்து விடுகிறான். வைகுண்ட ஏகாதசியன்று பகவான் கண்ணன்., அர்ஜூனனுக்கு (உலகிற்கு) பகவத்கீதையை உபதேசம் செய்த தினம் ஆகும்

தேவர்களும்., அசுரர்களும்., மந்தார மலையை மத்தாகவும்., வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தபோது அமுதம் வெளிவந்த நாளும் வைகுண்ட ஏகாதசி என்பது குறிப்பிடத்தக்கது.

தீபஜோதியில் ஜொலிக்கும் குருவாயூரப்பன் கோவில்

கேரளாவில் வைகுண்ட ஏகாதசியை விருக்ஷிக ஏகாதசி என்ற பெயரில் கொண்டாடுவர். குருவாயூரில் ஏகாதசி விழா 18 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது தீப ஸ்தம்பங்களில் விளக்குகள் ஏற்றி கோவிலை சொர்க்கலோகம் போல மாற்றி கொண்டாடுவர்.

ஏகாதசியன்று காலை 3 மணி முதல் மறுநாள் துவாதசி வரை கோவில் திறந்தே இருக்கும். ஏகாதசியன்று குருவாயூரப்பனை தரிசித்தால் சொர்க்க வாசலை மிதித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பரமபதம்

வைகுண்ட ஏகாதசியன்று பக்தர்கள் இரவில் பரமபதம் விளையாடுவார்கள். இந்த விளையாட்டின் போது ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கத்தை அடையலாம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் கீழே வர நேரிடும். ஏணி என்பது புண்ணியத்தையும்., பாம்பு என்பது பாவத்தையும் குறிக்கும்.

Rashinee album

புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கத்தை சென்று அடைவார்கள். பாவம் செய்தவர்கள் வாழ்க்கையில் கீழே இறங்கி இன்னல்களை அடைவார்கள் என்பதையே பரம பதம் விளையாட்டு வலியுறுத்துகிறது.

சொர்க்கத்தில் இடம்

வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமனை வழிபட்டால் இந்த பிராப்தி கிடைக்கும்; மறுபிறவி இல்லை என்கின்றன புரணங்கள். அன்று முழுவதும் விரதம் இருந்து, ஹரியின் நாமத்தை ஜெபித்து., நாராயணீயம்., ஸ்ரீமத் பாகவதம்., ஏகாதசி மகிமை., புருஷசூக்தம் போன்றவற்றைப் பாராயணம் செய்தால் அளவற்ற பயன் பெறலாம்.

ஏகாதசி நாள்., அதற்கு முதல் நாள்., மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் விரதமிருந்து., கண்விழித்து பெருமாளை வழிபட்டு துவாதசி பாரணை செய்ய வேண்டும். துவாதசியன்று நெல்லிக்காய்., சுண்டைக்காய்., அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

மாதத்திற்கு இருமுறை வரும் எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருக்கலாம். இயலாதவர்கள் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடித்தால் மஹாவிஷ்ணு சொர்க்கத்தில் இடம் தருவார் என்கின்றனர் முன்னோர்கள்.

ஏகாதசி விரத மகிமை

வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ் டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங் களைக் கடைப்பிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும்; மோக்ஷ ஏகாதசி என்றும்; பீம ஏகாதசி என்றும் இதற்குப் பெயருண்டு. பாற்கடல் நஞ்சினை ஈசன் விழுங்கியதால் நஞ்சுண்ட ஏகாதசி என்றும் கூறுவர்.

இவ்விரதம் இருப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். கல்வி., பதவி., புத்திர பாக்கியம் கிட்டும். நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பாவம் விலகும். மறுமையில் சொர்க்கம் கிட்டும். எட்டு வயது முதல் 80 வயது வரை இவ்விரதத்தை ஆண் — பெண் இருபாலரும் கடைப்பிடிக்கலாம்.

புராண கதை கூறும் விரதம்

கிருதா யுகத்தில் நதிஜஸ் என்ற அசுரன் மகன் முரன் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தினான். அதை விஷ்ணுவிடம் முறையிட்டனர். மஹாவிஷ்ணு முரனுடன் கடும்போர் செய்தார். போர் புரியும் சமயம் பகவான்., ஹிமாவதி குகையில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது முரன் மஹாவிஷ்ணுவைக் கொல்ல முயன்றான்.

அச்சமயம் மஹாவிஷ்ணுவின் 11 இந்திரியங்களில் இருந்தும் சக்தி உருவாகி., ஒரு சௌந்தர்ய தேவதையாக தோன்றி முரனை அழித்தாள். மஹாவிஷ்ணு எழுந்து நடந்ததை அறிந்தார். 11 இந்திரியங்களிலிருந்து தோன்றியதால் அவளுக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு., “உனக்கு என்ன வரம் வேண்டும்..?” என்றார்.
“இந்த நன்னாளில் எவர் விரதம் இருந்து தங்கள் நாமத்தை உச்சரித்து வழிபடுகிறார்களோ., அவர்கள் செய்த பாவத்தை விலக்கி வைகுண்ட பதவி தரும் சக்தியை எனக்குத் தாருங்கள்” என்றாள். அப்படியே திருமால் வரம் அருளினார். இப்படி உருவானதுதான் மார்கழி வளர்பிறை ஏகாதசி விரதம்

திருப்பதி கோவிலில்  வைகுண்ட ஏகாதசி விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி தசமியன்று இரவு ஏகாந்த சேவை முடிந்தவுடன் தங்கவாசல் மூடப்படுகிறது. பிறகு விடியற்காலை ஏகாதசியன்று சுப்ரபாதம் தொடங்கி மறுநாள் துவாதசி இரவு ஏகாந்த சேவை வரையிலும் திருவேங்கடவன் கர்ப்பக்கிரஹத்தை ஒட்டியுள்ள முக்கோடி பிரதக்ஷிண வழியை திறந்து வைத்திருப்பார்கள்.

ஏகாதசி., துவாதசி ஆகிய இரண்டு நாட்களும் திருவேங்கடவன் தரிசனத்திற்குப் பிறகு முக்கோடி பிரதக்ஷணம் வழியாக வெளியே செல்வார்கள். இந்த முக்கோடி பிரதக்ஷண நுழைவு வழியை வைகுண்ட வாசல் என்றும்., அந்த வழியை வைகுண்ட பிரதக்ஷணமென்றும் கூறுவர். வைகுண்ட ஏகாதசியன்று மூன்று உலகங்களிலும் உள்ள 3 கோடியே 50 லட்சம் புண்ணிய நிதிகளும்., தீர்த்தங்களும்., புஷ்கரணிகளும்., அனைத்து தேவதைகளும் திருமலையில் உள்ள சுவாமி புஷ்கரணியில்., சூக்ஷ்ம ரூபத்தில் குடிக்கொண்டிருப்பதாக ஐதீகம்.

சக்கரத்தாழ்வார் திருமலையில் வீதி உலாவாக சுவாமி புஷ்கரணிக்கு வந்து சேருவார். அங்கு அவருக்கு அபிஷேகம் ஆன பிறகு புஷ்கரணியில் பவித்ரஸ்நானம் செய்வர். சக்கரஸ்நானம் நடைபெறும்போது பக்தர்களும் புஷ்கரணியில் நீராடி வைகுண்ட ஏகாதசி விரத பலனை முழுமையாக அடைகிறார்கள்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.